சிலந்தியின் வீட்டுக்குச் செல்ல ஒன்பது வழிகள்
Published
27 ஜூன், 2025
Topic
சிறுகதைகள்
இரவெல்லாம் பூச்சிகளின் ரீங்கரிப்பால் எனது அறை மிதந்து கொண்டிருந்தது. பூச்சிகளின் ஒலி இசை துணுக்குகள் போல கேட்டுக்கொண்டே இருந்தது. நான் இந்த ஒலியை என் பால்யத்தில்தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். நான் இந்த ஒலியை கேட்கும்போதுஎன்னையறியாமலேயே ஏதோ விநோத பூச்சியொன்றின் சிறகை என் முதுகில்பெற்றது போலஆனந்திப்பேன் பூச்சியினங்கள் மனிதன் தோன்றிய காலத்திற்கு முற்பட்ட அண்ட வெளியில் ஆதி உயிர்களாக சிருஷ்டி கொண்டு பறந்து அலைந்தே இங்கு வந்துள்ளன. அப்படி வந்த பூச்சியினங்கள் பெருவெளியில் இசையை லயமாக்கி பாடிக்கொண்டே பறந்து பறந்து மறைகின்றன.
சிலபோது கண்களுக்கு வெகு அண்மையில் அவை ஒருகுறுக்கு வெட்டாக பறந்து செல்கின்றன. அப்படி செல்லும் பூச்சிகள் திரும்பி வருவதில்லை. அப்பூச்சிகள் தங்களுக்கான செடியை எங்கோ ஒளித்து வைத்துள்ளதை நான் நினைப்பேன். இருந்த போதும் இந்தப் பூச்சிகளின் செடிகளை மனிதர்கள் விட்டு வைத்திருப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது பூச்சிகள் ஆதிகாலஉயிர்கள் என்பதிலேகூட எனக்கு வலுவான சந்தேகமுண்டு. அண்டவெளி கர்ப்பந்தரிப்பதற்கு முன்னே சூன்யமென்று இருக்குமானால் அந்த சூன்யத்தை சுற்றி பூச்சிகள் பாடித் திரிந்திருக்கலாமென்று நான் நம்புகிறேன். சூன்யத்தின் இடமும் இருப்பும் இல்லையென்றாகக் கூடுமானால் அந்த ஒன்று மில்லாமையின் ஒன்றில் எது இருந்ததோ அது ஒரு பூச்சியாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் நான் நம்புகிறேன். அந்த பூச்சியின் பூச்சிகள்தான் இந்த இரவிலும் ரீங்கரிக்கின்றன.
நான் இந்த பழங்கால யாருமற்ற வீட்டிற்கு வந்த பிற்பாடு எனக்கு வேறு எங்குமே போகத் தோணாதது இந்தப் ச்சியினங்களின் ஆர்ப்பரிப்புதான். அவை குரலின் ஒலியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆன்மாவை ஊதிவிடுகின்றன. பூச்சியினங்களுக்கு ஆன்மாவாவென்று சிலர் கேட்பதுண்டு, தான் தனது சுயகழிவுகளை எந்நேரமும் தியானித்துக் கொண்டு மனிதன் எங்கெல்லாம் காலடி வைக்கிறானோ அந்த இடம் அவனுக்காகவே உருப்பெற்றுவிடுகிறது. இது குரூர ஆக்கிரமிப்பென்று அவன் கருதுவதில்லை. தன் இருப்பிடம் தேடுதலில் புலிக்காடுகள் யானை மலைகள் சிங்கக் கெபிகள் பன்றிப் பள்ளம் நாய்களின் ஏரிகளும் தப்பவில்லை.
வழித்தடத்தில் பயணிக்கும்போதே அவர்கள் யானைகளின் காட்டை சூறையாடி இருப்பார்களென்று தெரிந்தது அப்படித்தான் நிகழ்ந்தது. யானைகள் தாகத்திற்காக பிளிறுகின்றன. மின் வேலிகளை கட்டி யானைகளின் குடிநீரை கேன்களில் அடைத்து விற்கிறார்கள். கோடை வெம்மை இரவில் தாகத்திற்கு ஓடிவரும் யானைகள்¦ முள் வேலிகளின் மின்சாரம் பட்டு கதிகலங்கி திரும்புகின்றன. இவற்றில் ஒரு சில யானைகள் தாகத்திற்காக மின்சார வேலியை தாண்டப் பார்த்து இறந்த வீழ்ந்து விடுகின்றன ஊனமான யானைகளுமுண்டு.
கடும் கோடையில் காட்டில் நீரின்றி மடியும் யானைகளுக்கும் பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் லகுடுகளுக்கும் தங்கள் குடல்மாலைகளோடு கூடிய பேருடலை அப்படியே தானமாக தந்துவிடுகின்றன. அங்கே பிற விலங்கினங்கள் பசியாறித் திரும்புவதை கிளைகளில் அமர்ந்துகொண்டிருக்கும் குரங்குகளும் பறவைகளுமே முதலில் அறிகின்றன.
காடுகளில் பூச்சிகளின் ஒலி ஜ்ஜ்வென்று உடலில் பாயாமலில்லை இந்த பூச்சிகளின் மென் அரவம் இல்லையெனில் கானகமே மயான அமைதியில் தன்னை பார்த்துக் கொணடிருக்க நேரும். பூச்சிகள் தங்களை அறியத் தருவதில்லை அவை ரகசியமான வெளியிலிருந்து இன்னொரு ரகசியமான வெளிக்கு பறக்கின்றன பூச்சிகளுக்கு கணமில்லை மிகவும் எடை குறைவான பூச்சிகள் எங்கேயிருந்து கானகத்தை வந்தடைந்தன. எண்ணற்ற வண்ணங்களிலுள்ள பூச்சிகள். அதில் ஓர் அடர் காஃபி நிற பூச்சியொன்றை அது பறக்கும்போது பார்த்தேன் என்னை அதன் நிறமும் அதன் குட்டியூண்டு முட்டைக் கண்களும் ஆச்சர்யங்கொள்ள வைத்தது. அவற்றின் கண்கள், மெல்லிய சிப்பி ஓடுகள் பேல இருக்க இருபக்க இறக்கைகள் கண்ணாடி இலையென பறக்க அமானுஷ்யத்தின் ரீங்கரிப்பில் ஒரு வட்டத்திற்குள் கோடிக்கணக்கான சுழல் பாதைகளை கண்டடைந்து வெட்டவெளியில் கண்ணுக்குத் தெரியாத ரகசியத்தில் களிக்கிறது. பூச்சிகளின் விளையாட்டுலகம் மேலும் சொல்லவியலாத மாயங்களால் நிரம்பியிருக்கிறது
ஒரு பூச்சியை வேறு வேறு வண்ணங்கொண்ட பிற பூச்சிகள் பறப்பதினூடாக துரத்தி வரும்போது அந்த காஃபி நிற பூச்சி ஒரு செடியின் இலையில் அமர்ந்து மறைந்து கொண்டது, திடீரென அப்பூச்சி மாயமானதை அறியாத துரத்தி வந்த பூச்சிகள் அங்கேயே வெட்டவெளியில் பாடிப் பறந்தன. அவற்றின் சங்கேத ஒலி குளிரூட்டப்பட்டிருந்தது. காஃபி நிற பூச்சியிடம் துரத்திவந்த பூச்சிகள் அவை தங்கள் சங்கேத ஒலியில் (அது அண்டம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பாஷையா அல்லது விசும்பு கருக்கொண்டு அணுப்பிளவில் உருவான பாஷையாஎன்பதை கணிக்கவும் இயலவில்லை) உரையாடியது என் செவிகளுக்கு புலப்படாத வார்த்தைகளில் நழுவிய அர்த்தங்கள் வெட்டவெளியிலேயே பறந்து சூன்யத்தில் மாயமானது.
காஃபி நிறப் பூச்சி செடியின் இலை மறைவிலிருந்து ரீங்கரித்து பறந்து மேலே மேலேயென்று பறந்து திரும்பவும் வேறொரு செடியில் அமர்ந்து கொண்டது அது அமர்ந்த இலை பச்சையென்றாலும் மாலை வெய்யில் பட்டு அது ரஸவாதமாகி வேறொரு பொன் பச்சை இலையாகியது. இந்த இலையில் அமர்ந்திருக்கும் காஃபி நிறப் பூச்சியை ஓர் உயர் ரக மைக்ரோ லென்ஸ் படம் பிடித்ததால் இப்பூச்சியின் ஓவிய உடல் சிருஷ்டிப்பின் மகத்துவ நிலையை தெளிவாக்கியது போலாகலாம்.
இப்பூச்சியை பார்த்துக் கொண்டிருக்கையில் தும்பிகள் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்தன. கோடைவெயிலின் வெம்மை சற்றே தணிந்து சாயங்காலத்தின் இதம் மெதுவாக கீழே இறங்குகிற தருணத்தில் எத்தனையோ வண்ணங்களில் தட்டான் பூச்சிகள் பறந்து அமர்ந்து, அமர்ந்து பறந்து விளையாடுவதைப் பார்ப்பது மாபெரும் வேடிக்கையாக இருந்தது. ஒரு ரோஜா பட்டாம் பூச்சி அதன் கருப்புநிற படபடக்கும் இறக்கைகளின் சிவப்பில் இரண்டு கண்கள் வரையப்பட்டுள்ளது. நான்கு கண்களுடன் கூடிய இரு இறக்கைகளும் ஒரு செடியின் இலையில் அமர்ந்துள்ளது. இந்த தட்டான்பூச்சி அந்த இலையுடன் எதையோ பேசுகிறது.
நான் ரோஜாவின் உரையாடலைக் கேட்க நினைத்தேன். செடியிடம் அது சொல்லும் மகத்துவம் என்னவென்றும் அறிய நினைத்தேன். அது ஒரு மோன நிலையில் மஹா நிஷ்டையில் அமர்ந்துள்ளது. அதன் உணர் கொம்புகள் ஆடாமல் அசையாமல் அவ்வண்ணமே நீண்டிருக்க திடுமென அச்செடி தட்டானிடம் என்ன சொல்லிற்றோ வெடுக்கென பறந்து இன்னொரு செடியில் அமர்ந்தது. அச்செடியில் வயலட் நிற மலர்கள் பூத்திருந்தன அம்மலர்களின் அடிவயிற்றில் இளநீலக் கொடிகளும் அதன் கீழ் மகரந்த மொக்குகளும் உள்ளுறைந்து மோனமாய் லயத்திருந்தது.
வேறு வேறு நிறத்தின் தட்டாம்பூச்சிகள் அக்கானகத்தில் பறந்தலைய நான் காட்டிற்கு வெளியே தன்னந் தனியான ஒரு பழங்காலத்து வீட்டின் மேல் விதானத்திலமர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தட்டாம்பூச்சிகளின் நிறங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களில் மனம் உள்ளிறங்கிக் கொண்டிருந்தது. எத்தனை வியப்பிலாழ்த்தும் வண்ணங்களின் வரிசையிது. ஆச்சர்யத்திற்கும் சிருஷ்டிப்பிற்கும் நடுவே நானொரு மனிதப் பிராணியென்றெண்ணி துயறுற்றேன் எனது கவலைகளும் லௌகீக துயருள்ள இந்தப் பாடுகளும் என்னைப் பார்த்து கேலி பேசியது போலிருந்தது.
இன்னொரு தட்டாம்பூச்சி அடர் காஃபி நிறம் ,இன்னொன்று கரும்பச்சையில் சிவப்புப் பூவுடன், மற்றொன்று இளநீலத்தில் வரிக்குதிரைக் கோடுகளுடன் அதற்கடுத்தது வெள்ளை வெளேர் பரிசுத்தம், அடுத்து தங்க ஜரிகையுடைய கருநீலம், அதற்கடுத்து இளம் பச்சையில் காவி நிற பொட்டுகளுடன் அதில் வேறு வடிவுடைய சாம்பலில் கருங்கோடுகளுடன் இது போதாதென்று தூய நீலத்தில் நான் பார்த்திராததும் இன்னெதென்று வரையறுக்கக் கூடாததுமான ஒரு நிறத்தில் நட்சத்திரப் புள்ளிகளுடன் சில செடிகளில் பூக்களின் அடி மடியில் வண்டினங்கள் போதையுற்ற கால்களில் நகர்வதும் நிற்பதுமாய் தங்கத்தில் நீல உடல்பெற்று ஜொலிக்கும் ஒரு வண்டு, கருத்த உடலில் சிவப்பு, பழுப்பு முக கவசம் பெற்ற ஒரு வண்டு, பச்சை உடலில் செம்பவள புள்ளிகளுடன் சற்றே உருத்திரண்ட மற்றொன்று. இன்னும் பெயர் தெரியாத பூச்சிகளின் வண்ணங்கள் கானகத்தை பல நிறங்களில் வழியும் கனவுக்குள் கடத்தி வைத்துள்ளது.
நான் ஒரு புனைகதைக்காக இங்கு எழுத வந்தவற்றை விட்டு விட்டேன்.
பழங்கால தேக்கு மேசையில் இரண்டு வைன் போத்தல்களில் நான் கொஞ்சமும் பருகவில்லை. அவ்வப்போது ஜன்னலிலிருந்து கானகப் பரப்பை விட்டேத்தியாக பார்ப்பதே போதுமென்றிருந்தது.
என் பேனாவிலும் எழுத முடியாத வியப்புகளையும் மர்மங்களையும் நான் ரகசியமாக கண்டானந்திப்பதே ஒரு பெருவரம் போலிருந்தது.
தெருக்களில் பறவைகள் வேறு தலையை சிலுப்பி கழுத்தை வெடுக் வெடுக்கென வலதும் இடதுமாய் திசைகளில் சுழல அமர்ந்துள்ளன.
மரங்களில் நான் வகைகளை தேடவில்லை ஆனால் இந்த மரங்கள் கனவில் நடப்பட்ட ஓவியங்களென்றுதான் தோன்றுகிறது. மாமரங்களிலும் கொய்யா சப்போட்டா மரங்களும் வாதுமை தேவதாரு மரங்களும் பார்வையை குளிரப்படுத்துகின்றன இன்னும் பெயரிடப்படாத மரங்களும் அவற்றின் இலைகளும் மனதை பரவசத்திற்குள் ஆழ்த்த நான் பார்க்காத பறவைகளின் கீச்செலிகளோ நான் எழுதுவதற்கு இனி ஒன்றுமிலலையென சொல்லாமல் சொல்வது போலிருக்கிறது.
ஒரு பறவை மாமரத்தின் கிளையில் அமர்ந்துள்ளது. அது தூய கடல் நீலத்தின் அடியாழ ஸ்படிக தன்மையில் தன் இறக்கைகளைப் பெற்றுள்ளது அது என்னைப் பார்த்து விட்டது.
அதன் நினைவில் நான் யாரென்று அறியக்கூடவில்லை.
அப்பறவையின் ஞாபகம் அவற்றின் நிழலில் பதிந்துள்ளதென்று மனிதப் பிராணி நான் அறியவில்லை. இந்த இடத்தில் பிராணி என்று சொல் மனிதன் என்ற சொல்லோடு சேரும்போது அது இழிவாக தோற்றந்தருகிறது. மனிதனை ஒரு சல்லிப் பயலென்று கண்டதற்காகவே நான் இங்கு ஜி. என்னை தொழுவேன்.
பறவைகளின் பூச்சிகளின் ஞாபகங்களை கனவுகளில் மட்டுமே அறியமுடியும் போல; பூச்சிகள் விடாது ரீங்கரிக்கின்றன கானகத்தில் பூச்சிகளின் ஒலி செடிகளை தருக்களை எவ்விதம் உணர வைக்கின்றது. ராவெல்லாம் பூச்சிகளின் பாடல்களை கேட்கும் செடிகள் தங்கள் ரேகைக் கோடுகளில் புதிய வண்ணங்களை பூசிக்கொள்ள தீ விரிக்கின்றன. எத்தனையெத்தனை செடி கொடிகள் காற்று வீசும்போது கானகம் ஒரு கணம் எழுந்து அமர்வது போல ஓர் உள்ளுணர்வு. பூச்சிகளின் இறக்கைகள் மெல்லியதாய் அடித்துக் கொள்ளும்படி காற்று படபடக்கின்றது. காற்றிலேறி படடாம்பூச்சிகளும் தும்பிகளும் பறக்கும் வெட்டவெளி தூய மனத்தால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது இயற்கையென்பது மனிதத் தலைப்பில்லா பெருங்கருணையான இடங்களிலுள்ளதென்று கண்டேன்.
பட்டாம்பூச்சிகளோடு தும்பிகளோடு பறக்க வேண்டி பழைய ஓடிய அக்கால பால்யமிகு கால்கள் துடிதுடித்தன.
பறவைகள் இன்னும் தங்கள் ஒலிகளை மறைக்கவும் ஒளித்து வைக்கவில்லை அவை காட்டைமேலும் அழகாக்குகின்றன. நீண்ட பச்சைச் இறகுள்ள கிளியின் செம்பவள வளைந்து கூர்ந்த அலகு. அதன் மாதுளைக் கண்களும் திரும்பத் திரும்ப என் கண்களில் ஒளியூட்டுகின்றன. ஒரு மரங்கொத்தி தன் நீள அலகை வெளியே காட்டி மரப்பொந்தில் மறையவும் இருள் சாயங்காலத்தினுள் தன் முதல் திரையை கீழிறக்கியது.
பூச்சிகளின் ஒலி கூடுதலாக கூடுதலாக ஒரு பேரிசை வனத்தை மூடுவது போலிருந்தது. ஜீவராசிகளின் குரலொலி மேலும் வலுக்க சாம்பல் வண்ணத்தில் விரிகிறது காடு எனக்கு இந்த ஒயினை அருந்த வேண்டும் போலிருந்தது வெக்கையில் அடிக்காத இத்தாகம் சாயங்கால சாம்பல் ஆகாயம் நோக்கி பீறிடுகிறது.
நான் ஒயின் போத்தல் மூடியைத் திறந்ததும் ஒரு வாடை அது அரபுத் திராட்சைகளின் மணமாக வேறு கனிகளின் பண்டைய கால நிலத்தடி மணமுமாக இருந்தது. அதிலிருந்தது. அறையே திராட்சை ரஸத்தால் பிழியப்பட்டது போலத் தோன்றியது. உறைந்த குருதியின் செம் மண் நிறமும் கிளர்ச்சியூட்டியது. ஒரு புல் போத்தல் ஒயின் ஒரு குவார்ட்டருக்கு சமானமென்று பேராசிரியர் நண்பரொருவர் ரகசியம்போல் சொல்லியிருக்கிறார்.
முதல் தம்ளர் கசந்த புளிப்பின் சுவையோடு அடி நாக்கில் இனித்து உள்ளிறங்கியது. இந்த ஒயின் குறைந்தது ஒரு கால்நூற்றாண்டேனும் மண்ணடியில் பதுங்கியிருந்திருக்க வேண்டும். கப்பர்நகூமில் ஏசு செய்த அற்புத பழைய திராட்சை ரஸம் பருகியிருப்பவர்களில் ஒருவரும் இப்போது உயிரோடு இல்லை. நான் அருந்தும் திராட்சை அதுபோன்று ஒரு விநோத சஞ்சலம் நிறைந்த தோற்ற மயக்கத்தை உண்டாக்கியது. மூன்று தம்ளர் ஒயின் பருகியதும் எனக்கு தூக்கம் வரும் திரைச்சீலை தெரிந்தது-.
என்னை இவ்வீட்டில் விட்டுச்சென்ற லாசரு மாலையில் மாட்டிறைச்சி கறித்துண்டங்களையும் கோதுமை ரொட்டிகளையும் வெண்ணெய் புட்டியையும் கொடுத்தனுப்பி இருந்தான் வெந்து தணிந்த அவித்த முட்டைகள் நான்கும் அவ்வளவாய்க் குளிர்ந்திருந்தன. இதைக் கொண்டுவந்த இளைஞனிடம் நான் இரண்டு முட்டைகளை நீட்டியபோது “உங்களிடம் எதுவும வாங்கக் கூடாதென்று லாசரு மாமா சொல்லியிருக்கிறார்” என்றான்.
“பரவாயில்லை ஒரு ரொட்டியேனும் என்னோடு பிட்டுத் தின்றுக்கொள்ளுங்களேன்” என்றதும் மர நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.
நான் தம்ளரில் எத்தனை முறை ஒயினை நிரப்பினேன் என்று தெரியாது சாய்ந்திருந்தேன். ஒருவேளை நிரப்பவே இல்லையோ என்னமோ தூக்கம் கலைந்து நான் லேசாக கண்களைக் கசக்கி நோட்டம் விட்டபோது யாரையும் காணோம். இரண்டு ஒயின் போத்தல்களும் திறக்கப்பட்டு காலியாகியிருந்தது.
ரொட்டித் துண்டுகள் தீர்ந்துவிட்டன. எனக்கு பசிக்கவில்லை. ஆகவே நான் உணவு கொண்டிருக்கிறேன். தாகத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொண்ட பிறகு ஆழ்ந்த தூக்கத்திற்கான அசதியின் சமிக்ஞைகள் புலப்பட்டது; பழைய பாக்கி வைத்துள்ள தூக்கம் தற்போது சமயம் பார்த்து கண்ணிடுக்கில் ஒளிந்து கொண்டிருக்க அயர்ந்து கொண்டிருந்தேன்.
ஜன்னலுக்கு வெளியே மின் மினிப் பூச்சியொன்று தன் பச்சை ஒளியுடலில் மிதக்கிறது. அதன் ஒலி என் செவிச் சவ்வுகளை பற்றி இறங்குகிறது.
தவளைகள் பாடுவது கேட்கிறது ஒருதாளத்தை மாற்றி மாற்றி இடுவது போன்ற தவளைச் சப்தம். இரவைத் துளையிடும் அரூப ஒலி. சமீபத்தில் ஒரு இரவில்.நான் இருளான பாதையில் தனியாக நடந்து வந்தபோது என் நிழலுடன் வந்த அதே தவளையொலி. தவளைகள் பாடும் இரவுகளை பாஷோவின் கவிதைகளில் படித்திருக்கிறேன். பெரும்பாலும் அவை மழை விட்டபின்னிரவாக இருக்கும். பின்னிரவுகள் மனிதப் பிராணிகளுக்கு அச்சமூட்டுபவை. குழந்தைகள் கிறீச்சிட்டு எழும்போது பூனையொன்று தொட்டிலில் தாவி அந்தப் பக்கம் இறங்கியிருக்கும். இப்படி வந்த ஒரு பூனை என் சிறிய நூலகத்தில் படுத்திருந்து விட்டுப் பின்னிரவில் மாடியிலிருந்து கீழே பறந்து தாவி மறைவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. அப்படி ஒருநாள் அது ஜன்னலிலிருந்து வெளியே பாயும்போது அது திடுமென ஒரு சாம்பல் பறவையாகிவிட்டது. அது சாம்பல் புள்ளிப் பூனைதான்.
மழை வருவதற்கு முன்பே மழையுடன் பேசத் துவங்குகிற தவளைகளை காட்டுப்பாதைகளில் காணக் கூடலாம் மழைவீட்ட அதிகாலைகளில் பல பிரதேசங்கள் பல தார்ச் சாலைகளிலும் எண்ணற்ற தவளைகள் மல்லாந்த நிலையில் மரணித்துக் கிடக்கின்றன. வாகனங்கள் அவற்றின் மீது பின்னிரவில் ஏறியடங்கிய தடயம்மழை ஈரத்தில் அழிந்தும்கூட தவளைகளின் பின்னிரவு பாடல்களில் மரண அழுகை தீராமல் ஒலித்தபடிதான் உள்ளது.
அப்பாலில் கண்கள் சொருகியதும் மிகப்பெரும் தட்டானின் மீது பறந்து கொண்டிருந்தது யாரென்று அறியக்கூடவில்லை.
பெரிய இறக்கையுள்ள பட்டாம்பூச்சி அதனுடலும் அவ்வாறே இரண்டு மூன்று மனித உடல்கள் சேரும் வடிவத்திலிருந்தது .பட்டாம்பூச்சி மீது ஒரு மனித சல்லிப்பயல். அவனுடைய முகம் தீக்காயங்களின் தழும்புகளால் கோடிடப்பட்டுள்ளது. அவனுடைய கண்களின் ஒளியை காண இயலவில்லை பேரொளி. அவன் புஜங்கள் வலுவேறி விரிந்த நெஞ்சில் ஒரு பூச்சி வரையப்பட்டிருந்தது. அது எட்டுக்கால் பூச்சியென்று நான் யூகித்தேன். இரு புஜங்களிலும் இறந்த தவளைகள் பச்சை குத்தப்பட்டிருக்கக் கண்டேன். நெஞ்சுக்கு நடுவே ஒரு சர்ப்பம் படமெடுத்தபடி பச்சை குத்தியிருந்தவன் தாடி வளர்த்தியிருந்தான் பூச்சிகள் தலையில் கிரீடமாக ஊர்ந்து கொண்டிருக்க அவன் தலைமீது ஒரு ஆந்தை தன் மொட்டை விழிகளுடன் அமர்ந்திருந்தது. வலுவான தொடைகளில் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன அது பச்சை குத்தியலிருந்து வந்தவைகளாகத் தோன்றவும் அவன் வயிற்றைக் கவனித்தேன். அது துவாரமாக திறந்து விடப்பட்டிருந்தது.
அதில் ஒரு மரங்கொத்தி எட்டிப் பார்க்கவும் செய்தது. அவன் ஒரு ஆதிவாசி பழங்குடியின தலைவன் போல தோன்றினான். தோளில் ஒரு மரத் தண்ணீர் பை தொங்கிக் கொண்டிருந்தது. கீழுடம்பை வாதுமை இலைகள் கொண்டு மறைத்திருந்தான் அவன் கழுத்தில் முகத்தில் நெஞ்சிலென்று பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்க அவற்றுடன் ஒரு விநோத பாஷையில் பேசவும் செய்தான் பூச்சிகள் வெவ்வேறு குரலொலிகளுடன் ஆர்ப்பரித்ததும் அவை ஏதோ சங்கேத ரீங்கரிப்பில் அவனுடன் உரையாட அவன் பறந்து செல்கிறான்.
ஆகாயத்திற்குள்ளே விரிவுகள் அங்கே பாறைகளும் நீர்ப்பரப்பும் தெரிகிறது. நீரில் பறவைகள் மீன்களாக நடிப்பதைப்போன்று நீந்துகின்றன. அவற்றின் இறக்கைகள் விசிறியாக விரிந்துள்ளன. சில இதுவரை பார்க்காத ஜீவராசிகள் நீர்ப்பரப்பில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
நாம் இதுகாறும் பார்த்த கற்பாறைகளைவிட மிகவும் பெரிய கூழாங்கற்கள் வசீகரித்தது.
சமீபத்தில் புனித தாமஸ் மௌன்ட்டில் கண்ணாடி பேழைக்குள் பாதுகாக்கப்படும் பாலைவன கூழாங்கற்களைப் பார்த்தேன் சீடர்களினுடைய பாதச்சுவடுகளும் பட்ட மறை கற்களென்று புனிதப்படுத்தி சீலிட்டுள்ளனர்.
அக்கற்களில் பழங்காலத்தின் வெய்யிலும் நிழலும் ஒரு கணத்தில்ஊடாடிச் சென்றுள்ளதைப் பார்த்தேன். கண்டேன். குருதியில் நனைத்தெடுககப்பட்டு மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட ஏசுவின் துண்டுபட்ட உடலிலிருந்து வெட்டப்பட்ட, சிறுசிறு பாகங்களாக அக்கற்கள் காட்சிக்கு வந்ததாக இருக்கலாம். போர்ச் சேவகர்கள் ஏசுவை அக்கற்கள் கொண்டு அடித்திருக்கலாம். அல்லது மக்களை ஏவி அவர்களிடம் இக்கற்களை கொடுத்து அடிக்கப் பணித்திருக்கலாம். இயேசுவின் முகரூபம் சிதைக்கப்பட்டு அவருடைய தாடை இக்கற்களால் உடைக்கப்பட்டிருக்கலாம். அவருடைய ரத்த சகதியான முகம் வீங்கி நெற்றி புருவ மேடுகள் கற்களால் கொடூரமாக தாக்கப்பட்டதை இக்கற்கள் நினைவுபடுத்துகின்றன. அதே கற்கள்தான் பெரிய பெரிய யானை உருவில் அமர்ந்துள்ளது. பெரும் பாறைகள் முடிவில்லாமல் மேக மார்க்கமாய் போய்க்கொண்டே இருப்பதாகத் தோன்றியது அப்பாறைகள் மீது வெட்ட வெளியில்பூச்சிகள் தங்கள் குரலை ரீங்கரித்து பாடிக் கொணடிருந்தன. இப்பூச்சிகளை நான் பார்த்ததில்லை. மனித, மிருக, வடிவிலுள்ள சிறு பூச்சிகள் விவரிக்கவியலாத கற்பனையான ஒரு இடத்தில் மனிதன் பூச்சியாக பறப்பதை என்னால்நம்ப இயலவில்லை.
பாறைகள் மிதந்து இளகிக் கொண்டிருந்தது மிதக்கும் பாறைகள். உயர்ப்பரப்பே மிதந்துகொணடிருந்தது அங்கு எல்லோரும் நித்தியத்தில் மனித பூச்சிகளை நான் ஒரு விளையாட்டாக எண்ணத் துவங்கினேன். என்னால் அது கூடவில்லை. எண்ணிலடங்கா மனிதப் பூச்சிகள் மிதந்தலைந்தன. மிதக்கும் பாறைகளில் ஒரு காவிய அமைதி சூழ்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட அமைதியை நேரில் கண்டவர்கள் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மிகப்பெறும் பட்டாம்பூச்சியின் பழங்குடி மனிதன் திடீரென குரலிடுகிறான். அது ஒரு ஒலி. அந்த ஒலி காற்றில் பரவியதும் பூச்சியினங்கள் கூட்டமாக ஒன்றுகூடி ஒன்றுக்கொன்று ரீங்கரிப்பில் லயித்தபடி பறந்து வருவதைப் பார்த்தேன். கூட்டமாக வந்த பூச்சி வரிசை பட்டாம்பூச்சி மனிதனின் வயிற்று துவாரத்திற்குள் உட்சென்று மறைவதை கண்டதும் யாரோ கதவை திறக்கும் கி¦ருச் ஒலிகேட்டு கனவிலிருந்து திடுமென வெளியே விடப்பட்டவனாகினேன்.
லாசருவின் மனைவி சாப்பாட்டுக் கூடையுடன் லேனா வந்திருக்கிறாள். இரண்டு நேந்திரன் பழங்களும் இரண்டு தேங்காய் புட்டும், கடலைக் குழம்பும் காலை உணவுக்காக கொண்டு வந்திருக்கிறாள். லாசருவைப் போல லேனாவை ஒரு தீவிர வாசகியாக சொல்ல இயலவில்லையெனினும் அவன் குறிப்பிட்ட நூல்களை படிக்கவே செய்தாள். அவர்களுக்கு குழந்தைகள் பிறக்காதது மட்டுமே மிகவும் பெரும் விசனமாக இருந்தது. நாங்கள் ஒரு குழந்தைக்காக சதா காலமும் காத்திருந்தோம். இனி காலமே முடிந்துவிடும்போல வென்று ஒருமுறை அவள் கண்ணீரால் நிறைந்த நாளை நான் நினைத்தேன் அவளுக்கு நாற்பது வயதுதான் இருக்கும் நீ ஏன் ஒரு குழந்தையை தத்து எடுக்கக் கூடாது என்று கேட்டும் விட்டேன்.
அவள் உதடடை பிதுக்கி தலையை அப்படி செய்ய முடியாதென்று ஆட்டினாள். எனக்கு அது பரிதாபமாக இருந்தது. லோன சைக்கிளில்தான் இங்கு வருவாள். லாசரு இறைச்சிக்கடை வைத்திருக்கிறான் நான் இங்கு வரும் நாட்களில் பொதுவாக அவன் காலை வேளைகளில் வருவதில்லை. ஒரு சில மாலைகளில் மட்டுமே அவனால் என்னுடன் உரையாடலுக்கு வர இயலும் அவனோடு என்னால் சரிசமமாக மது வருந்தவும் இயலாது. வரும்போது மிலிட்டரி ரம் புல் போத்தலை வாங்கி வருவான். உடன் குருமிளகிட்ட வறுத்த மாட்டிறைச்சி வருவலோ. அல்லது கோழி காடையென்றோ அவன் பையிலிருக்கும்.
எனக்கு இரண்டு லார்ஜ்கள் போதுமென்றாலும் விடுவதில்லை சமீபத்தில் வாசித்த கதைகளைப் பேசுவதில் ஆர்வமதிகம் அவனுக்கு, அவன் எதையுமே எழுதுவதில்லை பிறர் கதைகளில் தனது கதையை பொறுத்தி மறைந்தபடி வாழ்கிறவனாகவே தென்பட்டான். குழந்தைகளில்லாததால் லேனா நான் புத்தகம் வாசிக்கும்போதுகூட உள்ளுக்குள் சிணுங்கிக் கொண்டே வீண் விதாண்டா வம்புக்கு வருவாள். படிக்கும் புத்தகத்தைப் பிடுங்க முற்றத்தில் எறிந்து 'குழந்தை பெக்க வக்கில்ல படிப்பு வேற' என்பாளென்று அவன் சொன்ன நாளில் தான் அவன் மீது எனக்கு பிரியம் அதிகமாயிற்று.
'அண்ணா நான் போகட்டுமா' என்றபடி நின்றவளுடன் நான் படியிறங்கினேன்.
லேனாவின் நீல வண்ண சைக்கிள் காலைவெய்யில் பட நின்றிருந்தது. நீல சைக்கிளுக்கு சாம்பல் நிற இருக்கை அழகாகத்தானிருந்தது. கேண்டில் பார் கைப்பிடிகளுக்கு நடுவே ஒரு அழகிய தகரக்கூடை அது ஊதா நிறத்திலிருந்ததால் தனியாக தெரிந்தது.
ரிம் சக்கர வட்டத்தில் ஓர் ஆச்சர்யத்தைப் பார்த்தேன். சிலந்தியின் அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய நூல் இழைகளில் பின்னப்பட்ட வலை. வார்த்தைகளில் வடிக்க இயலாத சிறு சிறு சதுர கோர்ப்புகளுடன் அழகிய வட்டமாக விரிந்து கனவில் பூத்த ஒரு அபூர்வ நூல் மலராக இருந்தது. அந்தச் சிலந்தி தன் சிருஷ்டிப்பில் லயித்து லயித்து தன் வாழ்விற்கான வட்ட உயிர் பரப்பை ஒரு சைக்கிள் சக்கரத்தின் ரிம் கம்பிகளில் எவ்வளவு அழகாக கட்டியுள்ளது என்று வியந்ததும் நான் லேனாவிற்கும் அதை காண்பித்தேன். அவள் அதைக் கண்டதும் ஏதோ பதற்ற முற்றளாய் திடீரென்று கீழே ஒடிந்து கிடந்த குசசியையெடுத்தாள்
பின் மனம்பிசகியவள் போல ஒரு படு தீவிரமான வட்டச் சுழற்சியில் சிலந்தியின் அற்புத வீட்டை அந்த ஒடிந்த குச்சி கொண்டு தாறுமாறாகக் கலைத்தாள்
நான் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. ஏதோ விபத்தில் சிக்கிக்கொண்டு உயிருக்கு அபயமிடுபவன் போல உணர்ந்தேன்
அந்தக்கணம் பெயரிடப்படாத ஒரு பூச்சி என்னை கடந்து ரீங்கரித்துப் பறந்தது எனக்கு அப்பூச்சியிடம் அழவேண்டும் போலிருந்தது.