பாலை நிலவன் நேர்காணல்
Published
27 ஜூன், 2025
Topic
நேர்காணல்
நேர்கண்டோர்:
பிரவீன் பஃறுளி ,த ராஜன் , பச்சோந்தி
தொண்ணூறுகள் என்னும் அலைக்கழிப்புமிகுந்ததொரு சரித்திரச் சுழியில் தீவிர கலைப் பிரக்ஞையின் திமிறலும் கொந்தளிப்புமாக சமகாலக் கவிதைக்குள் ஒரு தனித்தலையும் வலிமிகு பிரக்ஞையாக, வெளிப்பட்டவர் பாலை நிலவன்
வடிவமைக்கப்பட்ட ஒழுங்குகளிலிருந்து தனிமையுற்ற, பிரபஞ்ச துக்கத்தைத் தோளேற்றிச் சுமக்கும் சிலுவைப்பாடாக, கனவார்த்தமான அகநிலம், சிதிலங்களின் அழகியல், புகைபடர்ந்த சொல்வெளி, அசாதாரணமான புனைவம்சம் எனப் பைத்தியக் களிப்புடன் அழிவின் வெளிச்சம் கொண்டவை அவரது கவிதைகள். மனப்பிறழ்ச்சியும் நோய்மையுமான உறவுகளின் அணுக்கத்திலான குழந்தைப் பருவ மனநிறங்களின் வழியில், பள்ளியில் இடை நின்று, முறைசாராத தன்னந்தனியான அகத்தேடல், சுயமான தீவிர வாசிப்புக் கல்வியின் வழியே உருவானவர். தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான ‘கடல் முகம்’ தொகுப்பு தொடங்கி, ’சாம்பல் ஓவியம்’(2003), ’எரியும் நூலகத்தின் மீதொரு பூனை’ (2005), பறவையிடம் இருக்கிறது வீடு (2008), மனம் பிசகிய நிறம் ( 2010), பசியை ரத்தத்தால் தொடுவது (2017) எனத் தொடரும் பாதையில் தொடர்ச்சியும் தீவிரமும் குன்றாத வலுவான கவிமொழியை கொண்டு நிறுத்துகின்றன அவரது தொகுப்புகள்.
புனைகதை மொழியிலும் இணைகோடாக இயங்கி வந்துள்ள அவரது கதைத் தொகுப்பு “எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்சும்” 2010இல் வெளியானது. பெரு நகரப் பரப்பில் சிதைந்துகொடிருக்கும் அடித்தள மனிதர்கள், அங்கதச் சித்திரமாகிவரும் கடவுள், ஒளி தரும் குழந்தைகள், நோய்மைக்கும் மரணங்களுக்கும் அருகிலிருக்கும் பெண்கள், வாதையுறும் சிற்றுயிர்கள், விரிசலுற்ற சிதிலங்களின் தாவரங்கள் அவரது மாந்தர்கள்.
அவருடைய “கண்ணாடி வெளி” என்னும் அல்புனைவுத் தொகுப்பு கவிதையின் மயக்க நிறங்கள் இறங்கிய உள்முகமான உசாவுதல்கள் கொண்டவை. கவிதைக்கு முன்பிருந்தே ஓவியத்தின் ஒளிமொழியோடும் கனவுகள் கொண்டவர். சிறுபத்திரிக்கை மரபின் திமிறலையும் தனிக்கனவுவையும் தீவிரமாக ஏந்தி ’நீட்சி’ இதழைக் கொண்டு வந்தார். கோணங்கியுடனான தன் நீண்ட மனப்பருவங்களும் அணுக்கத்தினுமான உள்வயமான உரையாடல் நீட்சியின் குறுவெளியீடாக வந்தது. கோணங்கி குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பை கொண்டவந்துள்ளார். எழுத்தின் தனி மசியை , தனி கனவை கருக்கொண்டு வந்த அவரது தனி-மை வெளி, சிற்றிதழ் காலம் ஸ்தம்பித்ததன் பின்னான ஒரு புத்துயிர்ப்பு.
மல்லாந்த நிலையில் ஒரு கரப்பான் பூச்சி என்ற அவரது புனைவுத் தொகுப்பு கைவிடப்பட்டதுகளின், தெய்வீகத்தை மலர்த்தும் அவரது எழுத்துலகத்தின்
பொருத்தமான படிமம்.
குறிப்பு : பிரவீன் பஃறுளி
நன்றி: இடைவெளி இதழ்
உங்களது வாசிப்பு , இலக்கிய அறிமுகம் , எழுதுதத் தொடங்கிய பருவம் குறித்து அறிமுகமாகச் சொல்லுங்கள்.
நான் கோவையில் ராமநாதபுரம் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். திறமையான மாணவனாகவே விளங்கினேன். ஏழாம் வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு நான் திறமையான மாணவனாக இருந்திருக்கின்றேன். 1980 இல் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை மில் பஞ்சாலையில் தொழிலாளியாகப் பணி புரிந்துகொண்டிருந்தார். ஒரு குடும்பத் தலைவருக்கான அனைத்து பண்புகளும் கொண்டவர். ஆனால் அளவுக்கதிகமான போதை வஸ்து பழக்கமுள்ளவர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது பிரச்சனையாக இருந்தது. அதனால் ஏற்பட்ட காயங்கள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. ஒரு சமயம் எனது அம்மாவின் மேல் அவர் ஒரு சைக்கிளைத் தூக்கி வீச முற்பட்டார். இது போன்று சம்பவங்களால் நான் அடிக்கடி பள்ளிக்கு போகமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆகவே வருகைப் பதிவு குறைவாக இருப்பதால் என்னால் தேர்ச்சி பெற முடியாது என என் நண்பர்கள் கூறினார்கள். எனக்குப் படிப்பு மேல் மிகுந்த ஆர்வம் இருப்பதால் அதற்கு என்ன மாற்று வழி இருக்கக்கூடும் என்று சிந்தித்தேன். நானும் என் நண்பனும் சேர்ந்து வருகைப் பதிவேட்டை எரித்து விடுவதென முடிவு செய்தோம். எனக்காக என் நண்பன் வாஞ்சிநாதன் அட்டவணையைத் திருடினான். நாங்கள் எப்பொழுதும் செல்லும் பாலமுருகன் சலூன் கடையில் வைத்து எரிப்பதற்கு முடிவு செய்தோம். ஆனால் மனம் ஒப்பவில்லை. எனவே என் நண்பன் சிவகுமார் அதை அவன் வீட்டு பரணில் போட்டு வைத்தான். அது பள்ளிக்கூடத்தில் மிகப் பெரிய பிரச்சனையாகி, அதன் பின் நான் பள்ளிக்கூடம் செல்லமுடியாமல் போயிற்று. என் படிப்பு 9 ம் வகுப்புடன் முடிந்தது. எனது மாமா பையன் சிவகுமார் கம்யூனிச புத்தகங்கள் படிப்பார். மாமா வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு பெரிய புத்தகங்கள் இருந்தன. அங்கேதான் எனது ஆரம்பகட்ட வாசிப்புகள் ஏற்பட்டன. அது மட்டும் அல்லாமல், நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும்போது அங்கே பழைய புத்தகக் கடை ஒன்று இருக்கும். மிகக் குறைந்த விலைக்கு புத்தகங்கள் கிடைக்கும். கம்யூனிச புத்தகங்கள் உடனுக்குடன் கடைகளுக்கு வந்துவிடும். இவை யாவும் தான் என் வாசிப்புக்கான முதல் நிலை. அதன் பிறகுதான் தான் இலக்கிய வாசிப்புகள் ஏற்பட்டன.
எழுதத் தொடங்கியது எப்போது ?
நான் சிறு வயதில் இருந்தே எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். எனது பன்னிரெண்டாவது வயதில் எனது கவிதை, 'பாசறை' என்ற இதழில் வெளியானது. இன்றைக்கு இருக்கிற புது பையன் என்ன எழுதுவானோ, அந்த மாதிரியான முயற்சிகள்தான். மெல்ல ஒரு லேசான வாசிப்பு உருவானது. இன்று ஒரு சாமானிய பையனுக்கு தீவிரமான புத்தகங்கள், இலக்கியங்கள் எவ்வளவு தூரத்தில் வைக்கப்படுள்ளதோ, அப்படித்தான் எல்லா கால கட்டத்திலேயும் இருந்துவந்தது. புத்தகங்களுக்கான வாய்ப்பே இல்லாத லட்சக்கணக்கான மக்களிடையே , குழந்தைகளுக்கு மிட்டாய் மாதிரி அது அவ்வளவு எளிதில் கிடைக்காது. பழைய புத்தகக் கடையில் இருக்கும் புத்தகங்களை தூரத்தில் இருந்து பார்ப்பேன். ஒரு ரூபாய் இருந்தால்தான் வாங்க முடியும், அதன்பிறகு, மாமா பையன் சிவகுமார் மூலமாக, புத்தகங்களுக்கான ஆரம்பகட்ட அறிமுகம். புத்தகங்களைத் தொடக்கூடிய, வாசிக்கக்கூடிய, அதனூடே பயணப்படும் பருவம் போன்ற பல கட்டங்கள் இருக்கிறதென்பதைப் பின்னாளில்தான் நான் உணர்ந்தேன். அப்பொழுது இலங்கைப் பிரச்சனை ஏற்பட்ட காலம். தமிழ் மக்கள் கொந்தளித்த காலம் . என் வீட்டுப் பின்புறத்தில் சொக்கலிங்கம் என்று ஒருவர் குடியிருந்தார். இலங்கையில் இருந்து வந்தவர். அவர் அவ்வப்போது உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபடுவார். எனது உறவினர்கள் பங்கெடுப்பபார்கள். நான் சின்ன பையன். பார்த்துக்கொண்டிருப்பேன். மொழி ரீதியான, இன ரீதியான விஷயங்கள் பேசுவார்கள். சிறு தெருவுக்குள் நடக்கும் விஷயமாக மட்டும் தான் அது இருந்தது. மக்கள் துன்பப்படுகிறார்கள், வன்முறை நடக்கிறது. இது சம்பந்தமான வாசிப்புகள் தான் ஆரம்பத்தில். அது சம்பந்தமான நீண்ட கவிதை எழுதினேன். அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, 1990ன் தொடக்கத்தில் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் மாதிரியான பாடுபொருள்களில் எழுதினேன். தீவிரமான மற்றும் நேரடியான அரசியல் கவிதைகள் அவை. வானம்பாடி புகழ் ஓங்கி ஓய்ந்த காலம். ஞானி, பாலசுப்ரமணியம், போன்ற பல பேர் பங்களித்த ஒரு கால கட்டம். ஒரு மொழியுணர்வு, இனவுணர்வு, அதனுள் இடதுசாரி மனநிலை இவை எல்லாம் வெளிப்பட்ட ஒரு சூழல். அந்தக் காலத்தின் கடைசிக் குழந்தை நான். இதெல்லாம் முடிந்து சோவியத்தின் உடைப்பு ஏற்பட்ட காலம். நம்முடைய ஆவேசங்கள், போர்க்குரல் இவை மொத்த சமூகத்தில் உருவாக்கக்கூடிய அசைவு, இயக்கம் என்பது குழப்பமானது. வ.வே.சு ஐயருக்குள் இருந்த ஆவேசம் வேறு. ஆனால், அதற்குப் பிறகு இருந்த புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, பிச்சமூர்த்தி ஆகியோரின் வீர ஆவேசங்கள் உச்ச ஸ்தாயியில் இல்லை. அதே போல, அந்தக் காலக்கட்டத்தில் க.நா.சு, மாதவையா உள்ளிட்ட அனைவருமே ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள். வானம்பாடி மாதிரியான சூழலின் பாதிப்பினுடைய எச்சம்தான் 'இன்னொரு போதிமரம்' தொகுப்பு. அதற்குக் கோவை ஞானி மிக அற்புதமான முன்னுரை அளித்தார். அவரின் சந்திப்பு மிக அற்புதமானது. வ.உ.சி. பூங்காவில்தான் சந்தித்தோம். புதிதாக எழுதும் எழுத்தாளர்களிடம் புத்தகம் கொடுத்து எழுத உத்வேகப்படுத்தும் தன்மை அவரிடம் இருக்கும். வாசிப்பின் பிறகு ஏற்பட்ட எழுத்து அனுபவம் அதுவே. அறியாமை, அரசியலின் தாக்கம், மிகை மதிப்பீடுகள், சுயமாக இல்லாததன் வெறுமை இவை அனைத்தையும் அந்தத் தொகுப்பில் காண முடியும்.
சிறுபத்திரிகை மரபு சார்ந்த ஒரு இலக்கியப் பிரக்ஞை எந்தச் சூழலில் உருவானது ? அன்று சிறுபத்திரிகைகளில் நிகழ்ந்த தீவிரமான கருத்தியல் விவாதங்களோடு அறிமுகமும் நிலைப்பாடுகளும் இருந்ததா ?
கவிதை அல்லது எதுவோ ஒன்று ஒருவனிடம் வந்துசேர்வது ஒரு பரந்த காலப்பரப்பில் அவன் வந்து விழும் போதுதான் நடக்கிறது. அவனிடம் இருக்கும் போதாமை, இயலாமை போன்றவற்றின் பகுதிதான் நான். அந்த காலகட்டத்தில் எனக்கிருந்த இலக்கியத்துடனான பரிச்சயத்தினால் மொழியுடனான அக்கறை, பிரக்ஞை இருந்தது. அப்படியான சூழ்நிலையில்தான் எனது முதல் தொகுப்பு வெளிவந்தது. அதன் பிறகு நீட்சி, கல்குதிரை போன்ற பத்திரிக்கைகள் மொத்த தமிழ் பரப்பிற்குள்ளும் மிகப்பெரும் அலையை உண்டாக்கியது. பலரும் எழுதினார்கள். நான் கொஞ்சம் பிந்தி வந்தேன். கோவை ஞானியுடனான சந்திப்பு மிக முக்கியமானது. எனது பள்ளிப்பருவத்தில் நான் தொட்டுப்பார்க்க விரும்பிய புத்தகங்கள், படிக்க வேண்டிய புத்தங்கள் எல்லாம் ஞானியின் வீட்டில் இருந்தன. அப்புத்தங்களைக் காண்பது ஒரு கனவு நிலை போல இருந்தது. வாசிப்பு ஆர்வத்துடன் ஒரு சிறுவன் வரும்போது, ஒரு வயதான மனிதர், புத்தங்களுக்கு நடுவே பழைய நாற்காலியில் அமர்ந்த படி அவனை வரவேற்கிறார். அது அந்த இளைஞனுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய அற்புதம். அந்த அற்புதம் எனக்கு நடந்தது. அந்த மாயத்தை நான் தொட்டுணர்ந்தேன். ஞானியின் விரல்கள் தமிழ் விரல்கள்தாம். பல நேரங்களில் தமிழ் தேசிய விரல்கள்தாம். ஞானியை நான் ஏன் தொட்டேன் எனத் தெரியவில்லை. ஞானியின் விரல்களைத் தொட்ட எல்லோருக்குமே தெரிந்திருக்கும்; அவரது கரங்கள் கூழாங்கல்லைத் தொடுவது போல மென்மையானது. ஜி.நாகராஜன், செல்லப்பா என எனக்கு விருப்பமான புத்தகங்களெல்லாம் வாசித்தேன். நான் என்ன வாசிக்க விரும்புவேன் எனும் பட்டியல் ஞானியிடம் இருந்தது. எனக்காக அவர் பரிந்துரைப்பார். ஜி.நாகராஜன், பிரமிள் என்றால் விடுவதில்லை. அவரிடமிருந்து அவர் கண்டறிந்த சாதக பாதகங்களை நான் அறிந்துகொள்ள ஆர்வமாயிருந்தேன். அது சிறுபத்திரிகைகளின் காலம். தொண்ணூற்றியாறில் நிகழ் நிற்கிறது. மீட்சி, கல்குதிரை அளவிற்கு பெரும்பணியை செய்ய வில்லையென்றாலும் சில விஷயங்கள் குறிப்பிடத்தகுந்தது. அறிவியல், விங்ஞானம், மார்க்சியம் குறித்த கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவை சில கருதுகோள்கள் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தன என இப்போது பார்க்கும் போது புரிகிறது. அந்த காலப்பரப்பில், நிகழின் இடம் முக்கியமானது. நிழல் நிற்கின்ற சமயத்தில்தான் எனக்கு ஞானியுடன் பழக்கம். அதன் பின்பாக, தமிழ் தேசிய ஞானியாக அவர் மாறும் போதுதான் எனது முதல் புத்தகம் வெளியாகிறது.
மார்க்சியவாதிகளுக்கும் சிறுபத்திரிக்கை சார்ந்த நவீனத்துவத்துக்கும் இடையிலான வாதங்கள் அக்காலகட்டத்தை ஒரு தீவிரமான அதிர்வில் வைத்திருந்ததா. உங்களது வளர்ச்சி அதனூடாக எப்படி அமைந்தது.
அந்த சமயத்தின் பெரிய வீச்சுகளில் ஒருவர் சுந்தர ராமசாமி, இன்னொருவர் ஞானி. சுந்தர ராமசாமி, ஒரு பெரிய எழுத்தாளர். ஞானி, ஒரு அறிவாளர், தமிழ் அறிஞர். சுந்தர ராமசாமியின் 'ஜே ஜே சில குறிப்புகள்' குறித்து எதிர்மறையான கருத்துகளை சிலர் வெளியிட்டாலும், அதையெல்லாம் மீறி அதன் மீது ஒரு வசீகரம் இருந்தது. ஜெயகாந்தனின் நாடகீயமான வசீகரத்தை சுந்தர ராமசாமி வேறொரு ஆழமான தளத்திற்கு கொண்டு சென்றார். வ.வே.சு ஐயர் காலத்திலிருந்து சிறுகதையின் தன்மை இங்கே வேறொன்றாக உருவாகி வந்தது. அவருக்கு பிரெஞ்சு நேரடியாகத் தெரியும். புதுமைப்பித்தன் மிகப்பெரும் உழைப்பை நிகழ்த்துகிறார். க.நா.சு பல நூறு நூல்களை மொழிபெயர்த்தார். அப்படி கொந்தளிப்பான சூழல் அது. என்னுடையதும் க.நா.சுவின் மரபு வழி வந்ததே. கம்யூனிசம் சார்ந்து அல்லாமல் ரசனை சார்ந்து உருவாகியது. ரசனை சார்ந்த இயக்கம். அந்த இயக்கத்திற்கும் ஞானியின் இயக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அவரிடம் இடதுசாரி தன்மையும் அழகியல் தன்மையும் இருந்தது. க.நா.சு, பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன் என எல்லோரிடமும் நெருக்கமாக இருந்தவர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியின் படைப்பில் ஒரு உக்கிரம் இருந்தது. நாளைய வெளிச்சத்தை இன்றே தொட்டுவிட்டது போல. அவரது கதைகளை அப்போது படிக்கும் போது ஒரு மேஜிக் இருந்தது. அது இல்லையென்று இப்போதும் சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் மலர் கொண்டுவந்தார் சுந்தர ராமசாமி. பசுவைய்யா எனும் பெயரில் அவர் எழுதிய கவிதைகளும் வேறு தன்மையில் இருந்தன. ஞானி , சு.ரா இருவரிடமும் வேறு வேறு தன்மைகள் இருந்தன. இவர்கள் இருவரும் எல்லோரிடமும் இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு கலவையான மனநிலைதான் எனக்கிருந்தது.
இப்போதைய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டும். ஆவேசமான, தீவிரமான போக்கு இப்போது இருக்கிறதா? ஆனால் அப்போது இருந்தது. லட்சியத்தின் கனல் பொங்கிய காலம். பத்து பேரை கணக்கில் எடுத்துக்கொண்டால் இருவரிடம் கம்யூனிசப் புத்தகம் இருக்கும். தேநீர் அருந்திக்கொண்டிருக்கும் நால்வரில் ஒருவன் வேறு மாதிரியான சமிக்ஞையோடு இருப்பான். அந்த காலம் கொடுத்த எழுச்சி அப்படி. அது முடிந்து போன பருவத்தின் கடைசி தலைமுறை குழந்தைகளாக சிலர் தொண்ணூறுகளின் இறுதியில் வருகிறார்கள். வானம்பாடி காலத்திலும் கூட இப்படித்தான். ஏதாவது ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்ற கனவு. ஆனால், எதுவும் மாறாத போது வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. தொண்ணூறுகளில் வேறு மாதிரியான ஒரு சூழல் வந்தது. மொத்த சூழலுமே தன்னை பரிசோதனை செய்துகொள்வதானது. இப்போதுள்ள சாரு அல்ல, முனியாண்டி எனும் பெயரில் எழுதியவர். எஸ்.ரா, ஜெயமோகன் என அந்தக் காலத்திய இளைஞர்கள். ஆட்டம் முடிந்துவிட்டது என சொல்லும் போது, இன்னும் இல்லை என காய்களைப் போட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள். அந்த சூழலுக்கு வேறு மாதிரியான ஒரு பயணம் இருந்தது. மொத்த உலகச் சூழலும் கூட வேறு மாதிரியாக இருந்தது. கல்குதிரை, நீட்சி மூலமாக காஃப்கா, காம்யு, மார்குவேஸ், போர்கேஸ் என இங்கே பலரின் படைப்புகள் பாதிப்பை நிகழ்த்தின. தொண்ணூறுகள் குறித்து சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரு அறைக்கு செல்வதுண்டு, ஏராளமான இடதுசாரி நண்பர்கள் கூடும் அறை. பின்நவீனத்துவத்தின் வரவிற்கு பின்பாக அந்த அறையின் போக்கே மாறியது. அதே நண்பர்கள், அதே அறை. ஆனால் வேறு மாதிரியான விவாதம். சண்டை, அடிதடி என கொந்தளிப்பான சூழல். மொத்த சூழலுமே அப்படித்தான் இருந்தது. மொழியில் நிகழ்ந்த மாற்றம் என்பது எனக்கு மட்டுமல்ல, மொத்த சூழலுக்கே நிகழ்ந்த மாற்றம். அதிலிருந்து விலகியிருந்தவர்கள் எல்லாம் பின்தங்கியிருந்தார்கள் எனலாம்.
இந்தப் பருவத்தில் உங்கள் கவிதைக்குள் மொழி சார்ந்து நீங்கள் பின்தொடர்ந்த முன்னோடிகள்..
எல்லாருக்கும் ஆதர்சம் என யாரேனும் நிச்சயம் இருக்கக்கூடும். தொன்னூறுகளில் முகம் பிரசித்தி பெற்ற கவிஞர்களான பிரமிள், அவரின் தாக்கத்தில் வந்த தேவதேவன். நெருப்பில் காய வைத்த வாள் போன்றது பிரமிளின் மொழி. தேவதேவனின் மொழி அப்படி இல்லை. நெடு நேரம் அருவியில் குளிப்பது போன்றது அவரின் மொழி. தேவதேவனைப் போல பிரமிளிடம் ஒரு மெய்யியல் தன்மையான ஆன்மீக வயப்பட்ட குரல் கிடையாது. தேவதேவனோ எந்த ஒரு காட்சியோடும் ஒன்றிப்போய் ஒரு மெய்யியல் தன்மையை அடைந்துவிடுவார். அந்தத் தன்மை பெண் கவிஞர்களிடம் சொல்லப்போனால் தேவதேவனின் பாதிப்பில் வந்த குட்டி ரேவதியும் உள்ளது. பிரமிளின் தன்மை நிறைய பேரிடம் உள்ளன. நையாண்டி, பகடி, வசனம் மூலம் சிறிய விஷயத்தை திறப்பாக மாற்றும் கவிதைகளை விக்ரமாதித்யன் எழுதினார். எனது முதல் தொகுப்பை விக்ரமாதித்யனிடம்தான் தந்தேன். போக வேண்டிய வேறு இடங்கள் இருக்கின்றன, போகணும் என்றார். ஆமாம் உண்மை. அதன் பிறகு ஞானக்கூத்தன், தேவதச்சன், அப்பாஸ், பாதசாரி, சத்யன், சமயவேல், பிரம்மராஜன். இன்னும் பலர் இருக்கிறார்கள். சில பெயர்களை மறந்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் இவர்களை நிச்சயமாக வாசித்துவிடுவீர்கள். ஆனால் இவர்களிடம் இருந்து நேரடியாக பாதிப்பு என சொல்ல முடியாது. ஏனென்றால், நீங்கள் தொடுகிற விஷயத்தில் ஆழமாக இறங்க வேண்டும். இல்லையென்றால் சுயம்புவாக திகழ முடியாது. ஆனால் அவர்களை மதிக்கிறேன். அவர்களெல்லாம் நிலத்தில் தூவப்பட்ட விதைகள்தாம். அதில் யாரையும் விட்டுவிட முடியாது. நிறைய பேர் இருக்கிறார்கள். சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்.
அதே போல நகுலனைச் சொல்ல வேண்டும். நமது இருப்பிற்கும் இன்மைக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருக்கும் மனம் அவருடையது. அவர் ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருக்கும் மரம் போல. லட்சக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு நிலத்தில் பெய்யும் மழை நகுலன். அவரைத் தவிர்க்கவே முடியாது. நமது எல்லா மரபுகளுடனும் சேரக்கூடியவர். டி.கே.துரைசாமி, நகுலனாக மாறுமிடம் அற்புதமானது. நான் மிகவும் கொண்டாடக்கூடியவர். நகுலனை ஏதோ ஒரு வகையில் தொடுவதென்பது சொந்த வீட்டிற்கு சென்று வருவது போல.
தொண்ணூறுகளில் சமூக விமர்சனமும் அழகியல்வாதமும் எதிரெதிர் நிலைகளில் இருந்து நெகிழ்ந்தன. புதுக் கவிதை என்பது இக்கட்டத்தில் நவீன கவிதையாக முன்வைக்கப்பட்டது, தொண்ணூறுகளில் உருவான நவீன கவிதை என்னும் விழிப்பு முந்தையதிலிருந்து என்ன சாரத்தில் மாறுபட்டது ?
க.நா.சு காலத்திலேயே இந்த விவாதங்கள் நிகழ்ந்தன. நவீன கூறுகள் குறித்து பிரமிள் நிறைய எழுதியிருக்கிறார். நமது உணர்வு(sense) ரொம்ப முக்கியமானது. கவிதை பல நேரங்களில் மொழித்துண்டுகளாக, பல நேரங்களில் ஞாபகங்களாக, கனவுகளாக இருக்கிறது. சொற்கள் தான் கவிதை என நம்பிக்கொண்டிருந்த குழுக்கள் பல இருந்தன. சொற்கள் என்பது முதன்மையாக பல இடங்களில் முன்னிறுத்தப்பட்டன. செவ்வியல் மரபிலும் சந்தம், ஒலி என சொற்களுக்கு முக்கியத்துவமிருந்தது. பல கூறுகளில், நவீனம் என்பது உலகளாவிய நினைவில் உள்ளது. அதில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ழாக் பிரவெரின் சொற்களாக இருக்கட்டும், பிரம்மராஜன் மொழிபெயர்த்த உலகக் கவிதைகளாக இருக்கட்டும், இவையெல்லாம் மொத்த சூழலுக்கும் பாதிப்பை நிகழ்த்தியது. போர்ஹேவை வாசிக்கும் போது இந்த மொத்த உலகமும் புனைவு என்பதை நம்ப முடிந்தது. கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்போது புனைவு மாதிரிதான் தெரிகிறது. எண்ணற்ற வாகனங்கள், பண்டங்கள், சாலையில் எண்ணற்ற பேர் சென்றுகொண்டிருக்கிறார்கள். இப்படி இவையெல்லாவற்றையும் பார்க்கும் போது இதை புனைவு என்று சொல்வதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தோ வேறுபாடோ கிடையாது. மொத்த சமூகமுமே மரணமடைந்ததாக அவநம்பிக்கைகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்பாக இருந்தன. மார்க்குவேஸ் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார், 'வேறு நாட்டவருக்கு எங்களைக் காணும் போது வித்யாசமாக தோன்றும் விஷயங்கள் எங்களுக்கு அன்றாடமாக இருக்கிறது'. அவரை மாய யதார்த்தவாதி என ஒற்றைத் தன்மையில் அடையாளப்படுத்தும் போது, 'உலகம் என்னை இவ்வாறு பார்க்கிறது, இது கொச்சைத்தனமாக இருக்கிறது, எனது மக்கள் ஒவ்வொரு நாளும் செய்வதைத் தான் நான் எழுதுகிறேன்' என்றார். சூழல் முழுவதும் வேறொன்றாக உருமாறிய போது, ஒரு இடைவெளி இன்னொரு இடைவெளியால் நிரப்பட்ட போது ’ நவீனம்’ என்ற அந்த சொல் முக்கியமான ஒன்று. நெடிய காலமாக அந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. க.நா.சு, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், பிரமிள், நகுலன் என அந்த சொல்லை எல்லோரும் தொட்டார்கள். அதற்கு மரியாதை தந்தனர். அந்த சொல்லின் குரலை வீரியத்துடன் தொட்டவர் புதுமைப்பித்தன். அந்த சொல்லிற்குள் இருக்கும் விஷயத்தை ஒவ்வொரு காலத்திலும் செய்திருக்கிறார்கள். கவிதை, கதை , நாவல் என எல்லா விஷயங்களிலும் நடந்திருக்கிறது. நாவல் மட்டும் கொஞ்சம் பின்தங்கி இருப்பதாக தோன்றுகிறது. தற்போதுதான் அதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழில் நவீனத்துவம் கடந்த கவிதை என்ற ஒன்று உருவாகியுள்ளதா? 90 களுக்குப் பிறகு தமிழ்கவிதையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அந்த உருமாற்றத்தின் அடித்தளம் என்ன ?
கவிதைக்குள் இப்படியான அலகுகள் எப்படிச் செயல்படுகிறது என்பதில் எனக்கு உறுதியில்லை. ஒரு விமர்சன ஆய்வு முறைகளில் காலத்தைப் பிரிக்கும்போது, காலத்தினுடைய உருமாற்றங்களைப் பிரிக்கும் போது நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற அறிதல்முறைகள் முக்கியமானவைதான். ஆனால் என்னைக் கேட்டால் செவ்விலக்கியங்களிலேயே முழு காலத்திற்குமான சில வரிகள் எழுதப்பபட்டுவிட்டன . அதே போல நீங்கள் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் அது ஒரு உருமாற்றத்தினுடைய வடிவம்..80 களில் இருந்து 90 களுக்குள் நகரும்போது மொழி வேறொன்றாக , அப்ஸ்ட்ராக்டாக , மேஜிக்காக மாறுகிறது. அந்த கட்டத்தில் கவிதை மட்டுமல்ல , வரலாறு தன்னை புதிய மொழியில் பேச தொடங்குகிறது. அதே போல தத்துவங்களும் தன்னைப் புதிய மொழியில் புதுப்பிக்கின்றன. அந்த வகையில் கவிதை வேறு மாதிரியான ஒரு மொழியில் உருமாறுகிறது. அந்த உருமாற்றத்திற்குள் பிரமிளினுடைய பங்களிப்பு , தேவதேவன் வழியாக உருவான ஒரு மொழி எல்லாம் இருக்கிறது. அந்த மாற்றங்களில் ஒரு புள்ளியில் அந்த கால மனுஷ்யபுத்தினின் ஒரு தனியறைக்குள்ளான இருப்பு, இந்த சமூகம் தன்னை உளவு பார்க்கிறது என்பது போன்ற ஒரு சென்ஸில் எழுதப்பட்ட கவிதைகள் அந்த முறையில் உருமாற்றமடைந்த ஒரு புதிய வடிவம் இருக்கிறது. என்னைக் கேட்டால் இன்று வரை மனுஷ்யபுத்திரனுடைய ஒரு ஸ்டைலில் எழுதக்கூடியவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அப்படி ஒன்று உருவாகி வந்துள்ளது. ஆனால் பிரமிள் மாதிரி ஒரு வடிவம் தொடர வில்லை. பிராமிளோட தொடர்ச்சியாக அந்த மொழி, அதன் வடிவம் என ஒன்று உருவாகவில்லை.அடுத்து வெவ்வேறு வகையான மொழிபுகள் கவிதையில் உருவாகின. நீங்கள் சொல்லும் அந்த பீரியடில் மணிவண்னனின் ஒரு தனித்துவமான மொழி, யவனிகாவின் ஒரு வடிவம், சங்கரராமசுப்பிரமணியன்,..என்.டி. ராஜ்குமார்.. இவெயெல்லாமே வெவேறு தன்மைகள் உள்ளவை. இதே போல பெண் கவிஞர்கள் மாலதி மைத்ரி , குட்டி ரேவதி, போன்றவர்கள் ஒரு மொழியில் எழுதினார்கள். அப்போது கிருஷாங்கனி, பெருந்தேவி போன்றவர்கள் மிகவும் இருண்மையான ஒரு அகவயமாக படிமத்திற்குள் எழுதினார்கள் . எஸ். சண்முகமும் அப்படி எழுதியுள்ளார். க்ருஷாங்கனி..எஸ் சண்முகம் இருவருமே ஒரு காலத்தினுடைய இரு வேறு தன்மைகளைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். ஆனால் அதற்குள் ஒரு ஒருமையையும் நீங்கள் காண முடியும். பிரம்மாராஜன் அன்று கைக்கொண்ட மிகத் தனித்துவமான ஒரு தீவிரமான மொழி..அது மிகவும் இன்னராக இருந்தது. அவருடைய கடல் பற்றிய கவிதைகள், மஹா வாக்கியம், இந்த தொகுப்புகள் எல்லாமே ஒரு வெளியை உருவாக்கின. நவீனத்துவத்தினுடைய மொழியைக் கடந்து வேறொரு வடிவம் என்பது ஒன்று உருவானதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிரபஞ்சமான ஒரு மொழி ஒவ்வொருவருக்குள்ளேயும் உருவாகி வந்துள்ளது. . பிரம்மராஜனின் தன்மையிலான ஒரு மொழி பின்னர் ராணிதிலக்கிடம் வேறொரு சாயலில் இருந்தது. பின்னர் வந்த அவரது கவிதைகளில் அப்படி இல்லை. அது பெரிய அளவு உருமாற்றமடைந்தது. அன்று எழுதத் தொடங்கிய எல்லோருமே பின்னர் வேறொன்றாக உருமாற்றமடைந்தார்கள். தீயுறைத்தூக்கத்தில் பெருந்தேவி வைத்த மொழிக்கும் இன்று அவருடைய கவிதைகளையும் பார்க்கும் போது ரொம்ப எளிமையாக,, வேறொன்றாக அவர்கள் உருமாறியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் எழுதும் கவிதைகள் அதன் வெளிப்பாடுகள் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.
உங்கள் கவிதைகளில் தன்னிலை ஒரு ஸ்தூலமான அம்சத்தில் இருப்பதில்லை. பொதுவிலிருந்து மறைந்துகொள்ளும் இயல்புடையதாக ரகசியமும் தனிமையும் கொண்டதாக அது முன்வைக்கப்படுகிறது..உங்கள் கவிதைகளில் இயங்கும் தன்னிலைப் பிரக்ஞை என்பது என்னவாக உள்ளது ?
எனது அம்மா வழி பாட்டி.. நன்றாக இருந்தவர். திடீரென மனநோய் முற்றுகிறது. மோசமான வாழ்நிலையில் இருக்கிற சாமானியனாக எனது குழந்தைப்பருவத்தில் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு துயரமான நிலை. அனுதினமும் ராமாயணம் வாசிக்கும் பழக்கம் உள்ள பாட்டி. அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துவரும்போது எவ்வித தன்னுணர்வுமில்லை. திடீரென ஒரு நாள் காணாமல் போய், இறந்துபோனார். எப்படி இறந்தார்கள் என்பதே தெரியாது. அதன் பிறகு எனது உடன் பிறந்த சகோதரருக்கும் இதே போல மருத்துவம் செய்துகொண்டு வந்திருந்தோம். திடீரென குணமாகும். மீண்டும் நோய் முற்றும். இதெல்லாம் என் வாழ்க்கைக்குள் இருந்த விஷயம். நாம் நினைக்காதது, நம்மால் தொடமுடியாதது என ஏதோ ஒரு விஷயம் நம் மீது இறங்கிவிடுகிறது. நம்மோடு இருக்கிறது. திட்டமிட்டெல்லாம் எதையும் பண்ண முடியாது. எனது கவிதை மனம் அப்படியானதுதான். தனிமையில் புலம்பக்கூடியதுதான். அது என்னையும் மீறி வந்துவிடுகிறது. எனது குழைந்தைப்பருவத்தின் கூறாக இருக்கலாம். அதன் சாரம் இறங்கியிருக்கலாம்.
நான் நினைக்கிறேன் ..ஸ்தூலமக கவிதையில் தன்னை காட்ட முடியாததால்தான் அவன் எழுதவே செய்கிறான்..பொதுவாகவே கவிதை என்பதே ஒரு ரகசிய பிரக்ஞைதான். ஒரு மிக ஆழமான ரகசிய பிரக்ஞை. கவிதையை அவன் தொடுகிற தருணம் முழுக்க முழுக்க அருவமானது. பிற உயிரிகள் ,பல நிறங்கள் , பலவிதமான உணர்வழுத்தங்கள் ..எல்லாமே அதற்குள் வந்து அப்ஸ்ட்ராக்டாக விழுந்துவிடும். அந்த கணத்தை ஸ்தூலமாக ஒரு புகைப்படம் போல கவிதையில் வைக்க முடியாது. அப்படி சுயம் முனைப்பாக இருக்கும் கவிதைகள் எண்பதுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது ஸ்தூலமான கவிதைகள் இருக்க வாய்பில்லை.இன்றைக்கு இருக்கும் ஒரு சமூக மனிதன், நவீன மனிதனுக்கு சுயமே இல்லை. சுயம் என்பதே பலவாக வெட்டப்பட்ட தன்மையில்தான் இருக்கிறது. அது ஒரு கலவையாக சிதற்லானதாக மாறிவிட்டது. முன்பு யதார்த்தவாத காலகட்டத்தில் இருந்தது போல் அது இல்லை. அன்று வந்த கவிதைகள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் சுய அடையாளத்தை முன்னிறுத்தியவைதான். நமது காலத்துப் பிரக்ஞையில் யாருக்குமே சுயம் என்ற ஒன்று இல்லை. சுயம் வீழ்த்தப்பட்டுள்ளது. மனிதன் பலவாறாகக் கூறுபோடப்பட்டிருக்கிறான். வரலாற்றிலிருந்து , அரசியலிலிருந்து அவனுடைய அன்றாட ஸ்திதி என்பது பல நிலைகளில் நொறுங்கிவிட்டது.. இன்று உள்ள மனிதனின் மனம் நொறுங்குண்ட ஒரு சுயம்தான். அதற்குள் அவனது முகம் இல்லை. கை கால்கள் இல்லை . அவன் தான் என்று எதை முன்னிறுத்த முடியும். இன்றைக்குள்ள பொதுவான கவிதை மொழியே அப்படித்தான் உள்ளது.
ஒரு வலி மிகு பிரக்ஞை , துயர அழுத்தம் என்பது உங்கள் கவிதைகளில் சாராமாக உள்ளது. பிரபஞ்சம் வாதையும் நோய்மையுமானதாக காட்சியளிக்கிறது. தொண்ணூறுகளில் கவிதைகள் சற்று தளர்த்திக் கொண்டு கொஞ்சம் மகிழ்ச்சியாக பேசத் தொடங்கிய காலத்திலும் உங்கள் கவிதைகள் தொடர்ந்து துயரார்ந்த அழுத்தத்தோடு இருந்துள்ளதல்லவா ?
மிகவும் மழிழ்ச்சியாக இருப்பதாக பாவனை செய்துக்கொண்டிருக்கும் நிறைய மனிதர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னைச் சுற்றி இழப்புணர்வு மாதிரியான விஷயங்களே நடக்கின்றன. குழந்தைப்பருவத்திலிருந்தே அப்படியான சூழல்தான். நமது சமூகத்தின் மொத்த சூழலுமே தன்னம்பிக்கையுடன் கொண்டாட்டமாக இருப்பதாக தோன்றவில்லை. ஒரு வெடிப்பிற்குள்ளாக இருப்பதாகத்தான் இருக்கிறது. அப்படித் தான் உணர்கிறேன். அழிந்துகொண்டிருக்கும் ஒரு இடத்தில், தொடர்ந்து பெய்த மழையில் விரிசலுறும் இடத்தில்தான் இருக்கிறேன். நான் பார்த்த விஷயங்கள் அப்படி. இன்னொருவரை ஒப்பிட்டு நான் சொல்ல முடியாது. மொழியின் சாத்தியங்கள் ஏராளம். நான் பிளவில் அகப்பட்டவன்தான். அதிலிருந்து தப்பித்து வர முடியாது. என்னை கைபிடித்து யாரும் இழுக்க முடியாது. இழுத்தாலும் வர மாட்டேன். அந்த மாதிரிதான் நான்.
வியாதி ரொம்ப அதிகமாக உள்ளது. வியாதியை மறைத்துக் கொண்டு ரொம்ப நன்றாக இருப்பது போல இருக்கிறோம். ஏழையாக இருந்தால் மலிவான வாசனை பூச்சுக்கள், கொஞ்சம் வசதியாக இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் செண்ட்டெல்லாம் அடித்துக்கொள்ளலாம். நிச்சயமாக இது ரொம்ப நொய்மையாகத்தான் உள்ளது. மொத்தமாக நோய்மையுடன் இருக்கிறார்களா என்று கேட்டால், அப்படி சொல்ல முடியாது. மொத்தமே வியாதியாக இருந்தால் சிக்கல் ஆகிவிடும். நடமாடவே முடியாது. ஒரு தேநீர் டம்ளரை எடுக்கவே இரண்டு வருடம் ஆகிவிடும். ஒரு சிகரெட் பிடிக்கவே ஒரு ஜென்மம் ஆகிவிடும். ஒரு சிகரெட் பிடிக்கிற அளவுக்கு, ஒரு தேநீர் குடிக்கிற அளவுக்கு, சாப்பிடுகிற அளவுக்கு, பேருந்து ஏறும் அளவுக்கு, வீடு சேறும் அளவுக்கு, தூக்கம் வரும் அளவுக்கு வலு உள்ளது. தூக்கம் வர மாட்டேன் என்கிறது. தூக்கமாத்திரை போட்டுக்கொள்கிறோம். அவ்வளவுதான்.
உங்கள் கவிதைளின் மாந்தர்கள் வீழ்த்தப்பட்டவர்களாக, உதிரிகளாக . சிதைந்து கொண்டிருப்பவர்களாக உள்ளனர். ஆனால் சிதைவின் வழியான ஒரு சாரம், மீட்சி நோக்கி நிற்கின்றனர். சிதிலங்கள் இருக்கக்கூடிய இடத்தின் வழியாக ஒரு வெளிச்சத்தை விடுதலையை சில கவிதைகளில் பார்க்க முடிகிறதே.
மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவனை ஏன் காப்பாற்ற வேண்டும்? மரணத் தறுவாயில் இருக்கும் நாம் ஏன் மீட்சியை விரும்புகிறோம்? இந்த மாதிரியான கேள்விகள் தான். ஏன் நாம் கவிதை எழுத விரும்புகிறோம்? இந்த மாதிரியான கேள்விகளின் சாராம்சம் என்னவென்று யோசித்தோமானால், இப்படியான சம்பவங்கள் நிகழவில்லையென்றால் உண்மையிலேயே அது மரணமாகிவிடும். அப்படி உண்மையான மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு அழகியலான சோக நாடகம்தான் கவிதை. அந்த மாதிரியானதுதான்.
உங்கள் கவிதைகளில், கடவுள் ஒரு மாந்தராக தொடர்ந்து வருகிறார். அவர் பற்றிய அங்கதமான ஒரு வரைபடம் இருக்கிறது. கடவுள் குற்றத்தரப்பாகவும் , சில நேரம் மரணமடைபவராகவும் உள்ளார். கடவுள் என்னும் ஒரு படிமம் எப்படி இயங்குகிறது ?
எனது பதினைந்தாவது வயதில். ஒன்பதாவது படிப்பதை நிறுத்தியவுடன். வெவ்வேறு மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் கடவுளையே சந்திக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதற்காக, கேரளாவின் எல்லையில் உள்ள பாம்பு பாறை என்கிற இடத்தில் இருக்கும் சர்ச்சுக்கு சென்றேன். அங்கே கிறிஸ்துதாஸ் என்கிற பாதிரியார், ஏழு நாட்கள் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்தால் கடவுளைக் காண முடியும் என்று கூறியதால் அதையும் செய்ய முற்பட்டேன். ஆனால் இறுதியில் கடவுளைக் காண முடியாததால் வெறுமை ஏற்பட்டது. அப்படியெல்லாம் கடவுளை சந்திக்க முடியாது என மிகப்பெரும் வெறுமை. ஏழு நாட்களுக்கு பின் சர்ச்சை விட்டு வெளியே வந்ததும் ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போல தோன்றியது. அந்த இடத்தில்தான் நீங்கள் கூறிய விஷயம் நிகழ்ந்திருக்கலாம். கடவுள் ஒரு எதிர்நிலையில் இருக்கிறார். சர்ச், பைபிள், வாசிப்பு, ஜெபம் இவற்றில் ஒன்றுமே இல்லை என உணர்ந்தபோது பெரும் வெறுமை ஏற்பட்டது. இது சிக்கலானது. எதிலிருந்து வெளியே வர நினைத்தோமே அதிலேயே மீண்டும் போய் விழுவது.
கடவுள் ஒரு மிகப்பெரும் படிமம். புனைவுகளில் சரி கவிதைகளிலும் சரி. கடவுள் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரும் படிமம். நிறைய பேர் இந்த படிமத்தை வெவ்வேறு விதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். நிறைய விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனது கடவுள் ஒரு ஸ்தூலமான பார்வையில் உருவானதல்ல. பெரியார் பார்த்த கடவுளோ, புத்தர் பார்த்த கடவுளோ அல்ல. நான் பார்க்கும் கடவுள், ஒரு மாஜிக்காக நான் கற்பனை செய்த படிமம். எனக்கும் அந்தப் படிமத்திற்கும் இடையேயான ஒரு எதிர்மறையான உரையாடல் கவிதைகளில் வந்துவிடுகிறது.
கிறிஸ்துவம் சார்ந்த ஒரு ஞாபகமும் மொழியும் உங்கள் எழுத்தில் எப்படி இயங்குகிறது. ?
ஆரம்பித்திலேயே ஒரு கதை சொன்னேன் அல்லவா? அப்படியான சூழலிலிருந்து தப்பிப்பதற்காக, நவீனத்துவம் உருவாக்கிய வேறு சில போதை வஸ்துகள் நோக்கி போவது இருந்தது; அந்த மாதிரியான நண்பர்கள் இருக்கும் சூழல்கள். அட்டவணை கிழிக்கப்பட்டதால் நான் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் தினமும் ஏதேனும் ஒரு ஆரம்ப பள்ளியின் முன்னோ அல்லது மேல் நிலைப் பள்ளியிலோ நின்றுகொண்டிருப்பேன். எனது குடும்பத்தினர் என்னை அடித்து வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். எனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னை விட பத்து வயது மூத்தவர். அவர் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். ஆறாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் என்னிடம் இருந்தது. சிவப்பு அட்டை பைபிள். அவர் கிறிஸ்துவ மதத்தைப் பற்றிக் கூறிய விதத்தினால், அதில் தீவிரமாக இறங்கத் தொடங்கினேன். ஆண்டவர் வருகை, ஏசுவே அனைவரையும் மீட்பவர், ஏசு நாதர்தான் கடவுள் என நம்ப ஆரம்பித்தேன். அவர் கூறிய விதத்தில் உந்துதல் ஏற்பட்டு எனது கையில் ஊசியை வைத்து சிலுவை போட்டுக்கொண்டேன். பாதிரியார் ஆகிவிட முடிவெடுத்து, சர்ச்சுக்கு செல்ல தொடங்கினேன்.
நான் அதிகமாக வாசித்த நூல்களில், மிகவும் நெருங்கி வாசித்த நூல்களில் ஒன்று பைபிள். நிகண்டு, அகராதி போன்றவற்றை நான் பயன்படுத்துவதில்லை. நிகண்டுகள், அகராதிகள் பயன்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கிறார்கள். நான் பைபிள் மொழிக்குள் சென்றது திட்டமிட்டு நிகழவில்லை. எனது இளமைப்பருவத்தில் பைபிள் கிடைக்கிறது. அச்சமயத்தில் மிகத் தீவிரமாக அதை நேசித்துவிட்டேன். மிகத் தீவிரமாக. மணிக்கணக்காக பிரசங்கம் தருமளவிற்கு வாசித்திருக்கிறேன். நான் ஒவ்வொரு கவிதைகளிலும் வேறு வேறு மாதிரியான மொழிகளை முயன்றேன். சில கவிஞர்களை கவனித்தீர்களானால் எந்தக் கவிதை எழுதினாலும் ஒரே மாதிரியான மொழியைத் தான் காண முடியும். ஏன் அப்படியென்றால் அந்த சாரத்தில் அவர்கள் உரமேற்றப்பட்டுவிட்டார்கள்.
உங்கள் கதைகள், கவிதை இரண்டிலும் நிலப்பரப்பு அதன் ஸ்தூலத் தன்மையில் இல்லை. குறிப்பிட்ட ஒரு பண்பாட்டு நிலம் இல்லை. உதிரியான மனிதர்கள் அலைக்கழியும் ஒரு பெருநகரப் பரப்பு குறைந்த தகவல்களுடன் முன்வைக்கப்படுகிறது. உங்களது நிலப்பரப்பு குறித்து?
மொத்த உலகமே காஸ்மோபாலிட்டன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும்போது, வளர்ந்துவரும் பையன் நான். கிராமத்துடைய நினைவுகளை , என் ஊரில் அம்மாவுடைய அம்மா வீட்டில் தான் பார்த்திருக்கிறேன். அப்புறம் செவ்விலக்கியப் புனைவுகளில் பார்த்திருக்கிறேன்.. டால்ஸ்டாய், தாஸ்தவெஸ்கி நாவல்களில்,வான்காவின் ஓவியங்களில் பார்த்திருக்கிறேன். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஊரில் இருந்தேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு பஞ்சாலைகள் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக தமிழ்நாட்டில் வேரூன்றிய பகுதிகளில் கோயம்பத்தூரும் ஒன்று. முக்கியமான சில தலைவர்கள் அங்கு இருந்திருக்கிறார்கள். நிறைய விவாதங்கள் நடந்த இடம். நிறைய தொழிலாளர்கள் இருந்த இடம். ஒரு பீதியூட்டக்கூடிய நகரம். நகரம் எப்படிக் ஒருத்தரைக் கைவிடும் என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து பார்த்திருக்கிறேன். எனது பள்ளிப்படிப்புக்கு பிறகு, 20 வயதுவரைக்கும் பல வேலைகள் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் வேலைக்காகப் போயிருக்கிறேன். என் ஞாபகத்தில் உள்ள நிலமாகட்டும்..என் நினைவுகளின் அடியாழத்தில் இருக்கிற பாதைகளாகட்டும்.. எல்லாம் மண்சாலைகள் முடிந்துபோய் தார்ச்சாலைகள் தோன்றுகின்ற , தார்களும் , அந்த டேங்குகளும், ட்ரம்களும் இறக்கின அந்தத் தெருக்கள்தான். மின்சாரமே இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். மின்சாரம் எப்போது வருமென்று காத்துக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது அது ஒரு பெரிய நகரம். மிகப்பெரிய மக்கள் பெருக்கம், ஏராளமான வாகனங்கள், எல்லாப் பகுதிகளும் ஜனம் நெருக்கடியுள்ள பகுதிகள். இம்மாதிரியான இடங்களில்தான் வளர்ந்திருக்கிறேன். எனக்கு கிராமத்தின் பின்புலம் என்பது ஒரு மேஜிக்கான ஒன்றுதான். எங்காவது மிஸ்டிக்காக கனவிலே வந்தாதான் உண்டு. மற்றபடி கிராமம் வாசிக்கப்படவேண்டிய டெக்ஸ்ட்தான், இனிவரும் தலைமுறைக்கு கிராமம் என்பது ஒரு பிரதிதான். மொத்த நிலப்பரப்பும் ஒரு கடந்த ஞாபகமாக மாறி.. நமது காலத்தில் இதையெல்லாம் பயிரிட்டார்கள்.. விதைத்தார்கள், இந்தச் செடியெல்லாம் போட்டிருந்தோம், இவையெல்லாம் அதிக மகசூல் தந்தது ..இவ்வாறான வாழ்க்கையை எங்காவது அருங்காட்சியகத்திற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவார்களென்று நினைக்கிறேன். அந்தமாதிரிதான் சூழல்தான் இருக்கிறது.
சமூகவயப்படுத்தப்படாத புனைவார்த்தமான அகநிலம் ஒன்றை உருவாக்கிகொள்கிறீர்களா ?
நிச்சயம் அப்படி ஒரு நிலம் இருக்கிறது. அதற்குள்தான் நான் வாழமுடியும். ஒட்டுமொத்த சமூகத்திற்குள்ளும் இவ்வளவு மக்கள் வாழும்..இவ்வளவு பேரிரைச்சல் மிக்க இடத்தில்.. வேறொரு மலையோ வேறொரு பிரதேசமோ இல்லையென்றால்.. நீங்கள் வாழவே முடியாது. இந்தப் பிரதேசத்தைக் கண்டுபிடிக்கிறதுக்குத்தானே நீங்கள் இன்னொரு நாவலைப் படிக்கிறீர்கள். இன்னொரு புனைவை நாடுகிறீர்கள். இன்னொருத்தருடைய கவிதையைப் படிக்க விரும்புறீர்கள். எல்லாமே ஒரு எத்தனிப்புதான். வாழ்தலினுடைய துடிப்பும் வேட்கையும் நம்மை வேறொரு நிலப்பரப்புக்கு கொண்டுசெல்லும். நம்மை இயக்குகிற இடமே அதுதான். எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் கலைஞர்களுக்கும் இதுதான் ஆதாரமே.
பல்வேறு சிற்றுயிர்கள் தொடர்ந்து உயிர்ப்புறும் பரப்பாக உங்கள் கவிதை உள்ளது, நிராதரவு, இருப்பின் வலி , நோய்மை என மனிதவயப்படுத்தப்பட்ட சுபாவங்களே அவற்றுக்கும் உள்ளன. . பிற உயிரிகள் குறித்த ஒரு தீவிரமான உணர்ச்சி கவிதைகளில் வெளிப்படக் காரணமென்ன?
மனிதன் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவை அத்தனையும் சிற்றுயிர்களுக்கும் இருக்கிறது. மனிதன் உட்பட அவனைச் சுற்றியுள்ள அத்தனை உயிர்களுமே ஒரு அளப்பெரிய கருணையில்தான் உயிர்த்திருக்கின்றன. ஏராளமான உயிர்கள் மதிப்பில் உயிர்களாகளாகவே இல்லை. வெறும் பொருட்களாக,பாலித்தீன் உறைகளைவிட கீழாக, மனித வாழ்வுக்கு அர்த்தமற்றதாக.. கவனிக்காமல் விடப்பட்டு எங்கோ தொலைந்துகிடக்கும் பென்சில்கள் போலதான் கிடக்கின்றன. உயிர்களைக் கொல்வதே கடுமையாக பீதியூட்டுகிறது..
அன்றாடம் பல்வேறு உயிர்களைப் பார்க்கிறோம். மழைபெய்கிற ராத்திரி முடிந்து அடுத்த நாள் காலையில் போனால் தவளைகள் செத்துக்கிடப்பதைப் பார்க்கலாம். சில நேரங்களில் நமது சமையல்கட்டிலோ, குளியலறையிலோ ஒரு வால் மட்டும் அப்படியே துடித்துக்கொண்டு இருக்கிறது. இதெல்லாம் நம்மை ரொம்பவும் தொந்தரவு செய்கிறது. எந்த உயிராக இருந்தாலும் கொல்லவே முடியாது. ராஜ நாகமா இருக்கலாம், காண்டாமிருகமா இருக்கலாம். சிங்கமா இருக்கலாம் எதாகயிருந்தாலும் அவற்றைக் கொல்லமுடியாது. எனது கான்ஸியஸ்னஸ்..மனமே அப்படித்தான் இருக்கிறது. ஒரு பட்டாம்பூச்சியை எறும்புகள் தூக்கிட்டுப் போறதைப் பார்க்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கும். நம்முடைய உடல் அழுகி நாற்றமடிப்பதைப் போல இருக்கும். எல்லா உயிர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. உயிர்கள் சாவதை எப்படி அர்த்தப்படுத்துவதென்று தெரியவில்லை. மிகப்பெரிய வன்முறையோட உலகத்துக்குள்ளேதான் நான் இருக்கிறேன். வன்முறை செலுத்தம் சூழலில் நானே வாழக்கூடிய நிர்பந்தங்களில் இருக்கிறேன். ஆனால் என்னால கொல்லமுடியாது. அதுதான் பிரச்னை. என் கவிதைகளும் அப்படி மாறியிருக்கலாம்.
இன்னொருபுறம் உயிரினங்களின் நன்மை/தீமையயற்ற வேட்கையும் வன்முறையும் கூட உங்கள் கவிதையில் அப்படியே வைக்கப்படுகிறது. ஒரு கவிதையில் ராஜ நாகம் இன்னொரு உயிரை வேட்டையாடும் காட்சி அதன் முழு வன்முறையோடு சொல்லப்படுகிறதே.?
மொத்த உலகமும் வேட்டையாடிக்கொண்டேதான் இருக்கிறது. பெரியவன் சிறியவனை..வலியவன் எளியவனை இப்படி.. பூச்சிகளை வேட்டையாடலாம், கொசுவை வேட்டையாடலாம், எறும்பை வேட்டையாடலாம். ஒரு யானையை தன்னந்தனியாக வேட்டையாடக முடியுமா. ஆனால் நூறு கரப்பான் பூச்சிகள் வீட்டுக்குள் வந்தாலும் கதவைச் சாத்தி ஏதாவதை ஒன்றைக் கொண்டு அவற்றைக் கொல்ல முடியும். அது பயங்கர பதற்றமாகிடும். இயற்கையின் காரண காரியங்களை அதன் ஆகமவிதிகளை அது இயங்குகிற அமைப்பு.. சுழற்சி இதெல்லாம் விசித்தரம்தான். இதுக்குள்ள என் மனம் இயங்கக்கூடிய தன்மையில் உயிர்த்திருப்பது மிகவும் துன்பமாகதான் உள்ளது. ஏதாவது சிறிதாக நடந்தலே பதற்றமாகிவிடுகிறது. என் சின்ன வயதில் என்னுடைய செல்லம்மா பாட்டி தள்ளாத வயதில் சிறுநீர்கழிக்க வெளியில் வருவார்கள். அங்கு ஒரு காக்கா இறந்து கிடந்து நிறைய காக்கா கிளம்பி வந்து சூழறதைப் பார்த்தால் என் பாட்டியால ஜீரணிக்கவே முடியாது. காக்கா வந்து கத்திக்கொண்டு இருந்தாலும் பாட்டியும் கத்திக்கிட்டும் கண்ணீர் வடிச்சுகிட்டும்தான் இருக்கும். நம் மூதாதையர்களும் அப்படித்தான் இருந்திருப்பார்கள். நமது மூதாதையர்கள் வேட்டையாடி இருக்கிறார்கள். வேட்டையாடியதை சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஞாபகத்துக்குள்தான் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன.
உங்கள் கவிதைக்குள் வரக்கூடிய தன்னிலையிடம் இளம்பருவத்துடைய கனவு, காதல், கொண்டாட்டங்கள் என்பதைவிட தந்தைமையின் கனிவு கூடிய ஒரு முதிர்ந்த தன்மை அழுத்தமாக உள்ளதே…
இளம்பருவத்தில் ஒருவன் தேவதையை சந்தித்துவிட்டானென்றால் பெரிய ஒரு வாளை வைத்து தன் கழுத்தை அறுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது கவிதையில் ரத்தமாக உருகி ஓடும். அந்தமாதிரி எனக்கு ஒரு பருவம் இருந்தது. அந்தப் பருவத்தில் நான் சந்தித்தெலாம் ஒரு பெரிய கனவில் நடந்த சம்பவங்கள் போன்ற நினைவுகளாக உள்ளன. அந்த நினைவுகள்தான் என் மொத்தக் கவிதையிலும் இயங்குகிறது. அது பெரிய இழப்புதான். ஆனால் அவற்றை நேரடியான ஒரு அர்த்தத்தில சொல்லமுடியாது. அதற்காகத்தான் கவிதை எழுதுகிறோம். காதல் என்ற சொல்லே மகிமையானதுதான். அது ஒரு பெருங்கனவு. அக்கனவை சந்தித்திருக்கிறேன், வாழ்ந்திருக்கிறேன். ஆனால் ஒருநாள் அந்தக் கனவைத் தவறவிட்டுட்டேன். இப்போதும் அதைப் பலவகையிலும் துரத்திக்கொண்டு இருக்கிறேன். என் அத்தனை பிரயத்தனங்களையும் அத்தனை சாதுரியங்களையும் கொண்டு அந்த இடத்தைத் தொடமுடியுமா என்று உக்கிரமாக துழாவிக்கொண்டுதான் இருக்கிறேன். அக்கனவுகளை எளிதாகத் தணிக்கை செய்யமுடியாது.
உங்கள் கவிதைகளில் தற்கொலைகளும் மரணங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன. அவை தத்துவத் தான்மையில் அல்லாது உலகியலான வாழ்தல் வேட்கையின் நீட்சியாக அமைந்தவை எனலாமா ?
எல்லாருமே தற்கொலையின் நுனியில்தான் இருக்கிறார்கள். அந்த இடத்தை தொடுவதற்கு நிறையப் பேருக்கு தயக்கம் இருக்கிறது அவ்வளவுதான். விவசாயிகள் தற்கொலையின் ஞாபகங்களோடுதான் தூங்கப் போகிறார்கள், தற்கொலையோட ஞாபகங்களில்தான் எழுந்திருக்கிறார்கள். அதேபோல இடப்பெயர்வால் இங்கு வேலைதேடிவரும் ஏராளமான பீகாரிகள், வட இந்தியர்கள் அவர்களும் அப்படித்தான். ஒரிரு வருடங்களுக்கு முன்பு நானும் கோணங்கியும் கோயம்புத்தூரில் ஒரு சிறிய உணவகத்தில் வேலைசெய்துவந்த மகேஷ்நாத் என்பவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் ஏற்கெனவே கோணங்கிக்கு சூப் போட்டுக்கொடுத்திருக்கிறார். திரும்பவும் அவரது கடையில் சூப் குடிக்கலாம் என்று போனோம். ஆனால் அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது, அவர் தற்கொலைசெய்துகொண்டார் என்று. அவர் இறந்ததற்கான சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு இருந்தவர்களைத்தான் பார்க்க முடிந்தது. எல்லா இடங்களிலும் அந்தத் தருணங்கள் பக்கத்திலேயோ கொஞ்சம் தூரத்திலோயோதான் இருக்கிறது. அது ஆரோக்கியமானதா, அதை வளரவைக்கிறோமா , ஆராதிக்கிறோமா என்பதற்குள் நான் போகவிரும்பவில்லை. தற்கொலை ஒவ்வொருத்தருக்கும் கணநேரத்தில்தான் நிகழ்கிறது. பல நைலான் கயிறுகள், பல விஷக் குப்பிகள் இதன் மூலமாக தற்கொலை தட்டில்வைத்து நமக்கு முன்னால் வழங்கப்படுகிறது. நானும் நிறைய தற்கொலைகளைப் பார்த்திருக்க்கிறேன். வாழ்வதற்கான ஒரு வேட்கை குறைந்த அளவுக்காவது இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மரணத்தை தள்ளிப்போடுவதற்கான அவகாசம் எங்கிருந்தாவது உங்களுக்கு கருணையாக வழங்கப்பட வேண்டும். அதற்கு மாற்றாக நிறைய சாதனங்கள், சனாதன முறைகள், யோகப் பயிற்சி வகுப்புகள் என இந்த மாதிரியான நிறைய சமூகச் செயல்கள் நடைபெறுகின்றன. அதேபோல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இனி கவிதை என்ற ஒன்றே இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. அத்தனை கொடூரமான மரணங்கள். ஆனால் அதற்குப் பிறகும் மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்குப் பிறகும் கவிதைகள் இருக்கின்றன. அது ஒரு பயங்கரமான வலி நிறைந்ததுதான். அதில்தான் பயணம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். இவான் ரூல்போ, பெக்மான், தார்க்கோவஸ்கி எல்லாம் அந்த இடத்தை அழுத்தமாக தொட்டு சொல்லியிருக்கிறார்கள்.
உங்கள் கவிதைகளில் இளம்பெண்கள் அல்லது தேவதைப் பெண்கள் அரிதாக உள்ளனர். வலிநிறைந்த பெண்கள், வயோதிகப் பெண்களும், முதுமையடைந்து இறந்துகொண்டிருக்கும் பெண்களும் இருக்கிறார்கள்..உங்கள் கவிதைகளில் இடம்பெறும் பெண்கள் குறித்து..
ஒரு கவிஞனாக நான் பார்த்த பெண்கள் அனைவருமே, ஏதோவொரு கதவின் நிலையின் அருகே காத்துக்கொண்டே இருக்கிறார்கள். இல்லையென்றால் பாத்திரம் விலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். கிரைண்டரில் ஏதாவது ஒன்றைப் போட்டு மாவட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தமாதிரியான ஏராளமான தாய்மார்கள் தங்கள் காலத்தின் உறைந்த நிலையில் பணிப்பெண்களாவே இருக்கின்றனர். எல்லா இடங்களிலும் அவர்களின் அத்தனை விஷயங்களிலும் சுரண்டப்பட்ட நிலையையே காணமுடிகிறது. அவர்கள் பிறக்கிறார்கள் வாழ்கிறார்கள் இறக்கிறார்கள். காலையில் பள்ளிக்கூடத்திற்கு தன் குழந்தைகளை அழைத்துச்சென்று, மீண்டும் மாலையில் திரும்ப அழைத்துவரும் நிறையப் பெண்களைப் பார்க்கிறேன். இருசக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் வேலைக்குச் செல்லும் பெண்களைப் பார்க்கிறேன். அவர்களின் முகங்களில் சொல்லமுடியாத எழுத முடியாத ஏதோ ஒன்று.. அறுந்து விழுந்துகொண்டிருக்கும் பறவையின் இறகைப்போல நமக்கு முன்பு விழுந்துகொண்டேதான் இருக்கின்றது. இந்தப் பெண்களையெல்லாம் எப்படி கடந்துபோவது என்று தெரியாமல் கடக்கிறோம். எனது அம்மா சின்ன மெஸ் ஒன்று நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, என் குழந்தைப் பருவத்திலிருந்து அவர் ஆப்பங்களையும் இட்லிகளையும் சுட்டு அடுக்கிக்கொண்டேதான் இருக்கிறார். மலைபோல அந்த ஆப்பங்களெல்லாம் அடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படி ஆப்பங்களைச் சுடுகிற இந்தமாதிரி பெண்களைத்தான் எல்லா இடங்களிலும் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு பெரிய யாத்திரைகளையும் ஒவ்வொரு நாளும் அவர்கள் கடக்கிறார்கள். பைபிளில் ஜெருசலமில் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு கானான்தேசத்திற்கு மோஸே போவார். அம்மக்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்திரங்களில் பயணம் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு நாற்பது ஆண்டுகளையும் ஒவ்வொரு நாளும் கடந்துபோவதுபோல பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. அந்தப் பெண்களெல்லாம் வேறமாதிரிதான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். வேறமாதிரிதான் அவர்களை எழுத முடிகிறது. அவர்களை எப்படி மறு உருபடுத்துவீர்கள். என் அம்மாவை மறு உரு படுத்த என்னால் முடியவே முடியாது. ஒரு பெரும் சமூகத்திற்குள், பெரிய அரசியல் நெருக்கடிக்குள் லட்சக்கணக்கான தாய்மார்கள் வேலையாட்களாக இருகிறார்கள். இப்படி எல்லாப் பெண்களையும், எல்லாக் குழந்தைகளையும் கைவிட்டுச் செல்லும் கார்ப்பரேட் வளர்ச்சியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் நம்மை அறியாமல் நம் படைப்புகளில் வந்துவிடுகிறார்கள்.
சமகால கவிதையில் புறவெளிச் சித்திரமும் கதையுரைப்பு இயல்பும் மிகுந்துள்ளது. குறைந்தபட்ச புறக்குறிப்புகளுடன் , ஒரு அகநிலைத் தீவிரம், உணர்வழுத்தம், ஒரு மூட்டமான தன்மை என்பதாக உங்கள் கவிதைகள் உள்ளன. உங்கள் கவிதை வடிவம் குறித்து பேச முடியுமா..
நான் எழுதவந்தபோது ஏற்கனவே உரையாடபட்ட விஷயங்கள் , அது சார்ந்த நம்பிக்கைகள் எல்லாமும் எல்லோருக்கும் மேஜையில் இருப்பது போலவே எனக்கும் உள்ளது. ஒரு கவிஞனாக ஒரு மொழிக்குள் வரும்போது ஏராளமான வரலாற்று மரபுகளையும் கலாச்சாரங்களையும் கடந்து நம் மீது விழுகிற ஒரு சிறு பொறியை தொடுவதற்கு நானும் பலவந்தமாக உந்துகிறேன். இந்தப் பிரபஞ்சமே எப்போதும் ஒரு புனைவாகவும் மேஜிக்காகவும்தான் உள்ளது. இந்த புனைவுக்கும் மேஜிக்குக்கும் இடையில் கவிதை மொழி எப்போதும் தன் அருவமான சிறகுகளுடன் உள்ளது. இன்றைக்குக் கதையாக சொல்வதற்குக் கவிதைகள் இல்லை என்றே நான் நம்புகிறேன். ஏற்கனவே கதையாகவே சொன்ன கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஸ்தூலமான வெளிப்பாடுள்ள கவிதைகள் இருந்துள்ளன.. வானம்பாடி கவிதைகள்..அப்புறம் பழமலய்.. தணிகைச் செல்வன் போன்றவர்கள்.. ஆனால் எனக்கு அருவமாக… நாம் தொட முடியாத இடத்துக்குள் உள்ள ஒரு வெளி.. அதற்குள் இருக்கும் ஒரு பிரக்ஞை, ஒரு கனவு போன்ற ஒன்று.. அதைப் பின்தொடரத்தான் எத்தனிக்கிறேன். மொழி நம்மை பல நேரங்களில் வழி நடத்துகிறது. ஒரு சம்பவம் அதன் தருணத்தில் மட்டுமே நம்மை இயக்குவதில்லை. ஒரு தேநீர் அருந்தும்போது , உணவு உண்ணும் போது , ஒரு விபத்தைப் பார்க்கும் போது , பெரிய பயணத்தை மேற்கொள்ளும்போது , நாம் ஸ்தூலமாக நமது உடலுடன் இயங்குவது போல இருப்பதில்லை கவிதை எழுதும்போது நிகழ்வது. ஏதோ ஒரு காட்சியால் , சம்பவத்தால், மனக்குறிப்பால், ஒரு சொல்லால் உந்தப்படுகிறோம். அந்த தருணமே மிகவும் மிஸ்டிக்கானது. அந்த மிஸ்டிக்கான தருணத்தில் இருக்ககூடிய சில தெறிப்புகளை நம்மை மீறித் தொடுகிறோம். அந்த மொழி அழகியலோடு போராடுகிறோம். அந்த வகையில் என்னுடைய கவிதைகளுக்குள் ஒரு நிழலில் , புகைபடர்ந்த ஒரு வெளிக்குள் தன்னந்தனியாக சென்றுகொண்டிருக்கும் ஒரு பயணி போலதான் உணர்கிறேன்.
உங்கள் கவிதைகளில் முன்பை விட பிந்தைய காலங்களில் ஒரு புனைவம்சம் வந்துசேர்கிறது. புனைவார்த்தமான தருணங்களை நிகழ்த்தி அதற்குள் ஒரு அறிதலில் கவிதை இயங்குவதை பார்க்க முடிகிறது. உதாரணமாக தெருவுக்குள் ஐஸ் விற்க வரும் கடவுள் , இயேசுவின் காயங்களை பழைய பாத்திரங்களுக்கு விற்பவன் , சோப்புப் பெட்டியாக இருக்கும் சர்ச் போன்ற அசாதாரணமான காட்சிகள்..இது குறித்து சொல்லுங்கள்
நான் ஏற்கன்வே சொன்னபடி, சிறு சிறு சம்பவங்கள்கூட ..அது ஒரு நெருப்பைத் தூண்டுகிற மாதிரியான எத்தனிப்பு உள்ள காலம் அன்று இருந்தது. அந்த எத்தனிப்பின் காலம் தொண்ணூறுகளில் இருந்தது. மீண்டும் ஒரு வெற்றிடம்.. தத்துவங்களின் வீழ்ச்சி.. உரையாடல் நீர்த்துப் போகிறது . எல்லாம் வெகுசனமயமான சமூகத்திற்குள் , ஏற்கனவே தீவிரமாக பேசப்பட்ட விஷயங்கள் எல்லாம் அதன் அர்த்தங்கள் நீர்த்துப் போகும் தன்மையில் ஆன பிறகு நாம் தனித்து விடப்படுகிறோம். அப்போது நிகழக்கூடிய கான்ஷியஸ்னஸ் எங்கோ துண்டாக அப்படியே நிற்கிறது. அப்போது ஒரு புனைவான உலகத்திற்குள் செல்வது ஒரு படைப்பாளிக்கு எளிதாக இருக்கிறது. மொத்த உலகத்திற்குள்ளேயும் ஒரு புனைவு செயல்படுவது மாதிரி மொழிக்குள் ஒரு புனைவைக் கட்டமைத்து அதற்குள் தனது அத்தனை விதமான எத்தனிப்புகளையும் கவிஞன் வைக்கிறான். ஐஸ் விற்கும் கடவுள் என்பது ஒரு மேஜிக்காக நிகழ்கிறது. சாமானியமான ஒரு ஆள் ஐஸ் விற்று கொண்டு போகும் அந்த காட்சி அப்போது அருவமாக வேறொன்றாக நம்மை அறியாமலே மாறி விடுகிறது. கவிதைக்குள் அது இயல்பாக நிகழ்ந்து விடுகிறது.
நீங்கள் குறிப்பிடம் வெற்றிடம், தத்துவங்களின் வீழ்ச்சி என்பதிலிருந்துதான் பகடி உருவாகிறதா. தற்போது வெகுசன ஊடகங்களிலிருந்து நவீன கவிதை வரை எல்லாவற்றையும் பகடி செய்து கடந்து போய்விடுவது இருக்கிறது . ஆனால் உங்களிடம் பகடி மிக அரிதான ஒன்றாகவே இருந்துள்ளது. வெகு பின்பாக மெல்லிய ஒரு அங்கத உணர்வு இருக்கிறது. கடவுளைப் பற்றிய கவிதைகள், ஜகஜாலக் கில்லாடி போன்ற உதாரணங்கள்..
இந்த மாதிரியான ஒரு தன்மையில் ஏற்கனவே கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஞானக்கூத்தன், விக்கிரமாதித்தயன் இவர்களிடமெல்லாம் சட்டையர், பேரடி என்பது இருந்தது. எல்லாவற்றையும் கேலி செய்தலும், சுய பகடியும் கூட அதில் இருந்தது. மணிவண்ணனின் நுட்பமான கவிதைகளில் கூட கேலி செய்யும், உலகத்தைக் கலைத்துப் போடும் ஒருவன் இருப்பான். சங்கரராமசுப்பிரமணியனின் நானும் ஒரு தமிழ் பரோட்டா போன்ற கவிதையையும் சொல்ல வேண்டும். ஆனால் அது மாதிரியான ஒரு மன அமைப்பு உங்களுக்கு அமைய வேண்டும். அப்படி இயல்பாக அது நிகழ்ந்துவிட்டால் ,கவிதைக்குள் அப்படி ஒரு உரையாடலைச் செய்ய முடிந்தால் அது பெரிய விஷயம்தான். ஆனால் எங்கோ ..அது மாதிரி சிரிக்க முடியாமல், நகைக்க முடியாமல் இருக்கும் அபத்தம் இருக்கிறதல்லவா . அது இயல்பில் நிகழ்ந்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு அது அரிதாகதான் நிகழ்கிறது.
இன்று எல்லாருடைய கவிதையுமே ஒரு எளிமை, லகுவான சொல்லல் முறைக்கு வந்துள்ளன அல்லவா .. ஒரு வெளிச்சம் உருவாகியுள்ளது.. நேரடியான ஒரு நேரேஷன் உள்ளது. ராணிதிலக்கின் நாகதிசையும் சமீபமாக வந்த கராத்தேவையும் ஒப்பிடும்போது …
நிச்சயமாக .. அப்படி உருவாகியுள்ளது மகிழ்ச்சியான விஷயம்தான். வாசிக்கப்படும் இடத்தில் கவிதையை வைப்பது , அந்த கவிதைக்குள் பயணம் செய்ய வாசகனை அனுமதிப்பது , பெரிய ஒரு அனுபவத்துக்குள் அவனைக் கொண்டுபோவது என்பது நிகழ வேண்டிய ஒன்று . அது இவர்களுக்கெல்லாம் நடந்துவிட்டது என்பது ஆச்சர்யப்படும்படியான ஒரு பெரிய மிராக்கிளாகதான் உள்ளது.
முந்தைய தலைமுறைக் கவிதையில் நினைவு கூரத்தக்க , செவ்வியல்தன்மை மிக்க வரிகள் இருந்தன. கவிதையின் அருவமான ஒரு அனுபவத்திற்கு அப்பாலும் சொற்களின் , தொடர்களின் மதிப்பிலும் கவிதைகயின் ஓர் அம்சம் இருந்தது. நகுலனிடம் , ஆத்மாநாம், ஞானக்கூத்தான் எல்லோரிடமும் மேற்கோளாக இன்றும் நிற்கும் வரிகள் உள்ளன. ஆனால் சமகால கவிதை என்பது என்பது ஒரு காட்சியாக, ஒரு ஐடியாவாக , ஒரு தருணம், அனுபவம் என்பதை அசாதாரணமாக நிகழ்த்தினாலும் இசைமைமிக்க சொற்றொடர்கள் , கூற்றுகள் முற்றிலும் கைவிடப்பட்டது ஏன்.
ஏனென்றால் அந்த பால பருவத்தைத் தாண்டி வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இன்னொன்று சொற்களோடு பழக்கப்படுத்தப்பட்ட , பழமையான அர்த்தங்களை மீறி வேறொரு கவித்துவத் தருணத்தில் தான் கவிதையின் மொத்த ஆக்கத்திற்குள் ஒரு மேஜிக் நடக்கிறது. அந்த மேஜிக் என்பது.. எண்பதுகளில் வெகு முன்பு பேசப்பட்ட ஒரு மொழி , எண்பதுகள் வரைக்கும் கையளிக்கப்பட்ட வாக்குறுதிகள், அதனுடைய அபாயமான இடங்களில் இருந்து தப்பி வந்துதுதான். நவீனத்துவம் என்பது போன்ற ஒரு உருவகமான காலகட்டத்தை குறிப்பிட்டாலும் கூட, அப்போது வேறொரு அழகியலுடன் கவிதைகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு ஒரு ஸ்பேஸுக்குள் சில காட்சிகளை எட்டிப் பிடிக்க வேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது மிகவும் சரி. மொத்த கவிதை பரப்புக்குள்ளேயும் ஒரு சம்பவமாக இல்லாமல் , அதற்கு பின்னால் அதனை இயக்கக்கூடிய ஒரு ஸ்பேஸின் தருணம் , வேறொன்றாக உருமாறும் ஒரு தருணம், கவிஞர்களுக்குள் நிகழ்கிறது. அது அற்புதம்தான். கவிதை என்பது அசாதாரணங்களை நோக்கி நம்மைத் தள்ளுகிற ஒரு உந்துசக்திதான்… நம்முடைய மொத்த பிரதேசத்துக்குள்ளேயும் வேறொரு பிரதேசத்தை அமானுஷ்யமாக ஒரு மாயமாக நம்மிடம் அது கையளிக்கிறது . எல்லா கவிதையிலும் மொத்தமாக ஆப்படி ஒரு சூழல் இல்லை என்பது சரிதான். ஆனால் அரிதாக சிலரிடம் அப்படி ஒரு இடம் உள்ளது.. அந்தக் கவிதைகளில் எனக்கு நெருக்காமான ஒரு தொடுகை உள்ளது. அந்த மாதிரி கவிதைகளைப் படிக்கும் போது நான் மிகவும் போதையுற்றவனாகி விடுவேன். ஸ்ரீநேசனுடைய கவிதையில் அப்படி ஒரு வரியை கவனித்திருக்கிறேன். ’இயேசு ஒரு இளம்பெண்ணை சைக்கிளில் வைத்துக் கொண்டு செல்கிறார் ‘ என்பது மாதிரியான ஒரு வரி , அந்த நேரம், அந்த வரியைத் தொடும்போது அமானுஷ்யமான ஒரு கணம்… ஒரு பெரிய காலத்தினுடைய நீட்சிக்குள் யாருடனோ அவர் போய்க்கொண்டிருக்கும் திடுக்கிடல்..
கவிதை என்பது தொடர்ந்து உருமாறிக்கொண்டிருந்தாலும் எல்லா காலங்கள் மற்றும் இடங்களின் கவிதையிலும் உள் நின்று இயங்கும் ஒரு சாரம், அகக்கூறு என்று ஏதாவது இருக்கிறதா ?
இது மிகவும் ஆழமான பெரிய ஒரு கடலில் , நாம் நினைக்கிற ஒரு அருவமான மீனை ஒவ்வொரு நாளும் காலையில போய் ஒரு வலையை போட்டோ , ஒரு படகில் சென்றோ அதை அப்படியே பிடித்துக்கொண்டு வந்துவிடலாமா என நினைப்பது போல்தான் … மொத்தக் கவிதைக்குள்ளேயும் சாரமாக இயங்குவது என்று யோசிக்கும் போது , மனிதனின் வாழ்வின் மீதான எத்தனிப்பாகதான் அது இருக்கும் எனத் தோன்றுகிறது. மனிதன் வாழ்வதற்கான எத்தனிப்பு..அவனுடைய கனவு.. அந்தக் கனவை அவன் காண விரும்புகிறான். அந்தக் கனவுக்கான ஒரு எத்தனிப்பு இருக்கிறது. தான் வாழ்வதற்கான ஒரு எத்தனிப்பை, முறையீட்டை அவன் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறான். இன்னொன்று சொல்லப்போனால் ஜீவராசிகள், பிற உயிரிகள் , வாழ்வதற்கான ஒரு சூழலுக்குள் தான் நிற்பதற்கான ஒரு முயற்சியை அவன் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான்.. மனித எத்தனிப்புதான். இந்த சாமன்ய சூழலிலிருந்து வேறொரு அமானுஷ்யத்தை நோக்கிய ஒரு எத்தனிப்புதான் கவிதையைச் செய்கிறது.
அதே போல கவிதையை காலந்தோறும் இயக்கும் நித்தியமான அழகியலுக்கான மனித உந்துதல் எப்படிச் செயல்படுகிறது ?
நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். மொத்த நவீன சமூகத்தினுடைய ஒரு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு ..ஒரு பெரிய கார்ப்பரேட் உலகுத்துக்குள் நின்றுகொண்டு நாம் அழகியலை பேசும்போது ..இதற்கு முன்பான ஒரு காலத்தில் மனிதன் ஏதோ ஒரு அழகியலுக்குள் அகப்பட்டிருந்தான். அந்த அழகியலை இன்று அவன் இழந்துவிட்டான். என்றுதான் தோன்றுகிறது. என்னைக் கேட்டால் நம்முடைய செவ்விலக்கியங்களில் இருக்கக்கூடிய தெறிப்புகள், காட்சிகள் . சில உரையாடல்கள் அவற்றையெலாம் கடந்து நான் இன்று அழகியலே இல்லாத ஒரு உலகத்துக்குள் இருக்கிறேன். அப்படி இல்லை வாழ்க்கை முழுவதும் அழகியல் இருக்கிறது என்று ஒருவர் சொல்லலாம். அப்படி அழகியல் இருந்தால் நல்லதுதான். ஆனால் அந்த அழகியல் பறி போய்விட்டது. அவையெல்லாம் பழைய ஞாபகங்களாகதான் உள்ளன.
கே : இல்லை அழகியலை ஒரு மேட்டிமையான அர்த்தத்தில் கூற வில்லை…கவிதைக்குள் அழகு என்ற ஒரு உருவகம் கவிஞனக்கு இருக்கிறதல்லவா. மொழிக்குள் தனது கண்டுபிடிப்பு சார்ந்து ஓரு வரிசையை, ஒழுங்கை அவன் உருவாக்குவது ஒரு அழகியல் செயல்பாடுதானே
அழகியல் செய்லபாடுதான்..அதில் மாற்றுக் கருத்தில்லை.. ஆனால் இழந்து போன அழகியலை அவன் மீட்டுவிட ..படம்பிடிக்க நினைக்கிறான். எல்லா கவிதைக்குள்ளேயும் செயல்படுவது எப்போதுமே கடந்த நிமிடம்தான். கடந்து போன தருணம் தான். கடந்து போன காலம்தான். எப்பொதுமே அது எதிர்காலத்தில் இருந்துதான் பார்க்கப்படுகிறது. கவிதை அப்படி ஒரு யூனிவர்ஸான தமையை வைத்திருக்கிறது .அது பழைய காலத்திலிருந்து எழுதப்பட்டு நிகழ்காலத்தில் வாசிக்கப்பட்டு எதிர்காலத்தில் அது வைக்கப்படுகிறது..இந்த மாதிரியான நிலையில், இழந்து போன அழகியலை ஒரு புனைவாக ஒரு மேஜிக்காக காட்டலாம்..அது அருவமாக நடக்கலாம் .
கவிதை பற்றிய விசயங்கள் எப்போதுமே அருவமாகதான் இருக்கின்றன. நீங்கள் எழுத வரும்போது .. ஒரு காட்சியால் உந்தப்பட்டு .. ஒரு கவிதைக்கான தருணம் உங்கள் முன் நிறுத்தப்படும்போது நீங்கள் ஒரு கவிஞனாக கையறு நிலையில்தான் இருப்பீர்கள். மொழி உங்களைக் கையறு நிலையில் விட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உங்களை வைத்து அது ஏதாவது செய்யும் . அந்த நேரம் மிக அற்புதமான ஒரு தருணம் தான். நாம் கவிதை பற்றி இந்த நேர்காணலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதெல்லாம் அருவமாக இருக்கக்கூடிய விஷயங்கள்தான். அதில் தீர்க்கம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஆனால் அதை வாசகன் தான் கண்டுபிடுத்து உள்ளே போக முடியும். ஆனால் கவிதை அருவமாகதான் இருக்கிறது. வாசகன் அதை பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
நீங்கள் முன்னுரையில் சொல்லியிருப்பீர்கள், நான் கதை எழுதுவதற்கான எந்தக் கனவுகளோடும் வரவில்லை என்று, கவிதையிலிருந்து சிறுகதைக்கான நகர்வு எப்படி நிகழ்ந்தது?
கவிதையில் நேரடியாக ஒரு ஸ்பார்க்கைச் சந்திப்பீர்கள். பெரிய நெருப்புத்துண்டை தொடுவதுபோல்தான். வாழ்க்கையில் சில சம்பவங்கள் உங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.. அந்தச் சம்பவங்கள் தரும் அழுத்தம். அந்த நபர்களும் சூழலும் அந்த இடமும் அதில் நீங்கள் நின்ற ஞாபகமும் உங்களைத் தொடர்ந்தபடியே வரும் . அவற்றை எழுதாமல் விட்டுட்டுப் போகவேமுடியாத நிர்பந்தம்தான் கதை எழுவது நோக்கிப் பிடித்துத் தள்ளுகிறது. ஒரு கவிஞன் கதைக்குள் வருவது நிர்பந்தம்தான். கவிதை எழுத வருபவர்கள் கதை எழுதுவது ரொம்ப அரிது. ஆனால் எழுதுவதற்கு வரவேண்டிய சூழல் அதிகமாக இருக்கிறது. கவிதை எழுதவந்த நிறையப் பேர், இப்போது கதை எழுதவேண்டும் என்ற அறிவிப்போடு இருக்கிறார்கள். கவிதைகளில் அப்ஸ்ட்ராக்ட்டாக ஒன்றை, ஒரு பெயிட்டிங்கை செய்துவிட்டுப் போய்விடுவீர்கள். ஆனால் கதை அப்படியில்லை. பல சம்பவங்களோடு சேர்ந்து இன்றைக்கு இருக்கிற மொழி, சொல்முறை இவை எல்லாவற்றிக்குள்ளுமாக பின்னிய ஒரு இயக்கம் உங்களை அறியாமல் வந்துவிடும். கவிதைகளில் இருந்து கதைக்கு வருவது என்பது நேர்வதுதான்.
சிறுகதைக்கான வடிவம் ஆரம்பத்திலிருந்தே நம் தமிழ்ப் பரப்புக்குள் இருக்கிறது. கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, க.நா.சு, சுந்தர ராமசாமி, கோணங்கி இப்படி நிறையப் பேர் கதை எழுதி இருக்க்கிறார்கள். ஒரு வாசகானாக இந்த கதைப் பரப்பு நம் மனதில் உள்ளது. இன்றைக்கு எழுதுகிற கவிதைக்குள், கதைக்குள் ஏற்கெனவே இரண்டாயிரம் ஆண்டு பயணம் செய்து வந்த ஒரு பழைமையான மொழியும்.. உங்களுக்குள் முன்னால் கதை எழுதியவர்களின் பின்தொடரலும் உங்களுக்குள் இருக்கும். பலபேருடைய கதைகள் யுனிவெர்சலாகவும் இருக்கும். மீட்சியின் மூன்றாவது இதழில் வந்த கார்லோஸ் ஃபியுண்டசுடைய கதை.. அதன் அம்சம் கோணங்கியின் மதினிமார் கதையிலும் வரும். அதேபோல் டி. கண்ணனின் கல்வெட்டுச் சோழன்.. மணிவண்ணனின் வெள்ளைப் பல்லி விவகாரம் இதுமாதிரி பல கதைகள். கவிதைக்கான ஒன்று நம்மை ஒருகட்டத்தில் வேறுமாதிரி அழுத்தும்போது அவற்றை கதைகளாகத் வெளிப்படுத்தவேண்டியதுதான். சிறுகதையில் சவால் கொஞ்சம் அதிகம்தான். யதார்த்தவாத காலத்தில் இருந்த அந்த மொழி வேறு. இப்போது நீங்கள் கவிதை எழுதி கதை எழுத வரும்போது நீங்கள் யாரென்று வாசகனுக்கு உங்களை ஞாபகம் இருக்கும். அவர்களோடு இடையீடு செய்வதற்கு சிறுகதை ஒரு அருமையான வெளிப்பாடு. இரண்டாவதாக.. நாவல் என்பது முக்கியமான ஒரு அழகுதான். ஆனால் தமிழில் பெரிய அளவுக்கு அதை முயற்சி பண்ணிப் பார்க்கவில்லை. முன்னாடியெல்லாம் நாவல்களில் பரீட்சார்த்தம் நிறைய இருந்தது. இப்போது அப்படி எதுவும் இல்லை. நாவல்களுக்கான ஒரு இடம் இருக்கிறது. நாவல் நிறைய எழுதப் படவேண்டும்; எந்தமாதிரியன உலகத்தை, எந்தமாதிரியான மொழியோடு எதை உருவாக்குகிறோம் என்பது முக்கியமானது. அதை ஏன் எழுத வேண்டும் என்கிற கேள்வி எழும்போது தப்பித்தல் இல்லாமல் சரியான பதில் இருக்க வேண்டும். சிறுகதைகள் எழுதும்போது நாவலும் எழுதத் தோன்றும், ஆனால் தலையணை அளவு வரவேண்டிய அவசியம் இல்லை. அளவான பக்களில் எதைச் சொல்லவேண்டும் அதை மட்டும் சொன்னாலே போதும்.
கவிதைக்குள் இருக்கும் ஒரு தீவிர உணர்வழுத்தும் உங்கள் புனைவுகளிலும் கூட செயல்படுகிறதே ?
மனித வாழ்க்கையை அசைப்பதே எமோஷன்ஸ்தானே. அது இல்லையென்றால் எப்படி வாழக்கை சாத்தியம். அதை மட்டுப்படுத்த முடியுமா. ஒரு மைதா மாவுபோலவோ அல்லது காய்ந்துபோன பரோட்டாவாகவோ நம்மால் எப்போதுமே வாழமுடியாது. ஒரு இசைக்கருவியா ஆக விரும்புறோம். ஒரு பட்டாம்பூச்சியாக விரும்புறோம். எமோஷன்ஸ்ல என்ன பிரச்னை என்றால் உங்களுக்கு மொழிமீது ஒரு கான்ஸியஸ்னஸ் வந்துவிட்டால் நீங்கள் பதற்றம் அடையத் தொடங்குவீர்கள்.. அதற்குப் பிறகு நீங்கள் சொல்கிற, எழுதுகிற விஷயங்களை வேவுபார்க்கவும் மதிப்பிடவும் இன்னொருத்தர் உங்களை பிந்தொடர்ந்து வந்துகொண்டேயிருப்பார். முதலில், எழுதும் ஒருவனுக்கு மொழிமீது ஒரு சந்தேகம் வரவேண்டும். சந்தேகம் வருவதாலேயே அவன் பேச ஆரம்பிப்பான். பேசும்போது அதை ஜஸ்டிபை பண்ணுவதற்கு இன்னொரு உளவாளி ஏவி விடப்படுவான். அவன் உங்களைப் பின்தொடர்ந்துகொண்டே இருப்பான். அதனால உங்களால் சொல்லவருவதைச் சொல்ல முடியாது. சொல்லவருவதற்கு தடைவரும். எல்லாமே எமோஷன்ஸ்தான். அதைச் சமநிலைப்படுத்த முடியாது. அமைப்புதான் வற்புறுத்துகிறது..நீ எமோஷனலா இருக்காதே என்று. அதை அடக்கிக்கொள். இது நல்ல உணர்ச்சி; இது தீய உணர்ச்சி என்று. அப்புறம் பெண்களுக்கென, குழந்தைகளுக்கென உணர்ச்சிகள் வரையறுக்கப்படுகிறது.. இந்த கண்ணசைவுகள்.. முகபாவனைகள் என்று ஒவ்வொன்றும் அமைப்பால் வரையறுக்கப்படுகிறது. அதற்கான மொழியும் பரிந்துரைக்க்கப்படுகிறது.. ஆனால் நமது குழந்தைமை உணர்ச்சிகளை மொழிக்குள் கடத்தி தப்பித்துக்கொள்ள முயல்கிறோம். எழுதுபவனைமீறி அது எழுத்துக்குள் அது அப்படியே இருக்கிறது. ஒரு இடத்திலும் அது நீர்த்துப்போகவில்லை. நீர்த்துப்போகாது. அது அங்கேதான் மறைந்திருக்கும். அவன் அதுக்குள் பயணம் செய்யும்போது தெரிந்துவிடும். எழுதுபவன் எமோஷனலாகதான் வேண்டும்.
புனைவுக்கான மொழி என்பது என்ன ? கவிதையில் இருந்து புனைவுக்கு நகரும் போது மொழி ரீதியான உருமாற்றம் என்பது என்ன?
இயல்பிலேயே நாம் ஒருவிஷயத்தைப் பார்க்கும்போது, நம்முடைய மனதுக்கு ஒரு நிறம் இருக்கும் அல்லவா, அந்த லென்ஸ் தான் நம் மொழியினுடைய லென்ஸும்கூட. திட்டமிட்ட வர்ணனைகள் சரியாக வராது. நீங்கள் கதைகளுக்கு, சம்பவங்களுக்கு முன்பும் , சில மனிதர்களுக்கு முன்பும், வெயிலுக்கும் மழைக்கும் பேருந்துக்கும் குழந்தைக்குளுக்கும் முன்பும் என எல்லாவற்றின் முன்னாலும் நிறுத்தப் படுகிறீர்கள். அப்படி நிறுத்தப்படும் எல்லாத் தருணங்களிலும் உங்கள் பேனாவில் உயிர் இருக்கும். அதை எழுத எழுதத்தான் அதில் என்ன இருக்கிறது என்பதே புலப்படும். மொழியினுடைய ருசியே அதுதான். ஒரு மொழி நம்மை நகர்த்துகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதில் என்ன நிகழவிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதை எழுதுகிறவரை வேறொருவனாக இருப்பான். எழுதி முடித்தபின், முதல் வாசகராக அதைப் படிப்பான். ஒவ்வொரு கதையும் அதுபோலதான் எழுதப்படும்.
நிறங்கள் சார்ந்த ஸ்தூலமற்ற.. நிழல் போன்ற அரூபான காட்சிகள் கதைகளில் வருகிறதே.?
சமீபத்தில்..ஒரு பத்து நாட்களுக்கு முன்பு.., இரவு இரண்டு மணி இருக்கும். மரணமடைந்தது போல..மரணத்துக்கு சற்று முன்பான ஒரு பிரக்ஞை போல ஒரு அவஸ்தையை நான் உணர்ந்தேன். திடீரென்று எழுந்து பார்க்கிறேன்.. அர்த்த ராத்திரியாக இருக்கிறது. மரணமடைந்தது மாதிரி இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு..என்னுடைய கதைகள் வேறு மாதிரி மாறுவதற்கு முன்பாக .. முதல் கதை..சுவற்றிலிருந்து இறங்கிவரும் சிறுத்தையை எழுதுவதற்கும் முன்பாக.. நான் குறுக்கும் நெடுக்குமாக நீந்திக்கொண்டிருக்கும் சில மீன்களை ஒரு கனவில் பார்த்தேன். அது கனவில் பார்த்தேனா இல்லை நிஜத்துலா தெரியவில்லை. ஏராளமான மீன்கள் நேரில் பாய்ந்து வந்து தொட்டு தடவி வாள் மாதிரி வெட்டிச் செல்லும் ஒரு கணம். அந்த கனவு அப்படியே ஞாபகத்தில் உள்ளது.. மரணமடைந்தாலும் என்கூடவே இருக்கும். இதெல்லாம் மொழிக்குள் இருக்கிறது.. அந்த மரணமடைந்த தருணம் திகிலானது..அந்த மரணத்தின் நிறம் .. அது கருப்பா.. சம்பலா தெரியவில்லை. அந்த தருணம் பயங்கர அவஸ்தையாக இருந்தது. மரணத்தை விட்டு எப்படித் தப்பிக்க முடியும். அந்த நேரத்தில் முருக பூபதி வந்தார். மிகவும் அதிர்ச்சியாகிவிட்டார். எனக்கு மரணமடைந்துவிட்டதமாதிரி ஒரு உணர்வு. என்னால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. அடுத்தநாள் காலையில இரு சக்கர வாகனத்தை எடுத்துகிட்டுப் போகிறேன். என் குழந்தைகளும் உடனிருக்கிறார்கள். போகிற வழியில் ஏராளமான பட்டாம்ப்பூச்சிகள்.. பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. என் குழந்தைப்பருவத்தில் பள்ளிக்கூடம்போகையில, பின்பு நான் வேலைகளுக்குப் போனபோது… நான் பார்த்திருந்த அத்தனை பட்டாம்பூச்சிகளும் பல்வேறு நிறங்களில் சூழ்ந்து வருகின்றன. இவ்வளவு காலமாக அதை நான் கவனித்திருக்கவில்லை. என் ஞாபகத்திலும் இல்லை. அன்றைகு வந்த மகிழ்ச்சிக்கு அள்வேயில்லை. என் குழந்தைகளிடம் சொல்கிறேன். அவர்கள் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இந்த நிறங்கள் எல்லாம் ஒரு மேஜிக்கான தன்மையில் மனதில் இருக்கிறது. நிறங்கள் இல்லாமல் இல்லை. அதையெல்லாம் எங்கோ பார்த்திருக்கிறோம். நான் என்ன நினைக்கிறேன் என்றால் நான் வாழும் காலத்திலிருந்து, இப்போது இருக்கும் சூழ்நிலையில் இருந்து மொழி உருவாகவில்லை. மொழி என்பது எங்கிருந்தோ நெர்டுங்காலத்திலிருந்து வரும் ஒரு பிரவாகமாக உள்ளது. ஒரு பெரும் கால நீட்சியில் இருந்து தனது ஆழ அகலங்களோடு பெரிய பயணத்தை அது செய்திருக்கிறது. அப்படி அது பயணம் செய்துவரும்போது அதன் முன் ஒரு கொசுவைப்போல், ஒரு கரப்பான் பூச்சிபோல நானும் ஒரு உயிராக இருக்கிறேன். அந்த மொழியைத் தொடும்போது நான் அதைத் தொடுவதாக நினைக்கவில்லை. ஒரே நேரத்தில் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான கொசுக்களை அந்தப் பெரிய மொழி வந்து தொடுகிறது. மொழி ஒரு கவிதையில் செயல்படும்போது அது ஒரு பெரிய மேஜிக்காக இருக்கிறது. திடீரென்று ஒரு கணத்தில் நீங்கள் எழுதக்கூடிய சூழலுக்குத் தள்ளப்படும்போது அது முக்கியமானது.. ஒரு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்தின் உருமாற்றம் மாதிரி. ஒரு கணம் தான் அதைப் பிரிக்கிறது. ஒரு இளம் பருவத்தில்..அல்லது மத்தியப் பருவத்தில் திடீரென்று மொத்தக் கருப்பு முடியில ஒரு வெள்ளை ரோமம் தோன்றுவது போல ஒரு தருணம்..அதுதான் கவிதையின் கணம். அந்த கணத்தில் நம்மை அறியாமல் பல நிறங்கள் வருகிறது. மொழி நம்மீது விழுகிறது.. அந்தக் கணங்களில் நம்ம எழுதுகிறோம் என்று சொன்னாலும் அது நாம் எழுதுவது இல்லை.. அது எப்படி நட்க்கிறதென்பது தெரியவில்லை. ஆனா வேறெங்கோ ஏதோ ஒன்று நிகழ்கிறது.
உங்கள் கதைகளில் பாலூக்கம் சார்ந்த ஆண்-பெண் ஊடாட்டங்கள், ஒரு சன்னமான. மூட்டமான தன்மையில் மொழியப்படுகிறது? அது குறித்து ..
மொத்த மனித சமூகமே எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தன்னிலையும் ஏதோ ஒரு சொல்லுக்காக , ஏதோ ஒரு பரிமாற்றத்திற்காக நின்றுகொண்டிருக்கிறது. பயணம் செய்துகொண்டிருக்கிறது. நாம் பேசுகிற மொழியும் நாம் வெளிப்படுத்துகிற சைககளும் எப்பவும் போதாமையாக இருக்கிறது என்பதால்தான் மொழியில் அதன் செயல்பாடுகளைக் கொண்டு வருகிறோம். கவிதையில், ஃபிக்சனில் செயல்படுகிறோம், வெவ்வேறு மாதிரி சொல்லிப் பார்க்கிறோம். ஆண்-பெண் உறவு தவிர்க்க முடியாத சூழலில் உங்களுக்குள்ளே இருக்கக் கூடிய ஒரு விஷயம். பல நேரங்களில் ஆண் இல்லாமல் பெண் பல நேரங்களில் இல்லை. பெண் இல்லாமல் ஆணும் பல நேரங்களில் இல்லை. ஆனால் ஆணுக்குள் பல கத்திகள் இருக்கின்றன. பெண்ணுக்குள்ளும் பல கத்திகள் உள்ளன. மறைந்திருக்கிறது. இருவரிடமே கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கு. அதே சமயம் ஆண் பெண்ணுக்கும் பெண் ஆணுக்கும் கொடுக்கக்கூடிய மலர்ச்செண்டுகள், வாசனை திரவியங்கள், போதையூட்டக்கூடிய எவ்வள்வோ ரசங்கள் எல்லாமே இருக்கின்றன. ஆனால் நீங்கள் இன்னொரு எதிர்பாலின நபரிடம் உங்களை வெளிப்படுத்துவதற்கு மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. ஏனென்றால் நமக்கு முன்பாக ஒரு கலாச்சாரம் இருகிறது. இன சாதி மோதல்கள் இருக்கின்றன. இதன் இடர்பாடுகளைத் தாண்டித்தான் பேசவேண்டியுள்ளது. கதை எழுதும்போதும் மொத்தப் பரப்புக்குள்ளிருந்துதான் கதை வந்து விழுகிறது. சாமனியப் பெண்ணை சாமானிய நேரத்தில் சாதாரணமாகச் சந்திப்பதுபோல் இல்லை… கதைக்கு நிகழ்வது ஒரு அசாதாரணமான சூழல். அந்தச் சூழலுக்குள் ஏற்கெனவே பேசப்பட்ட தத்துவங்கள், கலாச்சார உலகம், பல கருத்து மோதல்கள், பெண்ணியம், ஆணியம், அடிமைப் படுத்தல்கள், ஒடுக்குதல் இத்தனையும் இருக்கின்றன. இததனையும் கடந்து ஒரு ஆண் தன்னிலை பெண் தன்னிலை என்பதை பிரபஞ்சமயமான பிரக்ஞையிலிருந்து சொல்ல முயற்சிக்கிறோம். அந்தக் கதைகளை இந்தியா போன்ற ஒரு நிலத்திலிருந்து எழுதுவதற்கு நாம் உட்காரும்பொழுது கடந்த ஒரு நூறாண்டாக மாறிவந்த பல உரையாடல்களுக்கும் பல தத்துவ விவாதங்களுக்குப் பிறகு நாம் எழுத விரும்புகிறோம். அப்படி எழுதும்போது அந்தப் பெண்ணை எந்த மொழியில் எழுதுகிறோம் என நினைக்கும்போது பகிரங்கமாக அவனால் பேச முடியவில்லை. பல நேரங்களில் பட்டவர்த்தனமா சொல்லமுடியாத சூழலில் அவனே தள்ளப்பட்டிருக்கான். அதனால அந்தக் கதைக்குள்ள இருக்கிற தன்னுடைய லென்ஸை ஒரு அதியற்புதமான வாசகனுக்கு அவன் அப்படியே கொடுத்துவிடுகிறான். அந்த லென்ஸ் வழியாக அவன் காண்பிக்கும் வேறொரு இடத்துக்கு வாசகன் சென்று விடுவான்.
உங்கள் கதைகளில் ஒரு பெருநகரஅமைப்புக்குள் பாலியல், பொருளியல், ஒடுக்கத்துக்குள்ளான அடித்தள மனித இருப்புகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. …பெரு நகரம் என்னும் நிலவெளி மீதே ஒவ்வாமை உள்ளது..ஆனால் சாதிய அழுத்தமும் கலாச்சார ஒடுக்குமுறைகளும் நிரம்பிய ஒரு சமூகத்தில் பெரு நகரம் ஒரு சிறிய விடுதலையை, அடையாளமற்ற தன்மையை தருவதாக உணரப்படும் சாத்தியங்கள் உணடல்லவா.
ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகியுள்ளது என்பது தெரியவில்லை. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பலரும் , அரசு பணிகளோ இன்ன பிற பணிகளிலோ அவர்கள் இருக்கும் போது எங்கோ ஒரு ஞாபக மறதியில் இருந்து ஆவர்கள் திரும்பவும் கண்காணிக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள் . இன்னொன்று இந்த கார்ப்பரேட் தன்மை பெரிய ஒரு வணிக பரப்புக்குள் எல்லோரும் சமமானவர்கள்தான் என்பது போன்ற தோற்றம் தருவது அந்த பணியின் திட்ட ஒழுங்குக்குள் இருக்கும் ஒரு செயல்முறைதான். ஆனால் உங்கள் அடையாளம், பின்புலம் என்னவென்று தெரிய ஆரம்பிப்பதும் , அதை வேவு பார்ப்பதும், அதன் பின் இயங்கும் மனோபாவமும் நிதர்சனமானவை. அது நீர்த்துப் போய் பெரு ந்கரங்களில் வேறொன்றாக உருமாறியுள்ளது என்றால் அது ஆச்சரியப்படக்கூடிய விஷ்யம்தான். அது சரியாக இருக்கிறது என்றால் .
ஆனால் ஒரு பிரம்மாண்டமான பெரு நகரத்துக்குள் நீங்கள் அத்தனை மாடியில் இருந்தும் வேலை செய்யவில்லை. நீங்கள் அவ்வளவு பெரிய நகரத்துக்குள் .. ஒரு சிறிய அலுவலுகத்துக்குள் ..ஒரு அதிகாரியாகவோ .. அதற்குக் கீழ் பணியாளனாகவோ வேலை செய்யும்போது அந்த சாதி ரீதியான அடையாள மறுப்பு எந்த அளவிற்கு உண்மையானது ..பெருநகரம் அவ்வளவு பிரக்ஞையோடு தன்னை கலைத்துப் போட்ட்சிருக்கிறதா என்பது கேள்விக்குரியது.
ஆனால் பின்னோக்கித் திரும்பதும் சாத்தியமில்லையே.. பெரு நகரங்களில் உருவாகியுள்ள புதிய எதார்த்தங்களை ஏன் பரிசீலிக்கக்கூடாது.
கோணங்கியுடைய மாயாண்டி கொத்தனாரின் ரசமட்டம் கதையை எடுத்துக் கொண்டால் சென்னையின் கட்டட வார்ப்பு அதன் ரச மட்டத்திலேயே ஒழுங்கா இல்லை என்பது சொல்லப்படுகிறது., அது வேறொரு சமனிலைக்குலைவோடு கட்டப்பட்டிருக்கிறது …அதற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு நபர் …இந்த சூழலில் நீங்கள் பார்க்கிற புயல்களும் இயற்கை அதிர்வுகளும் அந்த ரசமட்டம் இல்லாத்தால்தான் என்பது போன்ற மேஜிக்கான ஒரு கதை.
பெரு நகரங்களில் ஏராளமான மக்கள் திரள், ஏராளமான கட்டடங்கள், வாகனங்கள். வளர்முக நாடுகளில் யானைகள் மனிதனுக்கு ஒரு பிரச்ச்னை …யானைகள் அதன் சொந்த வசிப்பிடத்திலிருந்து, அதுனுடைய காட்டிலிருந்து வருவதை பெரு நகரமனிதன் அவனுடய பகுதிக்கு வந்து அது தொந்தரவு செய்வதாகப் புகார் செய்கிறான். அது அதனுடைய காட்டில் சுதந்திரமாக திரிந்தது ..இன்றைக்கு மறுபடியும் அவன் துப்பக்கி எடுத்துக் கொண்டு துரத்துவது , பாட்டிலை எடுத்து அடிப்பது , விரட்டுவது போன்ற செய்ல்பாடுகள் …இந்த வளர்ச்சிக்குள் அந்த உயிர்னங்களின் இடத்தைதான் நாம் அபகரித்துள்ளோம். இந்த நகரமயம் வேறு எப்படி நம்பிக்கைதரும் வகையில் உருமாறும் என்று சொல்வதற்கில்லை.
படைப்பில் மனித துக்கத்தை வலியைப் பகிர்வது , இரக்கம் கொள்வது என்பதற்கப்பால் அதன் பின்னான சமூக கூறுகள், பிரபஞ்ச காரணிகள் நோக்கி தன்னளவில் படைப்பாளி ஒரு ஞானத்தைத் தர வேண்டுமல்லவா.
துயரத்தில் வாழக்கூடிய ஒரு வாழ்க்கை .பசியில் இருக்கும் மனிதன்..அந்த மாதிரியான குடும்பங்கள். எல்லாம் நம் கண்முன்னே இருக்கிறது. அது நமது இரக்க குணத்தில் இருந்து நமது கருணையில் இருந்து அப்படியே கொண்டு வருவது என்பது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்பது கேள்விதான். இந்த சூழல், இந்த மாதிரியான் மனித நிலைகள் மோசமானதுதான். .. அவர்களைப் பற்றி நிறைய கதைகள் எழுதிவிட முடியும். ஆனால் இவ்ற்றைப் பின்னிருந்து இயக்கக்கூடிய பல அலகுகளை நாம் பார்க்கத்தான் வேண்டும். . அதற்கு வேறு மாதிரி கதைகள் எழுதப் பட வேண்டும்.
ஒரு பெரிய காலப் பரப்பில் ஏற்கனவே மனித சமூகம் வாழ்ந்து முடித்த ஒரு காலத்தினுடைய நீட்சிதான் நாம் . உங்களுடைய வாழ் நாளில் நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டு வளர்வது ஒரு பருவம் ..மொத்தக் காலப் பரப்பில் நீங்கள் நிற்கிறீர்கள். ..அந்தக் காலப்பரப்புக்குள் மனித சமூகம் கடந்து வந்த பல தூரங்கள் , பல நிலைகள் கடந்த பின்னாடிதான் நீங்கள் நிற்கிறீர்கள் ., உங்களை அறியாமல் நீங்கள் ஏற்கனவே ஒரு பெரிய கால நீரோட்டத்தின் நீட்சிதான். நவீன சமூகத்தில் இருக்கக்கூடிய கனவுகள் , அதிகாரக் கைப்பற்றல்கள் , மனிதன் தனது சுயத்தை இழந்து நிற்கும் நெருக்கடியான நிலை, அவனுக்கு ஒரு வெளி இல்லை என்பது .. ..ஒட்டுமொத்த சமூகத்துக்குள் இருக்கும் தணிக்கை இதெல்லாம் பேசப்பட வேண்டும் .
இன்றைக்கு எல்லாமே ஒரு தேக்கநிலையில் இருக்கிறது. எண்பது, தொன்னூறுகளில் பேசப்பட்ட பல சொல்லாடல்கள், வியாக்கியானம், தத்துவ மரபுகள் எல்லாமே தேங்கிக்கிடக்கிறது. விமர்சகன் ஒரு தாழிடப்பட்ட அறையில் ரொம்ப வருஷமாக மயக்கமாக இருக்கிறான். இந்தமாதியான இடங்களில், எழுத்தாளன் நிராதரவான சூழலில்தான் இருக்கிறான். இன்னொரு வகையில் அவன் போராளியாக மாறினால் நன்றாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவனும்தான் அதை நினைக்கிறான். ஒரு நூறுபேருக்காகத் தீக்குளிக்க நினைக்கிறான். ஆயிரம்பேருக்காக விஷம் அருந்தி சாக விரும்புகிறான். தண்டவாளத்தில் படுத்துக்கொள்ள விரும்புகிறான். ஆனால் அவன் அதற்கு லாயக்கற்றவன். அவனால் அது முடியாது. அப்போது அவனுடைய அரசியல் பிரக்ஞை என்பது எழுத்தில் சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நடுவில் ஒரு பெரிய ஊடாட்டமாக உள்ளது. அவனுடைய குரல் என்பது சமூகத்தின் ஆற்றாமையின் குரல். அவன் போராளி ஆவதற்கான குரல், போராளியாக மாறவேண்டிய மனிதர்களின் குரல் என அத்தனையும் அதில் இருக்கிறது. ஆனால் அது கம்யூனிஸமாகவோ, தமிழ்தேசியமாகவோ, வேற எந்த ஒரு மூவ்மென்ட்டாகவோ இல்லை. அப்படி அவன் பண்ண விரும்பினாலும் அந்த இடம் பெரும் நகைப்புக்குரியதாக, பழகிய காலத்தினுடைய ரொமாண்டிக்கான ஒப்பாரியாக மாறி அவன் தப்பித்துக்கொள்வான்
ஆனால் காஃப்கா, காம்யூ, சார்த்தர், மார்க்குவெஸ் போன்ற உலக ஆளுமைகள் பலரது கலைப் பிரக்ஞை என்பதே ஒருவித அரசியல் பிரக்ஞையுமானதாகதான் இருந்துள்ளது அல்லவா?
வெளிப்படையாக எல்லோரும் தங்கள் துப்பாக்கியின் கூர்முனைகளை எப்போதும் விழிப்புநிலையில் வைத்திருப்பவர்கள் கிடையாது. மார்க்வெஸோ, போர்ஹேவோ , காப்ஃகா, காம்யு என எவராகயிருக்கட்டும் எல்லோருமே அகவிழிப்பு கொண்டவர்கள். மார்க்வெக்ஸ் பெரிய நகரத்தை, நிலப்பரப்பைப் புனைவாகச் செய்துகாட்டியவர். ஒரு சர்வாதிகாரியிடம் இருக்கும் கோமாளித்தனம் என்ன என்று காட்டுவார். அதேபோல் காம்யு ஒரு ரகசிய தமையில் இந்தச் சமூகம் நம்மை எப்படி பழிவாங்கிகொண்டு இருக்கிறதென்று நமக்கு ஞாபகப்படுத்தியவர். பிறகு போர்கேவுடையது வந்தது. அது மொழியில் ஒருகாலத்திலிருந்து இன்னொருகாலத்துக்கான ஒரு பெரும் தாவல். என்னைப்போன்ற எழுத்தாளர்களெல்லாம் என் பாதைகளிலிருந்து என்மேல் விழுந்தவற்றிலிருந்து தான் நான் எதையும் தொடமுடியும். எழுத்து உலகத்துக்கு எதையும் தரமுடியும். எனக்குள் இல்லாத விஷயத்தை, எனக்கு தட்டுப்படாத விஷயத்தை என்னால் தரமுடியாது. ஆனால் இன்றைக்கு எனக்குத் தெரிந்து ஒரு எழுத்தாளன் பட்டவர்த்தனமாக, தன்னுடைய அடையாளத்தை வைக்கிறான். அது இன்னொருத்தருடைய அடையாளத்தோடு இல்லை. நான் ரொம்ப தனிமையாக இருக்க விரும்புகிறவன். எழுத்தாளன் ஓர் அதிகாரத்தின் குரலாக மாறிடக்கூடாது என்கிற நம்பிக்கையுள்ளவன். நம்முடைய கலை பிரக்ஞை தரும் அடையாளத்தின் மூலமாக நாம் வேற எதையாவது கைப்பற்ற முனைந்தோமென்றால் அதுபோன்ற ஒரு கோமாளித்தனம் எதுவும் கிடையாது.
உலகம் மீதான புகார்களை எல்லா காலத்திலுமே ஒரு படைப்பாளி தனது சமகாலம் என்ற சார்பு நிலையில் இருந்துதானே முன்வைக்கிறான். ஆனால் அதிகார ஊக்கம் என்பது மனிதனின் காலங்காலமான சாராம்சமாகதானே இருந்துவந்துள்ளது. வரலாறு என்பது தொடர்ந்து மனிதன் தனது தீமைகளைத் தகவமைத்து வரும் இடமாகதானே இருந்துள்ளது. உங்கள் கவிதையிலும் சமகாலம் குறித்து ஒரு தனித்த அவநம்பிக்கையும் துக்கமும் இருக்கிறதே. ?
அதிகாரம் என்பது ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் மேல் தனிப்பட்ட ஒவ்வொருவரையுமே பாதிக்கிற ஒரு இடத்தில்தான் நிற்கிறது. இந்த அதிகாரத்துக்கு எதிராக எப்போதுமே ஒடுக்கப்படுகிற மனிதன் குரல்கொடுப்பது அவனது இயல்பு . விசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவது ..ஒட்டுமொத்த மானுட சமூகத்தில் ஒரு பகுதியினர் எதுவும் இல்லாமல் ..வாழ்க்கையினுடைய அழகான பகுதிகளைப் பார்க்க முடியாமல் ஒரு நிர்பந்திக்கப்பட்ட சூழலில் இருப்பது. ஒரு தே நீர் கடையில் நமக்கு தமளரைத் தரும் ஒரு பையன் ஒரு லாட்ஜில் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு வரும் ஒரு பையன் இந்த மாதிரி சிறுவர்கள் ஒரு பக்கம்..அதே போல் பணியாளர்களாக உள்ள பெண்கள் .. இவர்களெல்லாம் தொடர்ந்து பிற வாழிவின் பிற பகுதிகளைத் துய்க்க மறுக்கப்படுகிறார்கள். ஒரு வானம்..அதனுடைய பறவைகள்..வேறு கொண்டாட்டமான சில தருணங்கள் அது எல்லாமே கிடைக்காமல் போகிறது.. இதற்கு எதிரான ஒரு மனோபாவம் எப்போதுமே இருக்கும். இந்த மாதிரியான அமைப்புக்கு எதிரான ஒரு குரல் எப்போதும் ஒலிக்கும் …ஆனால் நீங்கள் சொல்வதுபோல் எப்பொதுமே அதிகாரத்தினுடைய ஒரு நினைவுக்குள் மனிதன் அகப்பட்டிருக்கிறான் என்றால் அது அப்படித்தான்…ஆனால் சமூகம் வளர்ந்து வரும் போது .சில நாடுகளைக் கைப்பற்றுவது ..காலனி நாடுகளை உருவாக்குவது .. அதில் இருக்கும் செல்வங்களை அபகரித்துக்கொள்வது , கலைச்செல்வங்களைப் பறித்துக் கொள்வது என்பதும் இன்னொரு பக்கம் சொந்த தேசமே தன்னுடைய மக்களை சுரண்டுவது என்பதும் இருக்கிரது. இந்த மொத்த அதிகாரப் பரவலுக்குள் பார்த்தீர்க்ளானால் நமது காட்சியில் நிலவு கிடையாது ..பறவைகள் கிடையாது.. பயணங்கள் கிடையாது .. நல்ல ஒரு ஓவியத்தைப் பார்க்க முடியாது .. நல்ல ஒரு இசையை கேட்க முடியாது ..ஒரு கதையை வாசிக்க முடியாது ..கதையைக் கேட்க முடியாது..இதற்கு முன்பாக நாம் நிறுத்தப்படும்போது நாம் என்ன செய்ய முடியும் …படைப்பாளனாக ஒரு அவேசம் எல்லோரையும் விட இன்னும் தூக்கலாகவே வரும் ..அதை அவன் பேச எத்தனிப்பான் ..பேசிக்கொண்டே இருப்பான் .எத்தனைத் தத்துவங்கள் காலாவதியானாலும்…எத்த்னைத் தத்துவ மரபுகள் இது முடியாது என்று கைவிட்டாலும் இது ஒட்டுமொத்தமாக உருமாறும் என்னும் ஒரு கனவுதான்..அந்த கனவுக்குள் ஒரு பெரிய டிராவல் இருக்கத்தான் செய்கிறது …
கோணங்கியுடனான உரையால் குறித்து கூறுங்கள்.. நெடிய நேர்காணலை நீட்சி இதழாக கொண்டு வந்திருந்தீர்கள்…
கோணங்கி எல்லோரிடமும் உரையாடக்கூடியவர் . யாராவது புதிய ஒருவர் எழுத வந்தாலும் அது என்ன என்று கேட்கக்கூடிய இடத்தில் இருப்பார்.. அவருடன் பேசுபவன் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அடைவான். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக நான் கோணங்கியோடு பழகியுள்ளேன். அவருடைய நாவல்கள், சிறுகதைகள், எல்லாம் தமிழில் மிகப் புதிதான வேறொரு இயல்பில் உருவாகி வந்தது மிகவும் மாயமானது. மதினிமார் கதைகள்… அன்னம் வெளியீடாக வருகிறது .. ஜோதி விநாயகத்தின் முன்னுரையோடு வருகிறது. அந்தக் கதைகளுக்குப் பிறகு பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் இரண்டாம் ஜாமம் , சலூன் நாற்காலியில் சுழன்றபடி வந்தன..இந்த மாதிரியான கதைகளுக்குள் அவர் வைத்த நிலங்கள் மிகவும் மேஜிக்காக இருந்தது. ஒரு புதிய …உருமாறிய மொழி.. எல்லாமே ஒரு கனவார்த்தமான நிலப்பரப்பில் அவர் கண்டுபிடிக்கக்கூடிய அருவமான சில இடங்கள் ..அதன் மீதான ஈர்ப்புகளோடுதான் நாம் கோனங்கியை அணுகுகிறோம். எதார்த்தமாக் நம்மோடு பழகும்போது இருகிற கோணங்கிக்கும் …எழுத்தில் உருமாறுகிற கோனங்கிக்கும் நிறைய இடைவெளிகள் உண்டு..அவரை ஒரு பூடகமாகவே பார்ப்பது என்பதும் மொத்த சமூகத்திலும் நிலவும் தணிக்கை என்பதும் உடைக்கப்பட வேண்டும். 90 களில் பௌத்தம் சார்ந்த அறிதல்கள் தூக்கலாக தீவிரமாக அம்பேத்கரியம் சார்ந்து பேசப்பட்டபோது அவருடைய பாழி நாவல் வேறொரு தளத்தில் சமண அடையாளங்களுக்குள் பயணித்தது..சமணக் குகைகளுக்குள் உட்சென்று வரும் வேறொரு மேஜிக்கான புனைவாக அது இருந்தது. பிதிரா நாவலில்..அவர் லண்டன் சென்றபோது மார்க்ஸ் கல்லறைக்குப் போய் பார்த்த சம்பவம்.( அவுட்லுக் ஏ எஸ் பன்னீர்செல்வம் அவரை அனுப்பினார்) ஒரு ஒயினும் பூச்செண்டும் மார்க்ஸ் விரும்பிக் குடிக்கும் சுருட்டும் வாங்கிக்கொண்டு.. முகம் தெரியாத ஒரு போலந்து பெண்ணுடன் சென்று அந்த கல்லறைக்குப் போய் அமர்ந்திருந்த அந்த சம்பவம்..இந்தியாவுக்குள் மார்க்சின் நிழல் எங்கு படிந்துள்ளது என்ற தேடலுடன் அவருக்குள்ளான ஒரு அலைக்கழிப்பு …தெலுங்கானாவுக்கும் கல்கத்தாவுக்குமான ஒரு மந்திரத்தொடுதல் ஏற்பட்டு….சுந்தரையா எழுதிய வீரத்தெலுங்கானாவை அவர் படித்திருந்தாலும் கூட ..அதை வைத்து மட்டும் கதை செய்ய முடியாது எனத் தெரிந்து ..தெலுங்காகனாவுக்கு நேரில் சென்று அங்கு ஒரு மூன்று மாதம் அவர் அலைந்த காலங்கள் ..அந்த காலம் குறித்து அவர் சொன்ன கதைகள். வீரத்தெலுங்கானவுக்குள் தற்கொலை செய்த விவசாயிகளின் சுவடுகளை அவர் தேடிப் போகும்போது …அங்கு ஓடையில் செல்லக்கூடிய கருப்பு வாத்துகள் தற்கொலை செய்த விவசாயிகளின் வீடுகளின் முன்பாக நின்று நின்று சென்றதாகவும் …அந்த ஆவிகளோடு உரையாடிக்கொண்டிருந்ததாகவும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பீப்பிள்ஸ் வாரில் இருந்த ஒரு நக்சல்பாரி தோழர் அவரிடம் சொல்லியிருக்கிறார்.. ”கீழத்தஞ்சையில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் …அங்கேயே சூழல் துயரமாக உள்ளது .. நீ இங்கு வந்து பார்ப்பதை விடவும்..உன்னுடைய நிலத்தில் உள்ளதை முதலில் எழுது” என்று சொல்லியுள்ளார். அதற்குப் பிறகு நக்சல் இயக்கத் தோழர்களெல்லாம் கோணங்கியைக் கூட்டிச் சென்று வேப்பங்கள், ஈச்சங் கள் , தெம்மங்கள் எல்லாம் பல விதமான பானைகளில் கொடுத்து அதற்குப் பிறகு அப்படி ஒரு மன்ச்சூழலில் அவரது நாவல் உருவானது…அவர் சொன்னார்..” மார்க்சைப் பார்க்கும் போது நான் நினைத்தேன்.. எவ்வளவு பெரிய கபாலம் இது ..எத்தனை இலட்சக்கணக்கான மனிதர்களை தூண்டிய தலை இது ..அந்தத் தலையை நான் தொடும்போது..அந்த நிழல் என்னுடைய தேசம் எங்கும் உள்ளது என அறிந்தேன்..” இப்படி ஒரு மூடில் எழுதப்பட்டதுதான் பிதிரா. அதற்குப் பிறகு ’த’ நாவல். அதில் இரண்டாம் சரபோஜி..சரபோஜியின் புறா மாடங்கள்..அந்த மாடங்களில் தேவதாசி மரபில் வந்த பாப்பம்மாள்..அவர்களைப் பின்பறி வந்த பலரும் அதற்குள் இருக்கிறார்கள். அந்த புறா மாடங்களில் மிஸ்டிக்காக ஒரு கதை. சரபோஜி மன்னன் வேட்டையாடிவிட்டு படைத்தளபதிகளோடு களைப்புடன் வந்துகொண்டிருக்கும் போது ..அங்கு சுமைதங்கிக் கல்லில் உடகார்ந்து கொண்டிருக்கும் ஒரு குருடான முதியவரிடம் இங்கு எங்கே தண்ணீர் கிடைக்கும் எனக் கேட்கிறார்.. காற்றை நுட்பமாக அவதானித்தபடி ஒரு திசையைச் காட்டி இந்தப் பக்கம் போனால் நீரூற்று கிடைக்கும் என அந்தப் பார்வையற்ற முதியவர் சொல்கிறார். அவர்கள் அவர் சொல்லியபடியே நீரூற்றை அடைந்து நீரருந்தி விட்டு திரும்பும்போது…அந்த பார்வையற்ற முதியவரிடம் எப்படி நீங்கள் அறிகிறீர்கள் என கேட்கும் போது… காற்றின் வாசனையில் இருந்தே நீரூற்று உள்ள இடத்தை என்னால் அறிய முடியும் என அவர் கூற …சரபோஜி மன்னர் அவரை அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு போய் தனது நூலகத்தின் புத்தகங்களை காண்பிக்கிறார். அதனை அந்த முதியவர் தடவிப் பார்க்கிறார்.புத்தகத்தைத் தொடும் போது அவர் ‘ புறாக்கள்’ என்கிறார். புறாவைத் தொடும்போது புத்தகங்கள் என்கிறார். இந்த மாதிரியான கதைக்குள்… முதிர்ந்த தேவதாசிகள் சதுர் நீக்கம் செய்யப்டுகிறார்கள். பிறகு அவர்களது வேலை காலையில் கிளம்பிச் செல்லும் புறக்களைத் தேடிக்கொண்டு போவதாக மாறுகிறது. காலையில் போன புறாவை அது சாயுங்காலம் தரை இறங்கும் வரை அவர்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கும் அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிற தேவதாசிகள் அலைந்துகொண்டே இருக்கிறார்கள் என்கிற மாதிரி தருண்ங்கள் அதில் வரும். இந்த மாதிரி கதைகளில் , புனைவுகளில் செயல்படக்கூடிய ஒரு மாயம், புதிர்த்தன்மை அது மிகவும் அழகானது. இன்னொன்று அவருடைய உரையாடல்களில் செயல்படும் ஒரு மேஜிக்கான மொழி, அதில் வரும் கதைகள் , அதில் வரும் மனிதர்கள், பொருட்கள், எல்லாம் அருவமானவை ..அதை அவர் சொல்ல கேட்கும்போது ஒரு புதிய வாசகனுக்குப் பல திறப்புகள் உருவாகும் என்ற நோக்கில் தான் அந்த பேட்டி எடுக்கப்பட்டது. அது இன்னும் நெடிய பேட்டி. அதன் ஒரு பகுதிதான் வெளிவந்தது.
உங்கள் சமகாலத்தில் உடனெழுதியவர்கள் , தற்போது எழுதுபவர்கள்..சமகால கவிதை குறித்த உங்கள் மதிப்பீடுகள் குறித்து சொல்லுங்கள் ?
நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பாக பேட்டி தருகிறேன். இந்தத் துறையில் எத்தனையோ பேர் இயங்குகிறார்கள். இந்தத் துறையைப் பொறுத்தமட்டில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. மரணமே கவசம்.சாவுதான் நித்தியத்துவம். ஒருவர் கவிதை எழுதுவதென்பதே மிகவும் முக்கியமானது. தன்னைத் தானே பிரம்மாண்டப் படுத்திக்கொள்வதில் அல்ல. இந்த இருபதாண்டுகளில் சிறுகதை, கவிதை இரண்டுமே முழு வீச்சில் இருக்கிறது. உலகளாவிய கவிதைகள் தமிழில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிறுகதையில் இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும். நாவல்தான் கொஞ்சம் தடையோடு இருக்கிறது. எனது சமகாலத்தில் லக்ஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், கைலாஷ் சிவன், யூமா வாசுகி என எத்தனை பேர். யூமா வாசுகியின் 'தோழமையின் இருள்' அநேகமாக தொன்னூற்றி ஆறில் வந்ததென்று நினைக்கிறேன். அந்த காலத்தில் அதெல்லாம் பெரிய காலடி. நட்சத்திரத்தை நாக்கால் தொடுவது போல. அந்த காலம்! சங்கர்ராமசுப்பிரமணியன், ராணி திலக், ஸ்ரீநேசன், கண்டராதித்தன். நிறைய பெண் கவிஞர்கள் இருக்கின்றனர்.அது போல ரமேஷ் பிரேம். இந்தச் சூழலுக்கு கொஞ்சம் பின்னால் வந்து சேர்ந்த பிரான்சிஸ் கிருபா. அவர்களையெல்லாம் கொண்டாடுகிறேன். அது ஒரு மகத்தான ஸ்பார்க். முதலில் ஒன்று உருவாகிறது. அதைத் தூக்கிகொண்டு வரும் போது ஒவ்வொருவருக்குமான நிறம் வருகிறது. ஞானக்கூத்தனிடமிருக்கும் பாரடி (parady) சங்கரிடம் வேறு விதமாக வெளிப்படுகிறது. கைலாஷின் கவிதைகள் ஒரு அவஸ்தையான மொழி.., தன்னையே தன் வாளால் வெட்டிக்கொண்டிருப்பதைப் போல. பிரான்சிஸ் கிருபாவைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். ரொம்பவும் பேசக்கூடிய ஆள் கிடையாது. எல்லாருடனும் சகஜமாக இருக்கக்கூடியவர்தான். அவர் மீது வந்து விழும் கவிதைகளை அவர் எப்படி பிடித்துக்கொள்கிறார் என்கிற இடம் முக்கியமானது. ஒரு கவிஞன் என்று சொல்ல முடியாது. ஒரு கவிஞனைப் பற்றியோ ஒரு கவிதையைப் பற்றியோ பேசும் போது அது ஒன்றைப் மட்டுமமல்ல ஒரு பிரபஞ்சத்தைத் தொடுகிறோம். பேருக்கு ஒரு பெயரை உதாரணமாக சொல்கிறோம். ஆனால் அது அவர்கள் கிடையாது. அவர்கள் கூட அதை அவர்களாக நினைக்க மாட்டார்கள்.
நீங்கள் கொண்டுவந்த நீட்சி இதழ் குறித்து சொல்லுங்கள். அதன் தலையங்கத்தில் சிறுபத்திரிக்கை மரபு வெகுசன ஊடகங்களால் உள்வாங்கப்படுவது குறித்தும் இலக்கியம் ஒரு கேளிக்கை செயல்பாடாகிவருவது குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தீர்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போல சிற்றிதழ் ஒரு இயக்கமாக அதன் தீவிரத்தன்மை, மாறுபட்ட வேறுபட்ட பலவற்றையும் பேசி வந்திருக்கிறது. பேச முடியாதவற்றையும் கனவின் அரூபங்களையும் பேச முயன்றிருக்கிறது. பொது புத்தியால் இயக்கப்படும் மொத்த உலகத்துக்கு வெளியே சிறுபத்திரிக்கை என்னும் வேட்கை ஒரு தீவிரமான காலடி. சிற்றிதழ்களின் வழி படைப்பு மொழி வேறு வேறு ரூபங்களை தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.
தவிப்பும் தீவிரமும் வேறுபாடும் தான் சிறுபத்திரிக்கையின் அறம். அதற்குள் இன்னொரு எதிர் அறமும் செயல்பட்டு இந்த இதழ்களையெல்லாம் ஏன் நடுவழியில் நிறுத்தியது. சிற்றிதழில் இயங்கிய ஒவ்வொரு விரல்களையும் நான் இப்போது முத்தமிடுகிறேன். அந்த வகையில் ’நீட்சி’யும் ஒரு தொடர்ச்சிதான்.
நமது ஆழங்களில் நாம் மொழியால் மறு ரூபப்பட்டவர்கள். நாம் சிதிலமடைந்துள்ளோம். அதிகாரத்தாலோ பொருட்களாலோ நம்மை நாம் இழக்கமாட்டோம் என்கிற படைப்பெழுச்சிதான் நீட்சி. எல்லா இடங்களிலும் மண்டியிடாதே. கெஞ்சித் திரியாதே. நீ வசீகரிக்கும் மொழியின் மந்திரத் திரைச்சீலையால் போர்த்தப்பட்டவன் வா.. நீ வந்து உன்னுடையதை எழுது என்று சொல்வதுதான் ’நீட்சி’. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது மொழி. அடிமாட்டுக்கு நாம் விலை போக முடியாது. சிற்றிதழ்களின் வழியே பெற்ற மின்னலின் வாளைக் கொண்டுபோய் நாறிப் புளித்த புழுக்கள் ஊறும் மாங்காய்களை வெட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது. நம்மீது நாமே தேனடைகளைப் போட்டுக்கொண்டிருந்தால் , நமது உடலை நாமே ஒரு பிளக்ஸ் பேனராக மாற்றி நடந்தால் நாம் இதுவரை கற்றது எதை என்று கேள்வி உருவாகுமல்லவா.
சிற்பத்திரிக்கையின் தார்மீக அறச்சீற்றத்திலிருந்து வெளியேறிய புனிதர்கள் புளுகு மூடைகளை கெட்டி அட்டையில் விற்கும்போது என்ன தோன்றும். இது கெட்டி அட்டைகளின் காலம். பிரிண்ட் மீடியாவின் அசுர கைகளில் பாவம் நம்மூர் சிறுபத்திரிக்கை எழுத்தாளன் சிக்கினால் அவனுக்கு எது மிஞ்சும். யாருக்கு நல்லது.
எழுத வந்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருவர் மிக முக்கிய எழுத்தாளராக உருவாகி அவர் பெயரில் ஒரு ரசிகர் மன்றம் உருவானால் யாருக்கு நல்லது. சிறுபத்திரிக்கை மனோபாவம் பிரதியெடுக்கப்பட்டு அதன் போலி நகல்கள் வேறு இடங்களை குறித்துவைத்து நகரும்போது எல்லா பிழைகளும் நடந்துவிடும்.
மிகவும் மலிவாக நீங்கள் உங்களை விற்க ஆரம்பித்தால் ஜட்டி கூட மிஞ்சாது. இது போன்ற இடங்களை தோலுரிக்க நிறைய சிறுபத்திரிக்கைகள் தேவைப்படுகின்றன. அங்கீகாரத்துக்காக எச்சில் ஒழுக எழுத்தாளன் அலையக் கூடாது. அங்கீகாரத்துக்குள் செயல்படும் சகல அதிகாரங்களையும் அவன் மறுதலிக்க வேண்டும். எழுதுவது இயற்கையின் அதி உன்னத செயல்பாடு. உங்கள் மூலம் மொழி எதனூடாக வோ இயங்குகிறது. எழுதிய பிறகு புத்தகம் ஆக்குவது இன்னொரு செயல்பாடு. இங்கு எழுத்தாளன் பங்கு முக்கியமானது. அந்த இடத்தில் அவன் தன் ழி இயங்கிய எழுத்தை காலத்தின் முடிவுறாத வெளியில் வீசிவிட்டு மறைந்திருப்பதுதான் நல்லது. நமது சுயத்தின் கண்ணாடியை மேலும் மேலும் உடைக்க வேண்டும். உங்கள் எழுத்துக்கு வலு இருந்தால் உங்களின் பிரத்தியேக மொழிக்கு வலு இருந்தால் காலம் ஒரு நாள் உங்கள் தலையில் விடியக் கூடலாம். அதெல்லாம் அந்தந்த எழுத்தாளனின் ஏற்பாட்டில் நடக்கும் திட்டமிடல்களில் இல்லை என்பதுமே ஒரு வேடிக்கைதான்.