ராகாப்

Published

27 ஜூன், 2024

Topic

கவிதைகள்

நிழல் உலகில் வாழும் கவிஞனுடன்
நிழல் உலக தாதா ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது
தாதா வெளியே தெரியாமல்
ரகசியமாக வாழ்ந்து வருவது போலவே
கவிஞனுடைய கவிதையும்
மஹா மர்மத்தில் ஒளிந்திருந்தது
தாதாவை கண்டுபிடிக்க இயலாமல்
புலனாய்வுகள் விழி பிதுங்குவது போலவே
கவிஞன் தன் கவிதையில்
பொதிந்து வைத்த ரகசியமும்
மஹா சிம்ம சொப்பனமாக இருந்தது
உள்ளூர் போக்கிரி தாதா ஆனது போலவே 
சாமான்யக் குடியானவனே கவிஞனாயிருக்கிறானென
நீட்ஷேவின் ஆவியுடன் வந்த பின் நவீன ஆய்வாளர்கள் 
ஒரு வழியாக கண்டு பிடித்தனர் 
உளவுத்துறை நிழல் உலக தாதாவை
சுட்டுப்பிடிக்க ஆலோசனை நல்கியது போலவே
கவிஞனுடைய கவிதையை
கட்டுடைக்க நவீன விமர்சகர்கள் முன் வந்தனர்
என்ன ஆச்சர்யம்
நிழல் உலக தாதாவை நெருங்க முடிந்தும்
தப்பித்து விடுவது போல கவிஞனும்
ஒரு சொல்லில் 
அதிகார பாசிசத்திற்கும் 
ஓர் அர்த்தத்தில் வலதுசாரி மத வெறிக்கும் 
தப்பிச் சென்றபடியிருந்தான்
வேறு வழியில்லாமல்
கவிஞனுடைய குலம் கோத்திரத்தை ஆராய்ந்தால்
ராகாப் வம்சத்தில் பிறந்திருக்கிறான்
அவனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால்
கவிஞன் நிஜத்தில் யாருடனும் பழகுவதில்லையாம்
நிழல் தாதாக்களுக்கு நிகரான
நிழல் காதலிகளுக்கு கவிதை எழுதியே 
மத்திய காலம் வந்தடைந்த அவன்
நிழல் உலக தாதா போலவே
யாருக்காக சம்பாதிக்கிறோமென்று தெரியாமலேயே
யாருக்காகவோ எழுதியிருக்கிறான்
விதியைப் பாருங்கள்
நிழல் உலக தாதாவை
நெருங்கி விட்டதாகச் சொல்லிய புலனாய்வுத் துறை
மழைக்காலத்தில்
ஜி. நாகராஜன்  ரகசியமாக நடமாடிய 
அதே குறத்தி முடுக்கின் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து
தேநீர் பருகிக் கொண்டிருந்த
கவிஞனுடைய தொண்டைக் குழியில்
படு கேவலமான துப்பாக்கி ரவையை
ஆட்காட்டி விரல் சுழுக்க அழுத்தியிருக்கிறது
ஒரே ரவையில் என்னவொரு சாதுர்யம்
நிழல் உலக தாதாவும் ஒழிந்தான்
நிழல் உலகக் கவிஞனும் இறந்தான்

#ராகாப்
பழைய ஏற்பாட்டு பைபிளில் 
வேசியாக குறிப்பிடப்படுபவள்

©2025 பாலை நிலவன்

©2025 பாலை நிலவன்