ஜனன தின உதடுகள்

Published

14 ஜூலை, 2025

Topic

கட்டுரைகள்

புறக்கணிக்கப்பட்ட ஒரு செடி
தன் கொடியிலிருந்து ஒரு மலரை ஈந்துள்ளது
அதை சாளரத்திற்குள்ளிருந்து வியப்பதற்குள்
குதிரை வீரனான நண்பன்,கதவைத் தட்டி
லாயத்தின் வாசனையோடு தழுவினான்
எண்ணற்ற வாசனையுள்ள
நள திரவியங்கள் ஊற்றப்பட்டிருந்தது
தான் முன்பு ஆசையாக வளர்த்திய குதிரையொன்றின்
மரணத்தைச் சொல்லும் போது
நல்ல வேளை
குதிரை ஈன்ற  குட்டி போல கனைத்திருப்பான்
நான் வாயைப் பொத்தி கண்ணீரைத் துடைத்துவிட்டேன்
அக்கணம் அவன் வாய் ஏனோ குதிரை வாய் போலிருந்தது
பற்கள் எழுந்து கொண்டன 
பின்
நாங்கள் பசியுடன் நோயுடன் காதலுடன் காமத்துடன்
வாடகைக் குதிரைகள் 
சவாரி செய்யும் மெளன அலைகள்
திடீரென கொந்தளிக்கும் கடற்கரைக்குச் சென்றோம்
அக்குதிரைகளும் 
எங்கள் காதலைப் போலவும்
காமத்தைப் போலவும் நோய்மையடைந்திருந்தன
எனக்கென
குதிரைகளின் கடுமையான காதலை எழுப்ப வேண்டி
ராக்காலத்தில் ஊற்றப்படும் போதையின்
நற்தைலமெனச் சொல்லி
இடுப்பில் சொருகி வைத்திருந்த
அடர் காஃபி நிற போத்தலின் தலையைத் திருகினான்
என் தலை போலவே பதறிவிட்டேன் என்றதும்
கடற்கரை மணல் துகள்கள் ஒன்றோடொன்று
புணரப் பறந்து வெட்கப்படுமளவிற்கு
குதிரைக் கனைப்பில் நகைத்தவனிடம்
பகடியா என்றேன் .
இல்லையென்றவன்
புரவிகளின்  எச்சில் நீரென நுரை பொங்கிய
போத்தலிலிருந்த நீரை
என் தலையில் குளிர்க் குளிர ஊற்றினான்
அதை அவன் ஆன்மாவின்
தொல் கலயத்திலிருந்துஎடுத்து கொண்டு 
வந்திருப்பானென்று யூகித்தேன் 
எனக்கு யாரையாவது
முத்தமிட வேண்டும் போல் தோன்றியது
ஜனன தின விருந்தில்
என் உதடுகளோ போதையுற்று
இறந்த குதிரைகளின் உதடுகளாக உருமாறியிருந்தன



இந்த வருடப் பிறந்த நாள் தேதி திரும்ப வந்து சேர்ந்திருக்கிறது

வழக்குப்போல் இது வருடாந்திர சம்பிரதாயம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும் எல்லோர்க்கும் போல  கழிந்த ஞாபகங்களைத் தொகுத்துக்கொள்ள வசதியான ஓர் நாளாகவும் இருக்கிறது. வரலாற்றில் மாபெரும் நம்பிக்கைகளையும், புதிய உள் ஆற்றல்களையும் விட்டுச் சென்ற மகத்தான இலக்கிய ஆசான்களையும் கவிஞர்களையும் நன்றியோடு நினைத்துக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பம்

கை கூடி வந்திருக்கிறது.

என் பதினைந்தாவது வயதில் ‘பிறந்த நாள்’ என்கிற ஏற்பாட்டைப் பற்றி நான் அறிந்துகொண்டேன்.அப்போதெல்லாம் ஜனன தினத்தைக் கொண்டாடுபவர்கள் குறைவு. சுதந்திரமடைந்த முப்பதாண்டுகளுக்குள் பிறந்தவன் நான் என்பதாலும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த அதே சமூகத்தில், பல்வேறு பாகுபாடுகள் நிறைந்த அதே உலகத்தில் நான் என் அகத் துயரில் எல்லோரையும் போல வாழ்ந்தேன்.

என் தந்தை ஒரு .பழைய  பிரசித்த பெற்ற பஞ்சாலையின்  தொழிலாளி; நான் அவருக்கு மூன்றாவது மகன்.இந்திய தொழிலாளர் புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில இறுதி இரு தசாப்தங்களில்  பிரித்தானிய இந்தியாவில் நிகழ்ந்திருந்தாலும்  அக்கால இந்திய வரலாற்றில் கோவையில் ரங்கவிலால் பஞ்சாலையில் தான் தொழிலாளர் எழுச்சி தீவிரமாக நிகழ்ந்தேறியது. குறைந்த ஊதியம், பாதுகாப்பில்லாத பணிச்சூழல்,  அதிக வேலை நேரமென கடுமையான முறையில் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்தேறியுள்ளது  அவர்கள் நாளொன்றிற்கு  பனிரெண்டு முதல் பதினான்கு மணி நேரம் கடுமையாக  வேலை வாங்கப்பட்டனர்  1921ளிலிருந்து 1930 வரை நான் வசித்த கோவையில் ரங்கவிலாஸ் மில்லில் பல்வேறு போராட்டங்கள் நடந்தேறியுள்ளது, பஞ்சாலைத் தொழிலாளர் வரலாற்றில் அழிக்க முடியாத  ஆவணமாகவும்  இது பதிவு பெற்றுள்ளது.என் அப்பா இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தில பிறந்தவர்  அவர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நூற்பாலையில் தான் செலவிட்டார். ஓவர் டைம் என்கிற முறை பலவந்த நடவடிக்கையாக இருந்தது.  பஞ்சாலைக்கு அருகே நாங்கள் வசித்தோம். அவர் மில்லிலிருந்து இடைவேளைக்கு உணவு கொள்ள வரும்போது முகம் முழுக்க வியர்வை ஒழுகிச் சிந்த வருவார்;அது பெருமழைக்குப் பிறகு பெய்யும் சிறு தூறல்கள் வழிவது போலிருக்கும்.  அக்காட்சி என் மனதில் இன்னமும் ஓர் துயர ஓவியமாக நிலை பெற்றுள்ளது மற்றொன்று  அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத பிஞ்சு வயதில் இந்நோயின் தாக்கத்திற்கு ஆளான என் அப்பா வாழை இலையில் போடப்பட்டு இறைவனின் காருண்ய அபயத்திற்கு விடப்பட்டிருந்திருக்கிறார்  அவர் தப்பிப் பிழைத்தபோது முத்து முத்தான சிறு தழும்புகள் கொண்ட முகத்தைப் பெற்றிருந்திருக்கிறார்.  என் பால்யத்தில் அவர் குடித்துப் பார்த்ததில்லை  எந்தப் பழக்கமும் இல்லாதவர் திடீரென மதுப்பழக்கத்திற்கும் புகைப்பழக்கத்திற்கும் ஆளானார். அதன் பிறகு, குழந்தைகள் எங்கள் மூன்று பேருக்கும் நாங்கள் வளர்ந்து வரும் போது அவரிடமிருந்து அனுசரணையான நம்பிக்கைகள் கிடைக்கவில்லை.

என் தாய் எழுதப் படிக்கத் தெரியாதவள். குழந்தைப் பருவத்திலிருந்தே அவள் தன் மாமா வீட்டில் கொத்தடிமையாக இருந்தவள். அவள் தன் கால்வயிற்றுக் கஞ்சிக்காக தினமும் ஒன்பது எருமைகளை, அவற்றின் தீவனத்திற்காக எங்கெங்கோ ஓட்டிக்கொண்டு போக வேண்டிய சூழலில் பல ஆண்டுகளை கழித்தாள்.என் தாய் குழந்தைத் தொழிலாளி; அவள் ஒன்பது எருமைகளின் பசியைக் வழிப்போக்காக கண்டடைந்ததை தன் மாமாவிடம் காட்டிய பிறகே, கொடூரமான அத்தையிடமிருந்து பழங்கஞ்சி நீரை உப்பைத் தொட்டு பருக இயன்றாள். என் தாய் இப்போது பழைய ஞாபகங்களில் உந்தப்பட்டு கண்ணீர் விடும்போது, நான் அவள் அப்பழக்கற்ற சிரசின் வெண்ணிற கேசங்களை தடவியபடி, “அம்மா, விடுங்கள்; உனது கண்ணீரை நான் என் கவிதைகளில் உலகத்துக்குக் காட்டுவேன்” எனச் சொல்லித் தேற்றுவேன்.

அவளுடைய ‘புதிய’ உடைகள் அத்தையால் கிழிக்கப்பட்ட கரித்துணிக்கும் தூமைத்துணிக்கும் ஈடாக இருந்திருக்கின்றன. செருப்பணியாத பாதங்களுடன், என் தாய் தன் சிறுவயது நாட்களில் கந்தக வெயிலில் எருமைகளை ஓட்டிச் செல்லும் காட்சியை என் பிறந்த தினத்தில் இப்போதும் என் மனக்கண்ணில் ஒட்டியிருக்கிறேன்.சிறுவனாக இருக்கும்போது, ஒரு நாள் அம்மாவிடம் என் பிறந்த தேதி பற்றி கேட்டபோது “சாந்தா இறந்த மறுநாள் நீ பிறந்தாய்” என்றாள். “சாந்தா யார்?” என்று கேட்டதற்கு, இளம்பருவத்தில் அகாலமாக இறந்த பக்கத்து வீட்டுப் பெண்ணின் துயரமான கதையையும் சொன்னாள்;எனவே என் ஒவ்வொரு பிறந்த நாளிலும், அம்மா சொன்ன சாந்தாவின் துயரக் கதையையும் கடந்து செல்கிறேன்  நான் ஒருபோதும் கண்டிராத அம்மாவின் தோழி சாந்தாவின் கதை போல எத்தனையோ  பெயர் தெரியாத  சாந்தாக்கள் நம்மைச் சுற்றியும்  உள்ளனர்.  அப்பெண்களின் உலர்ந்த  நினைவுகளையும்,சொல்லாத பாடுகளின் துயரக் கதைகளையும் இன்றும் கூட ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். 

இந்த நேரத்தில் என் மூதாதைகளான பாட்டிகளின் கதைகளை சொல்லத் துவங்கினால் நீங்கள் கலங்கி  கண்ணீர் சிந்த நேரிடும் என்பதால்  சொல்லாமல் விட்டுசசெல்கிறேன். அம்மாவைப் பற்றியும் பாட்டிகள் பூட்டிகள் பற்றியும் நான் சில கதைகளை என் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். எத்தனையோ வாழும்  பிரபலங்களைத்தாண்டி நீங்கள் என் எழுத்தை வாசிக்க வேண்டும் என்பதால், நான் எழுதியவற்றை நீங்கள் வாசித்தறிந்திருக்க மாட்டீர்கள் என்பது கண்கூடு. துதிபாடிகளில்லாத சூழலில் வாழ்பவன் நான்;  என்னை நீங்களே கண்டுபிடிப்பது  மிகவும் துரதிஷ்டமானது.

என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு தற்காலத்தில் அப்படியொரு  சூழலுள்ளது  எழத்தின்படி இது ஜெர்மன் நாசிகளின் வதை முகாம்களுக்கு நிகரானது   நாங்கள் நவீன உலகத்தின் சுண்டெலிகள். உலகெங்கும்  எழுத்து வியாபாரம் என்பது பரந்த அளவில் அறிவு நிதிமயமாக்கம் தகவல் சேகரிப்பு இன்பத்துய்ப்பு அனுபவம் என்கிற படிநிலைகளில் பல்வேறு வட்டமாய்ச்  சுழல்கிறது. அனுபவாதம், இன்பவாதம், அதிகாரவாதம் கயநலவாதம் என்கிற கடடங்களையும் அது சுவீகரித்துள்ளது இக்காலத்தில்.எனது வாசகர்கள் மண்ணுக்கடியில் அடைகாக்கிறவர்கள் அல்லது அவர்கள் .

குழந்தைகளைப் போல ஆட்டு மந்தைகள் என்று வைத்துச் கொண்டால்

இங்கு வாசகன் என்பவன் யாரென்று கேட்டால் என்ன சொல்வீர்கள் என்பதையும் நானறிவேன் அவனுக்கு சொந்த புத்தியில்லை அவன் தேர்வில் இன்னமும்  ஒரு புத்தகத்தைக்கூட அவன் எடுக்கவில்லை.

அவன் ஒரு மடத்தன சோம்பேறி எதையும் படித்தறிய மாட்டான்

யார் வேண்டுமானாலும் அவனுக்கு ஆசான் ஆகலாம்

புனைகதையை பொறுத்த மட்டில் கழிந்த இருபது ஆண்டுகளில

என் இரு கதைத் தொகுதிகளிலும் எனது வேர் எங்கே என்று தேடி அலைந்து எழுதியிருக்கிறேன். பசியையும் ரத்தத்தையும் நான் நேரில் தரிசித்திருக்கிறேன். இச்சையின் அளவு எவ்வளவென்றும், முத்தத்தின் இனிப்பு எத்தனை நாழிகையில் மரணமடையுமென்றும் இன்று என்னால் சொல்ல இயலும். குடியும் லாகிரியும் ஒருவனை எந்த இடத்தில் வைத்து பலி கேட்கும் என்பதையும் அறிவேன். இப்போது என்னிடம் எதுவுமில்லை;  குடியும் புகையும்என் விருப்பத்தில்லை. காமத்தை குழந்தை போல  கள்ளமில்லாமல் பாவிக்கத் துவங்கிவிட்டேன்;  அநாதி முத்தமென்பது கவிநிலையில் சாகும்வரை துடித்தபடி இருக்கும்;முத்தம் ஆதிக்குடிகளின் முலைப்பால் நறுமணமுடையது முத்தம் ஒரு அதி உன்னதம்; அது பாஷைக்கு முந்தைய ஆதி வார்த்தை என்பதை நான் யாருக்கும் இத்தருணத்தில் சொல்ல வேண்டியதில்லை.என் வாசகர்களை நான் மரணத்திற்கு பின்பும் முத்தமிட வருவேன். 

நான் பிறந்த நாளை பிளக்ஸ்கள் வைத்து கொண்டாடும் பழக்கமில்லாதவன்.

பிற வழிபாடுகள், விருந்து வைபங்களிலும் எனக்கு ஆர்வமில்லை. கோடிக்கணக்கான இலைகளில் நானும் ஓர் வாடிய இலை அவ்வளவே. உண்மையில் ஒரு பிறந்த நாள் எல்லோருக்கும் எதை ஞாபகமூட்டும் ? கடந்தகால வாழ்க்கையின் நன்மை–தீமை பற்றி எண்ணிப் பார்ப்பதற்கும், இனி எஞ்சியுள்ள கருணையான தினங்களைக் கழிப்பதற்கும்  இந்த நாள் ஆழமான உள் யோசனைகளைப் பரிசாகத் தருமென நினைக்கிறேன். நமக்கு புத்துயிர் அளித்த இதே உலகத்தில் மகத்தான மனிதர்கள் தாங்கள் பிறந்ததிற்கு நியாயம் கற்பித்தே விடைபெற்றுள்ளனர்.அவர்கள் தங்கள் நாட்களை விரும்பிய இலக்குகளுக்காக கழித்திருப்பார்கள். தூரத்தில் தரிசிக்க வேண்டிய தணியாத  அந்த ஒன்றிற்காக தங்கள் பொன் மணித்துளிகளை விருப்பத்தினடிப்படையில் பேரன்புடன் தின்னக் கொடுத்திருப்பார்கள் . அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையை நமது பார்வைக்காக காலத்தின்  பரிசோதனைத் தட்டில் ஒரு உன்னதப் பரிசுப் பொருள்போல உள்ளன்போடு வைக்கிறார்கள்.

சாதனைகளுக்காகவோ, வெற்றி–தோல்விகளுக்காகவோ அவர்கள் வாழவில்லை. அவர்கள் எதற்காக வாழ்ந்தார்களோ, அந்த ஒளிதான் இனி வாழ விரும்புபவர்களுக்கு பாதையைக் காட்டுகிறது. அந்த ஒளி எங்கிருந்து வந்தது? — அர்ப்பணிப்பும், உயிர்கள் மீதான பேருணர்வும்  தணியாத தாகமுமே அவர்களை இயக்கியிருக்கிறது. இந்நேரத்தில் இலக்கியத்தில் எனது தமிழாசான் கோவை ஞானியை நன்றியோடு இங்கே சிரம் தாழ நினைத்துக்கொள்கிறேன். என் மொழியில் எனக்கு மூத்த கவிகளையும், என் சமகாலக் கவிஞர்களையும் ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.

கடந்த மூன்று தசாப்தங்களாக ஞாபகங்கள் பிறழ்ந்த, ‘மனம் பிசசிய’ கவிதைகளை அம்மாவின் கொத்தடிமை கைகள் வழி எழுதி வருகிறேன். ஒரு கவிதைக்காக நான் பல வருடங்கள் நிலைபெயர்ந்திருக்கிறேன்; சில கவிதைகள் திடீரென பெருமழைக் கீடாக பெற்றுமிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட வகையில்எழுத்து என்பது தனிமையின் உள் ரூபமாகவும், என் மனதின் நிழலாகவும் இருந்து வந்திருக்கிறது.

யாருடைய  வாழ்க்கையையோ தனதாக்கி|‘போலி செய்வது’ ‘ இன்னொருவரின் தோலை அணிவதற்குச் சமமென்றால் . தாக்கம்’ என்கிற பெயரில் தனக்கு சாதமான முறையில் வேறொருவரின் தலையை தன் தலையில் வெட்டி  ஓட்டுவது முண்டம் வேறு தலை வேறு கலை ஆகிவிடும் இதன் பலனாக கவிதையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டால் அதன் ஆன்மாவை ஆள் வைத்து தேட வேண்டி வரும் என்பதால் கவிதைக்குச் செய்கிற அநீதியாகி விடும். மொழியின் ஒரு பாவமும் அறியாத அதன் சூட்சுமத்தன்மைக்கு எதிராக முடிந்து விடும்   அவரவர் ‘மனமொழி’, அவரவர் ‘கவிமொழி’ என்பது என் நம்பிக்கை. சிறுவயதிலிருந்து சில ஆயிரம் தாள்களை கிழித்துக் கப்பல்விட்ட பின், இந்நாள் வரையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதும் வாய்ப்பை காலம் எனக்கு எவ்வாறுஅருங் கொடையாக நல்கியது அதற்காக நான் பிரபஞ்சத்தை இன்னுமொரு முறை தொழுது கொள்வேன்

இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்: 

1இன்னொரு போதிமரம் 1997

(சூழலியல் அரசியல் நீள் கவிதைகள்) 

 2கடல்முகம் (1999) — தரு 

3சாம்பல் ஓவியம் (2003) — அமுதம் 

4 எரியும் நூலகத்தின் மீதொரு பூனை

தேர்ந்தெடுத்த கவிதைகள்  (2005) — காலச்சுவடு 

5. பறவையிடம் இருக்கிறது வீடு (2008) — காலச்சுவடு 

6 மனம் பிசகிய நிறம் (2011) — மருதா 

7பசியை ரத்தத்தால் தொடுவது (2017) — நீட்சி 7. 

8 இலைகளின் மீது கண்ணீர் (2022) — படைப்பு 

9. பாலை நிலவன் கவிதைகள் (2023) — தன்னறம் 

10. கல்தனிமை (2024) — தன்னறம் 

11 நூற்றியெட்டு காலங்கள் (2025) — நீட்சி 

12. அவாந்தர வெளி (2025) — நீட்சி 

13 லியோனார்டு பாக்சினின் காகம் (2025) — நீட்சி

கவிதை உரையாடல்கள்: 

14கண்ணாடி வெளி

புனைகதைகள்: 

15எம்.ஜி. ராமச்சந்திரனும் கார்ல் மார்க்ஸும் (2010) — அனன்யா 

16 மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான் பூச்சி (2023) — நீட்சி

இரு தொகுப்பு நூல்கள்

கோணங்கியின் புனைவுரு  2022 (ரேச்சல் )

கத்தி வீசுபவர்   உலகப் புனைகதைகள் (2024 தன்னறம்)

இதழ்கள்: • ‘நீட்சி’ சிறுபத்திரிகை — 2010 (இரு இதழ்கள்) 

தனிமை வெளி’ — மூன்று இதழ்கள்

என் கவிதைகள் பெரும்பாலானவை பொதுவான வாசகர்களை அடையவில்லையென்பதற்கு, அக்கவிதைகள் தனிமையடைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என் அம்மாவைப் போல, என் அத்தையும் கொத்தடிமையில் இருந்தாள்; அவளும் நானும் ஒரு இடத்தில் எங்களின் அற்புதமான  பொன் ஆண்டுகளை இப்படி அழித்தோம். நான் எழுதுகிற கதைகளும் ‘கொத்தடிமைக் கவிதைகள்’ என்றே நினைக்கிறேன்; அவை காலத்தாலும் சூழலாலும் இன்னமும் விலங்கிடப்பட்டுள்ளன. என் கவிதைகளின் பொருட்டு, என் பெயர் பல்வேறு நேரங்களில் ஒரு சிறுபதிவில் திடீரென வந்து காணாமல் போவதும் ஆச்சர்யம்.எப்படி சந்தடி சாக்கில் நுழைக்கிறார்கள்; பின் அழிக்கிறார்கள்? . பல கவிதைகளை மறைக்கப்பட்ட இக்கால விமர்சன மேலாண்மைக்கு நான் நீண்ட காலம் என் வாழ்வு கடந்தும்  நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

என் கவிதைகளைப் பற்றிய முதல் பேச்சைத் தொடக்கிய இருவர்: கோவை ஞானி, விக்ரமாதித்யன்.

பல்வேறு காலநிலைகளில் தோழமைப் பாராட்டிய நண்பர்கள்: ரமேஷ் பிரேதன், லஷ்மி மணிவண்ணன், அ. மார்க்ஸ், கோமதி  சி மோகன் மருதா. பாலகுரு வசந்தாதேவி  பாதசாரி, தேவி  ச தேவதாஸ் தமிழவன் யமுனா ராஜேந்திரன், கால சுப்ரமணியம் வாசுதேவன் மாரிஸ் யவனிகா, கைலாஷ் சிவன், அமரர் வித்யா ஷங்கர்   கிருஷ்ணவேணி எஸ். சண்முகம், கோணங்கி, டி. கண்ணன், லதா ராமகிருஷ்ணன்   அப்பணசாமி யூமா வாஸுகி  எச் முஜிப் ரஹ்மான்  கீதாஞ்சலி  நந்தினி  வாசுகி ஜி எஸ் தயாளன் ஸ்ரீநேசன், தன்னறம் சிவராஜ் அமரன் ச.சீ சிவகுமார் பழநி பாரதி  அமரர் பொன்பரப்பி அமரன் நா முத்துக்குமார்  அமரன் மகரந்தன் அமரன் குமார் அம்பாயிரம் அமரர் அப்பால்

, கண்டராதித்தன், தேவேந்திர பூபதி, அமரன் ஸ்ரீபதி பத்மநாபா, சுதேசமித்ரன் அமரன் புட்சிகர இயந்திரம் மருத்தவர் சிவகுமார், முருக வேள் பாமரன் ஸ்ரீ ஷங்கர் மேகலா , .ஜாகீர் ராஜா, சாம்சன், லீனா, இரா. சின்னச்சாமி, ராஜன் ஆத்தியப்பன் சந்ரிகா வெளிரங்கராஜன், எம்.டி.எம். முருகபூபதி, நிக்கோலசு சாந்தி  பாளை மணிக்குமரன்,idadu ikkiyam  துறையூர் சரவணன், ரியாஸ் குரானா, சக்தி செல்வி சந்திரா தங்கராஜ்  மோகனா வியாகுலன், அமரர் ஃபாதர் ரவிந்தர்நாத்  வேஷ மேமே  தங்கம்மாள் ராஜம்மாள் சீதா தேவி புஷ்பா

தமிழச்சி தங்கபாண்டியன்,கனியமுது அமுதமொழி அறிவன்  எல் சுபத்ரா   மரபின் மைந்தன் முத்தையா, லதா அருணாச்சலம்  பெரிய நாயகி பொன் குமார் முகம்மது ஜியாவுதீன் என்கிற தமிழினியன் , ஆர். பாலகிருஷ்ணன், ஓவியர் சுப்ரமணியம் ஜோதி வேலாயுதம் பொன்னுசாமி  சஜி மோகனரங்கன், ஷாராஜ், கோவை லோகு, சிவக்குமார் தென்பாண்டியன், ராஜ்குமார், ரவி முருகானந்தம், பிரவீண் பஃ றுளி, , கார்த்திகை பாண்டியன், ஜார்ஜ் ஜோசப் அஜயன் பாலா கே.கே சுனில்  சபரிநாதன், துரை, ரிச்சர்ட் ஆனந்த, கனிமொழி ஜி., பீட்டர் ஜெயராஜ், விஜய மகேந்திரன், அமரர் நடேஷ் கோவில்பட்டி சிவகுமார், பாட்டாக்குளம் துர்க்கையாண்டி, எல்  சுபத்ரா  ராமலிங்கம், கமலக்கண்ணன் கே ஆர் பாபு மீனாட்சி சுந்தரம்  பழ சந்திர சேகரன் , அமரர்  ஃபாதர் சாமுவேல் விக்ரம் சிவகுமார், ஸ்டெல்லா, ஜெபி பெங்களூர் சீனிவாசன், பால் முகில் கெளதம் குவேரா, டேவிட் ரவீந்திரன்  டோனி, ப்ரெஸ்லர், சுமதி வள்ளுவன் அரசு எஸ் எம் சுரேஷ் கோவில்பட்டி குமார்

சந்திரசேகர் சிலம்பரசன், எஸ்தர் ரூபவதி மகன்கள் ரூபன் ஜெய் ,கெளதம் ஸ்டீவ் ,நிஷாந்த்,  மகள்  தான்யா ஏஞ்சலினா   ஆகியோரையும் இன்னும் பல நண்பர்களையும் நினைக்கும் போது ஜெயராமன் க

மறதி ஒரு மானுட பெருந்துயர் நான் சில பெயர்களை சிதறிய என்  ஞாபகத்தில் விட்டிருந்திருக்கக்கூடும் அவர்கள் யாரையும் என் ஆழத்தில் ஒதுக்கவில்லை  மறக்கவுமில்லை  நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

பைபிள் சங்கீதம் ஒன்றில் தாவீது “காரணமின்றி பகைக்கிறவர்களை” பற்றி ஆழ்ந்த கண்ணீரோடு எழுதியிருக்கிறார். இது ஒரு முக்கியமான ஆழ்மனப் பிரச்சனை: ஏன் காரணமின்றி பகைக்கிறார்கள்? மூன்றாம் உலக நாடுகளில் ஏழை எழுத்தாளனாய் வாழ்வதிலுள்ள நெருக்கடிகள் இப்போதையதைக் காட்டிலும் முற்காலங்களில் கொடுமையானதாய் இருந்திருக்கிறது. வாழ்வதிலுள்ள அலுப்பு, முகாந்­திரமில்லா பகைகளிலிருந்தே பிறக்கிறது: “யார் வீட்டிற்கும் தீ வைக்கவில்லை, சரிதான்; ஆனால் கொலைவெறியாய் பகைக்கிறார்களே!” இதற்கு மீறியது தான் — எழுத்து தன்னுள்ளே தனிமையுறையும் வாயிலாகவே உள்ளது. எதிரிகளும் நண்பர்களும் கொண்ட கண்ணுக்குத் தெரியாத சுழற்சி வட்டங்களில், கடந்து வந்த பாதையை யாரும் கண்டறியாத இருளில் கவிதைகளில் ஒளித்து வைத்துள்ளேன். அதீத மோப்ப சக்தியுள்ள வாசகன் இதை என் மரணத்திற்குப் பிறகு கண்டுபிடித்து

உலகிற்குச் சொல்வான்

எழுத்து என்கிற செயல் அறத்திற்கானது; அது தனக்குள் ஒரு சுயநேர்மையை கைக்கொண்டிருக்கிறது. அதனால்தான், அது பிரபல்யத்திற்கும் அதிகார அங்கீகாரங்களுக்கும் எப்போதுமே விலை கொடுப்பதில்லை. கூலி கொடுத்து கும்பிடு போடச் சொல்வதை ஒரு கவிதை தொகுப்பு பேசப்பட வேண்டுமானால் மண்டபம் எடுத்து கறி சமைத்துப் போட்டு கண்ணாடி போத்தல்களை குலக்கும் நிலையிலிருக்கும் எழுத்தாளர்கள் உண்மையில் பாவம், இதை விட கொடுமை விமர்சகர்களைக் கூலி கொடுத்து அமர்த்த வேண்டிய சூழலில் உள்ள மூன்றாம் உலக நாடுகளின் ஏழைக் கவிகளின் நிலை அதுவோ மார்பிலடித்து புலம்பியழும் பழங்கிழவிகளின் தொன்ம அழுகையில் பதுங்கியுள்ளது

கடந்த வருடம் என்னைத் திடீரென தளர்வடையச் செய்த உடல்நலம் என் பௌதீக இருப்பின் மீது ஒரு நிசப்த அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நொடிகளில் நான் என்னிடமே கேட்ட ஒரு கேள்வி: “நீ இன்னும் சில கவிதைகளை எழுதும் வாய்ப்பைப் பெறுவாயா?” அந்த வாய்ப்பு, என் அம்மாவின் பழைய கொத்தடிமை ரேகைகளிலிருந்து இதோ இன்னும் என் விரல்களில் உருண்டு செல்கிறது. காலம் கருணையோடு இருந்திருக்கிறது. உண்மையில் மரணப்படுக்கையிலிருந்துமீண்டெழுவது உடலுக்கு ஏற்றதெனினும் என் மனம் இந்த வாழ்வில்  உண்மையான வெகுமதி என்னவென்றும் கண்டடைந்து விட்டது

என் பிரார்த்தனை: வருமாண்டுகளில் புதிய நம்பிக்கைகள் வழங்கப்பட வேண்டும்என்பதல்ல — கடந்த ஆண்டுகளில் எத்தனை மேடு பள்ளங்களுக்கு இடையில் மீண்டேன் என்பதே. ஆனால், வாழ்வதற்கான புதிய நோக்கங்கள் சிருஷ்டிபூர்வமாக வளரவேண்டும். அந்த நோக்கங்களுக்கு ஏற்ற சூழலும் காலமும் இயற்கையளிக்க வேண்டும்  அதற்கு  இறைக் காருண்யமும் கூடி வர வேண்டும். சமகால நவீன  ஊடக தர்ம பரிபாலனங்களில்  நம்பிக்கை ஏதுமில்லை.செய்கூலி சேதார  மதிப்புரைகள், கல்லறை மௌன  தணிக்கைகள் காணிக்கை கையூட்டு விமர்சனங்கள், பாரதூரமான பரிந்துரைகள் , பக்கவாத . சுயசார்பிலமைந்த பரிந்துரைகள் — இவற்றைத் தாண்டி எது நிற்குமோ, அதுவே தானியம்; அதுவே கோதுமை மணி. எனக்கு மட்டுமல்ல  கவிஞர்கள் அனைவர்க்கும் கவித்துவ சித்தம்  கை கூடி வர வேண்டும்

நலம் சூழ வேண்டும் கடந்தாண்டு நான் நோய் வாய்ப்பட்டிருந்த சூழலில் நீங்கள் காட்டிய பரிவுக்கும் நான் வாழ்த்துச் சொல்ல மறந்த போதும் நீங்கள் என்பால் அன்புகாட்டிய இந்த நற்தருணத்திற்காகவும் உளப்பூர்வ ஆசிகளுக்காகவும்  வாழ்த்துமாலைகளுக்காகவும்  வணக்கங்கள் கழிந்த காலங்களில் உடன் வந்த உரையாடிய, எழுதிய அனைத்து தோழமையுள்ளங்களுக்கும்  நல் நன்றியும் அன்பின் வணக்கங்களும். உரித்தாகட்டும்

14 7 2025  திங்கள்

ஓவியம் அன்பு மகள் தான்யா ஏஞ்சலினா



©2025 பாலை நிலவன்

©2025 பாலை நிலவன்