படைப்பும் சிதைவும் (2)

Published

1 ஜூலை, 2025

Topic

கட்டுரைகள்

படைப்பின் ஆதாரமான ஆன்மா எங்கே ஒளிந்துள்ளது?

மெய்யான மெய்யியல் நிலையென்பது படைப்பின் ஆதார செயல்பாடாக உள்ள பட்சம் எது ஒரு சிறந்த படைப்பைச் சிதைக்கிறது ;ஒரு படைப்பின் புனைவு மற்றும் கற்பனா வினோதங்களுக்கும் மாயமயக்கங்களுக்கும் பின் நிற்பது எது ? படைப்பின் அரசியலென்பது இக்காலத்தில் என்ன?நவீனத்துவத்திற்கு முந்தைய படைப்புச் சூழலுக்கும் நவீனத்துவத்திற்குப் பிந்தைய படைப்புக் காரணிகளுக்கும் என்னென்ன வித்யாச விளைவுகள்? பின் நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் நீட்சிக்கும் பின்னே இன்று வெளிச்சப்படுவது என்ன?

முதலில் படைப்புச் செயல்பாடு பற்றி நான் இத்தொடரை எழுதும் போது எனதன்பு வாசகனுக்கு அதற்கு எதிரான மனநிலைகளைக் தொட்டுக் காண்பிக்கவே ஆவல் கொள்கிறேன். எனது பார்வையில் எது சிறந்தது எது குப்பையென்று சொல்ல வந்திருக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும்; இது போன்ற கண்டுபிடிப்புகளில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் எதுவுமில்லை எந்த ஆதாரத்தை வைத்து இதை நிறுவுவது ?நான் வாசிப்பின் உள்ளுணர்வை அதிகமும் நம்புபவன், இந்த உள்ளுணர்வென்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அறிதலின் பாற்பட்டது ஒவ்வொருவருக்கும் சூழலின் மீதான பார்வை எவ்வாறு உருவாகிறது, அவர்கள் வெளியே இருந்து நாலதையும் தெரிந்தும் தெரியாமலும் கற்கிறார்கள்.புறக்காரணிகள் நனவிலியில் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட உள்ளுணர்வை சிருஷ்டிக்கிறது. அன்பும் அறநெறிகளும் வசவுகளும். பாலியல் திரிபுகளும் களியாட்டமும் காதலும் பித்தமும் கொலைவெறியும் துயரமும் மகிழ்ச்சியும் கலந்தது சமூகம்

இங்கிருந்ததான் கவிதை சிருஷ்டிகரமாகிறது

கவிதைகள் மனமொழியின் உணர்வு சார்ந்ததெனினும் இதிலுள்ள சமகால வர்க்க நலன் ,சாதியக் கூறுகள் நவீன அரசியல் விமர்சனமாகப் பார்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்பு கு.ப ரா வின் கவிதைகளை இவ்வாறான நோக்கில் நான் மதிப்பிட்டுள்ள கட்டுரை எனது கண்ணாடி வெளி கட்டுரைத் தொகுதியிலுள்ளது.

நவீன கவிதை ஒரே போலல்ல, பல்வேறு தன்மைகளில் பலராலும் எழுதப்பட்டுள்ளது. .உதாரணத்திற்கு பிரமீள் தனதேயான மன மொழியில் எழுதுகிறார் ;தேவதச்சன் தனதேயான மனமொழியில் எழுதுகிறார் ,இதைத்தான் நான் அவரவர் தனிப்பட்ட உணர்வின் தனியான மனமொழி என்கிறேன். மானுட அறவுணர்வென்பது கவிதையாக்கத்தில் மேம்பட்ட உணர்ச்சியென்பேன்.இது மிகவும் தொன்மையானது. இது அநாதி அநாதி காலந்தொட்டு மனித அகத்தில் உள்ளுறைந்து வருவது.கடந்த கால சமகால பகுப்பாய்வுகளுக்கும் அப்பாற்றபட்டது, இது மனித மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வில் பொங்கிப் பிரவாகமெடுப்பது.

ஒரு சிறந்த கவிதை எழுதப்படும் கணத்தில் அதை எழுதிய கவிஞன் படைப்புத் தருணத்தின் உச்ச ஆற்றலில் நனையாமலிருக்க இயலாது. கவிதையில் மட்டுமல்ல அனைத்து சிருஷ்டிகர செயல்பாடுகளிலும் இந்தப் பேருணர்வு அதை படைத்தவனை குளிர்விக்காமல் விடுவதில்லை. இங்கு மனமொழி காலதீதத்தில் நிறைந்து வழியுமென நினைக்கிறேன். ஒரு கவிஞனாக பல முறை நான் இந்த உணர்வில் மிதந்து மீண்டிருக்கிறேன். கவித்துவப் பித்து என்பது படைப்புச் செயல்பாட்டின் ஆதார ஆனந்தம். இதை அனுபவித்தவர்கள் கவிதையாக்க செயலூக்கத்திலிருந்து வெளியேற மாட்டார்கள்.

வெளிப்படையான பிரச்சார தொனிக்கு விலகிய நவீன கவிதை ,மனமொழியை முதன்மையாகக் கொண்டுள்ளதென்பதால் இது அவரவர் தனிப்பட்ட கவிதை வெளியில் பொதுவான மானுட அறம் சார்ந்த சரடொன்றைப் பிடித்தே இயங்கி வருகிறது. . இந்தச் சரடும் ஒவ்வொருவருக்கும் மாறபாடாக அவரவர் மனமொழி சார்ந்தும் வெளிப்படுகிறது. இதை அனைவரின் உணர்வுப் பூர்வமான அற மதிப்பீடு அளவு கோல்களிலிருந்தும் அவரர் சுயத்திலிருந்துமே அனுமானித்துக் கண்டுபிடிக்க இயலுமென்றும் நம்புகிறேன்.

மனித உயிர்கள் இருநிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று மனநிலை சார்ந்தது ,இரண்டாவது சூழல் சார்ந்தது.எப்போதும் இரண்டாம் நிலையே முதல் நிலையைப் பாதிக்கின்றது இரண்டாம் நிலை பல்வேறாக நிலைகுலைந்துள்ளது. அரசு மற்றும் அதன் பிற உப நிறுவன அமைப்புகளாகட்டும். குடும்பம் மற்றும் சாதிய கட்டுமானங்களாகட்டும் கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் பல பிற்போக்கான அடித்தளங்களை தாறுமாறாகச் செதுக்கியுள்ளது இதை சீராக்க ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வேலைத்திட்டங்களும் நியதிகளும் உண்டென்பதால் இதற்கு ஒருமித்த அல்லது மையமான சிந்தனை ஏதுமில்லை கவிதைக்குள் மையச் சிந்தனையுணர்வென்பதில்லை பல்வேறு சிதிலங்களின் கனவாக அது நவீன மொழிப்பரப்பில் திரிந்துள்ளது

ஒரு வகையில் புத்தாக்கத்தோடு வருவதும், பழம் சிந்தைனைகளை மறுத்தும் வெடித்தும் பிரச்சாரத்திற்கு உட்படாமல் வடிவ ஒழுங்குகளுக்குள் இல்லாமல் ஒரு காட்சியிலோ ஒரு சொல்லிலோ ஒரு கனவிலோ புதிய மொழிதலைக் கண்டடைகிற நவீன கவிதை ,புறச்சூழல் மற்றும் அதன் நிறுவனங்களைச் செப்பனிடத் தயங்குகிறது கவிதையால் அது இயலாது. அப்படிப்பட்ட வேலைத்திட்டங்களை கவிதைக்குள் அனுமதிப்பது புரட்சிகர சமூகங்களில் வெகுமக்களின் பாற்பட்டு தேவையாக ,வாழ்தலுக்கான ஏக்கமாக இருந்துள்ளதைப் பின்னர் உரையாட நினைக்கிறேன்

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் கவிதைக்குள் பட்டாளிவர்க்க திட்டங்களை ,கட்டளைகளை வகுப்பது அதன் சார்பற்ற மெய்யியலுக்கும் செய்யும் அநீதியாக முடிந்துவிடுமெனும் போது முந்தைய காலத்தில் புரட்சிகர சமூகங்கள் கவிதையை தங்கள் வேலைத் திட்டத் தேவைகளுக்கு நிர்பந்தப்படுத்தியது பற்றிய சாதக பாதக அம்சங்களையும் உரையாட விரும்புகிறேன். இதற்கு ஒடுக்கு முறைக்குள்ளான உலகக் கவிஞர்களைப் பற்றியும் உங்களோடு உரையாட விரும்புகிறேன்

அரசு பயங்கரவாதத்தால் சித்ரவதைக்குள்ளான கவிஞர்களின் குரலை நாம் எவ்வாறு பார்த்து வந்திருக்கிறோம்? அல்லது இந்திய கவிதைக்குள் தலத்திய, இஸ்லாமிய, விளிம்பு நிலை இடங்களை பொருத்த வேண்டிய தேவைகளையும் மறுப்பையும் நாம் திறந்த மனத்தோடு பேச வேண்டுமெனவும் நினைக்கிறேன்.

நவீன கவிதையோ, நவீனம் தாண்டிய கவிதையோ அனைத்து அடிமைத்தனத்திற்கும் எதிரான கூக்குரலை எழுப்பும் உரிமையை கவிதை தன் ஆன்மாவின் தன்னகத்தே கொண்டுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நவீன கவிதைக்குள் ஏது சமூக நீதி என்பவரிடம் கீழை நாடுகளிலுள்ள சாதிய ஏற்ற தாழ்வுகளையும் தீண்டாமைக் கொடுமைகளின் வலி வாதைகளையும் பேச வேண்டியுள்ளது. கொத்தடிமையினர் ஆயுள் சிறைவாசிகள் எழுதிய கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன் அது மாபெரும் மானிடத் துயரம். இவற்றையெல்லாம் நாம் பேசும் போது கவிதையின் மெய்யியலை மட்டும் முதன்மையாக எடுத்துக் கொண்டு அனுபூதி தர்சனம் உள்ளொளியென தப்பித்து விடக் கூடாது அப்படிச் செய்ய கவிதையின் உட்பொருளே அனுமதிக்காது. ஏனெனில் கவிதை குதூகலத்திலிருந்தல்ல, வலியின் விளிம்பிலிருந்தே சதாவும் பீறிடுகிறது. கவிதையிலிருந்து நாம் வலியை ஒழித்துக் கட்டுவோமென்று எண்ணினால் நாம் நமக்கு நாமே குண்டர்கள் ,நமக்கு நாமே பாசிஸ்டுகள்

உலகெங்கிலும் அடிமைப்பட்ட சமூகங்களின் கூக்குரல்களை கவிதை தன் மன மொழியில் எவ்வாறு ஏற்றி வந்திருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதை விட இன்னும் விலங்கிட்ட ஆயிரமாயிரம் கைகளும், ஒடுக்கப்பட்ட இலட்சோப லட்சம் முதுகெலும்புகளையும் நாம் மறுக்கவியலாது. கவிதை எக்காலத்திலும் மாபெரும் சுதந்திர வெளியைக் கொண்டுள்ளது. ஆண் பெண் மூன்றாம் பாலினம் என்பதையும் தாண்டி இக்கால நவீன சமூகத்தில் எல் ஜி பி டி வகையினரின் மன உடல்களின் அவஸ்தைகளையும் கொண்டாட்டங்களையும் கவிதை தனக்குள் தணிக்கை செய்யவில்லை என்பதையும் நாம் புரிந்துணர வேண்டும்.

இங்கே ஒருவர் இடது சாரியாக இருக்கிறார், இன்னொருவர் வலதுசாரியாக இருக்கிறார், வேறொருவர் இடை நிலையில் நிற்கிறார்  இப்படி இந்த வரிசை இன்று பல நூறாக வகுத்துக் கொண்டாலும் இங்கே அறம் என்பது யாருடைய, எதனுடைய நீட்சியில் நிறைந்துள்ளது ? அது தன்னளவில் சூரியனின் பட்டொளி போல தன்மயமானது. போலி சால்வையும் முகமூடியும் அணியாதது. நவீன கவிதைக்கு இடதுசாரி முகச்சாயலில்லையென்பது ஒரு குறையில்லையென்றாலும், மூன்றாம் உலக நாடுகளில் அதற்கு மதவாத முகமில்லையென்பது எனக்கு ஆசுவாசமளிக்கிறது.

ரசனை சார்ந்த விமர்சன மரபில் எனக்கு எந்த கவன ஈர்ப்புமில்லையென்ற போதும் ஒரு படைப்பை வாசிக்க எது துணை புரிகிறது; கோட்பாடு மற்றும் அரசியல் வாசிப்பை நாம் எவ்வாறு இன்று உள் வாங்கியுள்ளோம் ஒரு படைப்பைச் சிறந்ததாக்க எந்த அளவு கோல்களை விருது நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றன தலைசிறந்த ஒரு கவிதையோ, கதையோ இன்றும் நம் காலடியில் வெளியே எடுக்காத அளவு எப்படி மறைந்துள்ளது, அதை அவ்வாறு ஒளித்து வைக்கும் சூழல் எங்கிருந்தது? , எல்லாவற்றையும் கூவி விற்கும் முறை ஒரு சிறந்த கவிதைக்கும் நிகழ்கிறதா? அப்படியெனில் வாசக மூடத்தனமும் சேர்ந்தே துணை புரிந்துள்ளதா ? இதற்கு பின்னே உள்ள அரசியல் யாருடையது? உண்மையில் சமகால இலக்கிய அறிவுத் துறையில் விமர்சகர்களின் பங்குதான் என்ன? அவர்கள் இச்சூழலை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?

க நா சு மீதும் ,விக்ரமாதித்தன் மீதும் எனக்கு நன்மதிப்பு இருந்த போதிலும் எழுத்தாளர்களை பட்டியிலிடுவதிலோ அவர்களின் பாற்பட்ட நன்மை தீமையைப் பகுப்பதிலோ எனக்குப் பெரிய ஆர்வமில்லை.நான் ஒருவரை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வதை விட ,எனது வாசிப்பில் சிறந்த ஒன்றையே எடுத்துக் காட்ட விரும்புவேன், அப்படியென்றால் மோசமான ஒரு வாசிப்பை மேற்கொள்ளும் அனுபவத்தைப் எப்படிப் பகிர்ந்து கொள்வது? சாக்குப் போக்குச் சொல்லாமல் குப்பையைக் குப்பை என்று சொல்லிப் பழக வேண்டுமென்று நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டு வளர்ந்தவன் என்கிற வகையில் , நான் கற்ற மறை ஞான நூல்களிலிருந்தும் எனது ஆசான் கோவை ஞானியிடமும் நான் கற்ற அறமதிப்பீடுகளும் மெய்யியல் உணர்வும் இதற்குத் துணை புரியமென்றும் நம்புகிறேன். இந்த இரு கருதுகோள்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் ஆன்மீக மெய்ஞான வகுப்புகளுக்கு உபாத்யனாகக் கூடப் போக நேரலாம்,  நான் அதிலிருந்து கலை இலக்கிய சமகாலப் பார்வையை அடையும் பொருட்டு உலகளாவிய அரசியல் பார்வையையும் இது காறும் இலக்கியத்தின் பொருட்டு பேசப்பட்ட வந்த தத்துவம் மற்றும் கோட்பாட்டு நல் வெளிச்சங்களையும் என்னுடன் நிற்க வேண்டுபவனாக இருக்கிறேன். அந்த வகையில், கடந்த காலத்தையும் அதற்காக உழைத்த பேராசான்களையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

இன்று அதிகாரம், பிரபல்யம் என்கிற இரு சுரண்டல் வடிவங்களை குறிவைத்து போலி அங்கீகாரம் பெறுபவர்களின் சூதாட்டம் எதை நோக்கி குவிந்துள்ளது ?வாசகனுக்குப் புத்தகத்தை பரிந்துரைக்கும் நிலையிலிருக்கும் விமர்சன ஆளுமைகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் ஆயில் மசாஜ் செய்வது எப்படி?இந்த இடத்தில் சினிமா அல்லது ஊடக அதிகார நாற்காலி பற்றியும் விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். எழுத்தாளனோடு எப்போதும் தன்னுடைய இன்னொரு கையைக் கோர்த்துள்ள வாசகனுக்கு இந்த அரசியல் ,காலங் காலமாக எது மறைத்துள்ளது இதை ஏன் ஒளித்து வைத்துள்ளோம். வாசிப்பின் அரசியல் பதிப்புத் துறையிலும், எழுத்தாள அரசியலோடும் ஒன்று கலந்துள்ளது. இதையும் விரிவாக கூர்ந்தறிய வேண்டும்.

மாவட்ட மாநில தேசிய அரசு விழாக்களில் ஒவ்வொரு முறையும் வருடந்தோறும் தணிக்கை செய்யப்படுகிற எழுத்தாளர்களின் பெயர்களை நீங்கள் அறிவீர்களா? இந்த வைபங்களுக்கு ஆள் பிடிக்கிற தரகர்கள் எங்கிருந்து உதயமானார்கள்?அவர்களுக்கும் நவீன இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு? இதற்குப் பின்னே உள்ள அரசியல் என்ன? இதன் விளைவில் சமகால இலக்கிய போக்கில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையும் நம் கால வாசகன் அறிய வேண்டும். புத்தகச் சந்தை கலை கட்டிய, உள்ளூர் இலக்கிய கூடுகையினுள்ளும் ,கவியரங்க பட்டிமன்ற நிகழ்வுகளுக்குள்ளும் ,நம் கால நவீன இலக்கியர் தடாலடியாக புகுந்து வருவது நற்பேறு என்றாலும் அங்கே ஒரு முறையும் வராமல் அங்கீகாரத்தை மறுத்து காலம் முழுமையும் எழுத்துச் செயல்பாட்டில் கூலி பெறாத , சாதி மற்றும் குழு அரசியல் சாராத எழுத்தாளன் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறான் என்பதை நவீன இலக்கியர் அறிய வேண்டும்.

சிறந்த படைப்புகளை தந்த எழுத்தாளர்கள் சாராம்சத்தில் வாழும் காலத்தில்  அங்கீகாரத்தை மறுத்ததை இலக்கிய சுப வைபங்கள், கலை நிகழ்ச்சிக் குழுக்கள் ,சற்றேனும் கவனிக்க வேண்டும். நவீன இலக்கிய அந்தஸ்து என்பது இன்று அறிவு சார்ந்த அதிகார மதிப்புடையதாக இருக்கிறது.இதை வைத்துக் கொண்டு பதிப்பகம் நடத்தலாம் ,கருத்தரங்குகளை, பல்வேறு விழாக்களை ஒருங்கிணைக்கலாம். ஒருவரை போலியாக அடையாளப்படுத்த, ஒருவரை அழித்தொழிக்க இந்த அந்தஸ்து ஒருவருக்கு கூடுதல் சக்தியளிக்கிறது. இந்த அந்தஸ்து உள்ளவர் குட்டி சாம்ராஜ்யத்தை நிறுவி நடைமுறையில் அரசுக்கு உதவலாம். பின்னர் அதை விட பெரிய ராஜ்யத்தோடும் தன்னை இணைத்துக் காட்டிக் கொள்ளலாம்.இப்படி உருவான அறிவுப் போலிகளே இன்று கார்ப்பரேட்டாக வளர்ந்துள்ள கட்சிகளுக்கு துணை நின்று மாநில தேர்தல்களைக் கூட தங்கள் புனைவுத் திட்டத்தின் கட்டுப்பாட்டில் நடத்தி முடிக்கிறார்கள். இது போன்ற நபர்கள் இலக்கிய குழுக்களில் ஆரம்பத்தில் சுற்றித் திரிவார்கள். பின்னர் அவர்களுடைய வளர்ச்சி வியப்பளிக்குமளவிற்கு இருக்காது, ஊரார் வாய்பிளந்து கிழியுமளவிற்கு நிகழ்ந்து முடிகிறது.

இத்தொடர், கோட்பாடு சார்ந்த தியரி வகைக் கட்டுரைகள் அல்லவென்பதை முதலில் வாசகன் உணர்ந்து கொள்ள வேண்டும். பல்கலைக் கழக ஆய்வுக் கட்டுரைகளில் நான் ஆரம்பம் முதலே ஆர்வமில்லாதவனாக இருக்கிறேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் உலகளவில் நிகழ்ந்த தத்துவ விவாதங்கள் தமிழில் நிகழ்த்திய மாற்றங்களை பலரையும் போல நானும் ஓர் எளிய மாணவனாக கண்கண்டும வந்திருக்கிறேன்

ஒருவரை சமகால சமூகச் சூழல் எவ்வாறு பாதிக்கின்றது ,அவருடைய அரசியல் என்ன என்பதைப் பார்த்துதான், அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்தை மதிப்பிட இயலுமென்று நான் எழுத வந்த காலத்தில் தேர்ந்த வாசகரான தோழர் நேர்ப்பேச்சில் என்னிடம் சொன்னார்.உண்மையில் தோழர் பாசிஸ்டுகளுக்கு பயந்தார். “ நாம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத பாசிஸ்டுகளின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியுமா? எழுத்தாளர்களில் பலரும் பாசிஸ்டுகள்” என்றார் ; “எழுதும் எழுத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும்; நடைமுறையில் ஒரு புல்லையும் பிடுங்கிப் போடாமல் ஜோல்னாப் பை நிறைய கவிதைகள் இருந்தென்ன பயன்,? கார்ப்பரேட்டுகளுக்கு அதிகார அமைப்புகளுக்கு எழுத்து கீழ்பட்டுவிடக் கூடாது ;வார்த்தை ஜாலங்களில் புரட்சியை கிண்ட இயலாது; வேண்டுமானால் உப்புமா கம்பெனிகள் பதிப்பகம் ஆரம்பிக்க உதவுமென்றார். ஏற்கனவே நெம்புகோல் கவிஞர்களால் சூழலில் நிகழ்ந்த விளைவுகள் என்ன என்றும் கேட்டார். -உண்மையில் எனக்கு மட்டுமல்ல நான் அப்போது எழுதி வைத்திருந்த கவிதைகளுக்கும் மூத்திரம் வந்து விட்டது தோழர் படைப்பைப் பற்றி பேசவில்லையென்றாலும் படைப்பிற்குப் பின்னாலுள்ள அரசியலைப் பேசினார். இது மிகவும் முக்கியமானது.

வானம்பாடிகளின் கவிதை அரசியலை, இளம் மாணவன் ஒருவனுக்கு மிகுந்த அக்கறையுடன் அவர் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருந்தார். வானம்பாடிகளின் மீது அவர் வைத்துள்ள விமர்சனம் கோஷ அரசியலை முதன்மையாகக் கொண்டிருந்தது. கோஷ அரசியல் அக்காலத்திலும் இக்காலத்திலும் எதிர்காலத்திலும் எவ்வளவு முக்கியமான பிரச்சனையென்றால் அதை பொதுபுத்திசார் வெகுஜனத்திடம் கையாண்டு ஆட்சி அதிகாரத்தையைக்கூட கைப்பற்றி விடலாம். பிறகென்ன, மக்கள் திரளை தங்கள் மேய்ச்சலுக்காக எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதுதான் நம் சூழலின் பாசிச இடம்.

அலங்கார சொல் நயங்கள், போலி வசீகரம் பெற்றவை. "கவர்ச்சிகரமான உரை "என்று இதை பட்டிமன்ற உரையாசிரிய உன்னத நிபுணர்கள் அழைக்கிறார்கள். அலங்காரமான மேடைப்பேச்சு அணு உலையை விட ஆபத்தானது. இதற்கு எக்காலத்திலும் எதிரானது கவிதை வெற்று ஆரவாரம் ஒரு சமூகத்தையே படுகுழியில் தள்ளிவிடுகிறது. அதற்குப் பின்னே ஆன்மாவும் உணர்வுமில்லை. உணர்வுப் பூர்வமாக இல்லாத எந்தவொன்றிலிருந்தும் கவிஞன் விலகியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அமளி ஆரவாரங்கள்,பிரச்சார ஊளையிடல்கள் இலக்கிய தர்சனங்களுக்கு எதிரானது. எல்லா இடங்களையும் இன்று எது ஆக்கிரமித்துள்ளது? வெற்றுக் கூச்சல்களும் வாய்ச்சவடால்களும்.இது மெல்ல மெல்ல நம் சூழலின் ,கலை இலக்கிய மேன்மையான ஆன்மாவிற்குள்ளும் படுவேகமாக ஊடுருவி விட்டது. பிரபலம் என்பதும் அங்கீகாரம் என்பதும் அனைவரும் விரும்பும் நோய்க்கூறாக மாறியுள்ளது

இளம் எழுத்தாளர்களுக்கு முன்பு இன்று நித்ய உண்மைகள் என்று ஏதுமில்லையென்றாலும், சாரம்ச உண்மைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் வளர்ந்து வரும் போது ,நவீன இலக்கிய அதிகாரத்தில் பங்கு கேட்டு பலியாகிவிடக் கூடாது.அங்கீகாரம் ,பிரபல்யம் அதிகாரம் போன்றவற்றைக் துணைக்காக வேண்டி கூடச் சேர்த்துக் கொண்டால் ,கவிதையென்னும் அற்புதப் பறவை நம் தலை மீதிருந்து பறந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது.  இரண்டு கவிதைப் புத்தகங்கள் ,சினிமா இயக்குநர் என்றோ ஆட்சியதிகாரத்தில் பங்கு என்றோ அவர்கள் அலையக்கூடாது. எழுதிய கவிதைக்ளுக்கேனும் அவர்கள் நற்காதலனாக விளங்க வேண்டும். கவிதைகள் அதை எழுதியவரால் விதைகளாக வீசப்படும் போது நினைக்காத நிலத்தில் நித்ய காலத்திற்கென முளைக்கும் . அவற்றின் மேல் பறவைகள் பறக்கும்

 

©2025 பாலை நிலவன்

©2025 பாலை நிலவன்