படைப்பும் சிதைவும்

Published

27 ஜூன், 2025

Topic

கட்டுரைகள்


படைப்பு மனநிலையை ஒருவர் எப்போது இழப்பாரென்று கேட்டார் இளம் நண்பர்..இந்தக் கேள்வி சாராம்சத்தில் பழைய கேள்வியென்றாலும் புதிதாக எழுத வந்துள்ள இளம் நண்பருக்கு முக்கியமான கேள்வியென்று .நினைக்கிறேன்.

படைப்பு மன நிலையை ஒருவர் எப்போது அடைவாரென்றோ  படைப்பு மனநிலை எங்கே கிடைக்குமென்றோ அவர் கேட்காதது எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை; ஏனென்றால் நாம் படைப்பின் ஆதார கதியான  பிரபஞ்ச வெளியில் எண்ணற்ற ஜீவராசிகளுக்கு மத்தியில் ஜனித்திருக்கிறோம். அனைத்தும் படைக்கப்பட்ட இடத்தில் நாம் அந்த படைப்பில் ஒன்றாக இருக்கிறோம் . படைப்பு மனநிலையென்பது நமக்கு வெளியே சதா சர்வமும் இருந்து கொண்டிருக்கிறது, நாம் அதை உள்ளிருந்து எடுப்பதைப் பற்றியது நண்பரின் கேள்விஎழுதுவதற்கான உந்துதல் அல்லது எழுத இயலாத மனநிலையைப்பற்றியது

விசும்பின் படைப்பு மன நிலையில் கணம் தோறும் எண்ணற்ற தாவரங்களும் மலர்களும் ஊர்வனவும் பறப்பனவும் சிருஷ்டி கொண்டபடி உள்ளன, மீன்கள் வண்ணமயமாக நீந்துகின்றன. நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட இடத்தில் விலங்கினங்கள் நடமாடுகின்றன. பசியும் காமமும் படைக்கப்பட்ட இடத்தில் நோயும் மரணமும் வைக்கப்பட்டுள்ள அதே இடத்தில் படைப்பு மனநிலையும் வைக்கப்பட்டுள்ளது .எழுதுவதற்கான முதல் எழுத்தை எங்கே கண்டுபிடிப்பது ; மன நிழலில் அசை போடுவதற்கான ஒரு கனவுத் திரையை எங்கே விரிப்பதென்றோ நண்பர் கேட்க முற்படுகிறாரென்று வைத்துக் .கொள்வோம். எழுத்தில் முதல் தூண்டுதல் முதல் காதலுக்கு நிகரானதென்று நான் நினைக்கிறேன். இதில் ஒவ்வொரு எழுத்துக் கலையுள்ளமும் உள்ளார்ந்த தனிப்பட்ட அனுபவம் .வாய்ந்தது.ஒருவருக்கு காருண்யம் சுரக்கும் சம்பவத்தில் இன்னொருவருக்கு அவ்வாறு ஏன் இல்லை அனைவருமே ஒரு தத்துவத்தில் உலகத்தை பார்க்கவில்லை, அல்லது ஏன் அப்படி பார்க்க வேண்டும், பல நேரங்களில் படைப்பு மனநிலை வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென்று ஆரம்ப கால எழுத்தாளர்கள் பலரும் பலரிடமும் கேட்கிறார்கள் இதற்கு நூறு நாள் வேலைத் திட்டங்கள் ஏதுமில்லை மூத்த எழுத்தாளர்கள் தங்கள் தனிப்பட்ட ரோகங்களுக்குப் பருகிய பழங்கால லேகியங்களும் கசாயங்களும் உதவாது. படைப்பு மனநிலையை ஒருவர் எப்போதும் தன் குடோனில் வலுக்கட்டயமாக தக்க வைக்கவும் இயலாது

எழுதுவதற்கும் மனநிலைக்குமான இரு நிலைகளில் வேர்பிடிக்கும் ஒரு செடி நம்மில் எவ்வாறு துளிர்க்கிறது . இதையே நாம் கவனிக்க வேண்டுமென நினைக்கிறேன் .

ஒருவர் தனிப்பட்ட முறையில் எழுதும் கலைக்கு தனிப்பட்ட முறையில், தன்னை எவ்வாறு பலி கொடுக்க விரும்புகிறார் என்பதை அறிய நினைக்கிறேன்.

ஒருவர் ஏன் எழுதுவதை அடியோடு நிறுத்திக் கொண்டார், அல்லது முன்பு போல அவரால் ஏன் எழுத இயலவில்லை? இன்னொருவர் எப்படி அசுர பூதமாக எழுதிக் குவிக்கிறார், குறைவாக எழுதியவர் எப்போதும் முத்துக்களை மட்டுமே கர்பந்தரித்தாரா ? அசுர பூதத்திடம் எத்தனை குப்பைகள் இருந்தன ? இங்கு படைப்பு மனநிலை என்பதென்ன இதையே உரையாட நினைக்கிறேன்

©2025 பாலை நிலவன்

©2025 பாலை நிலவன்