

எதற்கெடுத்தாலும் அந்தக் காலத்தை இழுப்பவர் ஒரு பாவப்பட்ட காதலனிடம் நீயெல்லாம் என்ன மயிரைக் காதலிக்கிறாய் அந்தக் காலத்தில் நாங்கள் பாலை நக்குகிற பூனையைப் போல ஒருவருடைய இதயத்தை ஒருவர் நக்குவோம் என்றிருக்கிறார் இந்தக் கால காதலனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது பின் இந்தக் காலத்தில் என்ன இழவுக்கு வாழ்கிறீர்கள் உங்கள் பழைய காலத்துக்கே திரும்பிப் போய் சாக வேண்டியதுதானே என்றிருக்கிறான் அந்தக் காலத்துக்காரரின் கண் கலங்கிவிட்டது கிழகு தட்டிய அந்தக் காலத்தை தன் பழைய கருப்பு வெள்ளைக் கண்களால் தேடினார் அத்தருணம் அலையும் மேகத்தில் தன்னந் தனியாக ஒரு பறவை அந்தக் கால மேகத்தில் இந்தக் கால சிறகுகளுடன் பறந்து கொண்டிருந்தது அந்தக் காலத்துக்காரர் நினைத்தார் இரு காலங்களின் நடுவே பிறந்தவனுடைய உடல் வேறு ஆன்மா வேறென்று அந்தக் காலத்து உடல் பூமிக்கு வெளியே ஒரு செடி இந்தக் காலத்து ஆன்மா இறந்த கடலடி மீன் மேலும் இந்தக் காலத்துக்காரர்களிடம் பழைய காலத்தின் ஒரு சொல்லையும் உதிர்க்கக்கூடாது தாய்ப்பாலின் விலையை ரூபாய் நோட்டில் கணக்கிடுபவர்களிடமும் கூலிக் கொலையாளிகளிடமும் ஜாக்ரதையாக இருக்க வேண்டும் குத்தீட்டியில் கிழிக்கப்படும் வேட்டை மிருக மாமிசத்திற்கீடாக பண்டைய கால தொல் சொற்களை ஒவ்வொரு கணத்தின் ரத்தத்திலும் தொட்டு காலாதீதற்கு அதிபதியாக விளங்கும் மகா மர்மத்திற்கும் ஒளிப்பிட ரகசியதற்கும் காதலியான கவிதையின் மூலிகை பூசிய புராதன உடலில் பதுக்கிக் குளிரூட்ட வேண்டும் பின் கண்ணயர்ந்து காலத்துக்கும் நிலத்தைப் பண்படுத்தும் வேலையே கதியென நெளியும் மண் புழுக்களோடு தூங்கியபடியே இந்தக் காலத்துக் கண்களிடம் புறாக்கள் கொத்தும் தானிய மணியாக வேண்டும்